Published:Updated:

"இந்தியாவுக்காக ஆடினோம்!"- ஜாஃபரைச் சுற்றும் சர்ச்சையும் கைஃப், கும்ப்ளே ஆதரவும்... நடந்தது என்ன?

ஜாஃபர் மீது குற்றம்சாட்டியவரான மஹிம் வர்மா பிசிசிஐ-யில் ஜெய் ஷா செயலாளராகவும் கங்குலி தலைவராகவும் பதவியேற்ற போது துணைத்தலைவராக செயல்பட்டவர்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் கருத்துக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தனர். வீரர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பேசி வருகின்றனர். அந்தப் பஞ்சாயத்தே இன்னும் முழுமையாக முடியாதபட்சத்தில் அதற்குள் கிரிக்கெட் உலகம் இன்னொரு பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் மற்றும் ரஞ்சி போட்டிகளில் நீண்ட அனுபவமுள்ள மூத்த வீரரான வாசிம் ஜாஃபர் மீது மதரீதியிலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஜாஃபர் மீது குற்றம்சாட்டியது யார்? என்ன பிரச்னை நடக்கிறது?
வாசிம் ஜாஃபர்
வாசிம் ஜாஃபர்

வாசிம் ஜாஃபர் இந்திய அணிக்காக பெரிய கரியரை கொண்டிருக்காவிட்டாலும் உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய ஜாம்பவான் வீரராகவே வலம் வந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ரஞ்சி போட்டிகளில் ஆடிய பிறகு கடந்த ஆண்டுதான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வுக்குப் பிறகு கடந்த ஜுலையிலிருந்து உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். கடந்த மாதம் கொரோனாவுக்குப் பிறகு முதல் முறையாக முறையாக உள்ளுர் போட்டிகள் தொடங்கின. நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி ட்ராபியில் உத்தரகாண்ட் அணி மோசமாக ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று முதல் சுற்றோடு வெளியேறியிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் வாசிம் ஜாஃபர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையுமில்லை. இதன் பிறகுதான் சர்ச்சைகள் உருவாக தொடங்கின.

உத்தரகாண்ட் கிரிக்கெட் அசோசியேஷனின் செயலாளரான மஹிம் வர்மாவும் அணியின் மேனஜரான நவ்நீத் மிஸ்ராவும் ஜாஃபர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கினர். ஜாஃபர் வீரர்களின் தேர்வில் அவர் மதத்தை சார்ந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். க்வாரன்டீன் விதிமுறைகளின் போது வெளியே இருந்து ஆட்களை அழைத்து வந்து தொழுகையில் ஈடுபடுகிறார். அவருக்கான முழு சுதந்திரம் கொடுத்திருந்தபோதும் எங்களைத் தொடர்ந்து அவமரியாதையாக நடத்துகிறார் என வாசிம் ஜாஃபர் மீது மதரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதற்குப் பதிலளித்துள்ள வாசிம் ஜாஃபர், "என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகத்தீவிரமானவை. இத்தனை ஆண்டுகளாக என்னுடன் கிரிக்கெட் ஆடியவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். அணியின் கேப்டனாக ஜெய் பிஸ்தாவே இருக்கட்டும் என நான் கூறினேன். ஆனால், அசோசியேஷன் சார்பில் இக்பால் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இப்போது நான் இக்பால் அப்துல்லாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல பேசுகிறார்கள். நான் மதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவனாக இருந்தால் இஸ்லாமிய வீரர்களை எல்லா போட்டிகளிலும் ஆடவைத்திருப்பேனே? பயிற்சி உட்பட எங்களின் வேலையெல்லாம் முடித்துவிட்டுதான் தொழுகையில் ஈடுபட்டோம். தொழுகைக்கு இஸ்லாமிய ஸ்காலர்களை மேனேஜரின் அனுமதியோடு இக்பால் அப்துல்லாதான் அழைத்து வந்தார்" என்று கூறியுள்ளார்.

இக்பால் அப்துல்லா
இக்பால் அப்துல்லா

இக்பால் அப்துல்லாவும் தான் மேனேஜரிடம் அனுமதி பெற்றுதான் இஸ்லாமிய ஸ்காலர் ஒருவரை அழைத்து வந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வீரர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டதாகவும் அதற்கு ஜாஃபர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. "ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியது பற்றியெல்லாம் எனக்குத் தெரியவில்லை. சீக்கிய மதம் சார்ந்து சில கோஷங்கள் எழுப்பப்பட்டன. நான் அதற்குப் பதிலாக உத்தரகாண்ட்டை முன்னிலைப்படுத்தும் கோஷங்களை எழுப்பலாமே என்றுதான் சொன்னேன்" என ஜாஃபர் தன் தரப்பு விளக்கத்தை கூறியிருக்கிறார். மேலும், அணித்தேர்வில் அசோசியேஷன் அதிகமாக தலையிடுவதாகவும் திறமையற்ற வீரர்களை முன்னிலைப்படுத்த சொல்வதாகவும், அவர்களின் தவற்றை மறைக்கவே இப்படித் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜாஃபர் மீது குற்றம்சாட்டியவரான மஹிம் வர்மா பிசிசிஐ-யில் ஜெய் ஷா செயலாளராகவும் கங்குலி தலைவராகவும் பதவியேற்ற போது துணைத்தலைவராக செயல்பட்டவர். கடந்த ஆண்டு திடீரென பிசிசிஐ துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீழ்ச்சியில் இருக்கும் உத்தரகாண்ட் அசோசியேஷனை காப்பாற்றப் போவதாகக் கூறி இங்கே வந்து தேர்தலில் நின்று செயலாளரானார்.

உத்தரகாண்ட் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போதிலும் நீண்ட காலமாக அந்த மாநிலத்திற்கென்று கிரிக்கெட் அணியை பிசிசிஐ அங்கீகரிக்காமல் இருந்தது. காரணம், ஒன்றுக்கும் மேற்பட்ட அசோசியேஷன்களை உருவாக்கி வைத்துக்கொண்டு அதிகாரத்துக்கான மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தப் பிரச்னைகள் கொஞ்சம் சுமூகமாக தீர்க்கப்பட்டு உத்தரகாண்ட் அணியும் அசோசியேஷனும் பிசிசிஐ-யால் அங்கீகரிக்கப்பட்டது. மஹிம் வர்மா திடீரென உத்தரகாண்ட்டுக்கு கிளம்பி வந்து தேர்தலில் நின்று செயலாளர் ஆனதற்கும் அதிகார மோதல்கள் காரணமாக இருக்கக்கூடும். உள்ளே நடக்கும் குழப்பங்களையும் குளறுபடிகளையும் மறைக்க இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரரான ஜாஃபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கக்கூடும் என்றே பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

முகமது கைஃப்
முகமது கைஃப்

பிரபல ஊடகவியலாளர்கள், ஜாஃபருடன் ஆடிய ரஞ்சி வீரர்கள் போன்றோர் அவருக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரர்களைப் பொருத்தவரை அனில் கும்ப்ளே, முகமது கைஃப், இர்ஃபான் பதான், மனோஜ் திவாரி போன்ற ஒரு சிலர் மட்டுமே ஜாஃபருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். "ஜாஃபருக்கு இது எவ்வளவு கடினமான தருணமாக இருக்கும் எனப் புரிகிறது. நாங்கள் மதங்களை கடந்துதான் ஆடினோம். கிரிக்கெட்டுக்காக இந்தியாவுக்காக விளையாடினோம்" என கூறும் கைஃபின் குரல் மிக முக்கியமானது.

இந்நிலையில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும், குறிப்பாக ஜாம்பவான்கள் மற்றும் தற்போது விளையாடிவரும் யாரும் ஜாஃபருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கும் ஜாஃபர் ஒன்றும் யாருக்கும் தெரியாத, பழக்கமில்லாத வீரர் இல்லை. கடந்த 25 வருடமாக கிரிக்கெட் ஆடியிருக்கிறார். இந்திய அணியின் அனைத்து கிரிக்கெட் வீரர்களுடனுமே எதோ ஒரு கட்டத்தில் கிரிக்கெட் ஆடியிருப்பார். ஆனால், யாருமே ஒரு வார்த்தைக் கூட ஜாஃபருக்கு ஆதரவாக பேசவில்லை.

ரஹானே
ரஹானே

லாபியில் கில்லாடியான மும்பை கிரிக்கெட் வட்டாரமும் ஜாஃபர் விஷயத்தில் வாய் திறக்கவில்லை. 8 முறை ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணியில் இடம்பிடித்திருக்கிறார் ஜாஃபர். இதில் 2 முறை அவர்தான் அணிக்கு கேப்டனே! ரஹானேவெல்லாம் இவரின் கேப்டன்சியின் கீழ் ஆடியவர். ஆனால், ஜாஃபர் குறித்த கேள்விக்கு, "அந்த விஷயம் பற்றி முழுமையாக தெரியாது. அதனால் கருத்துக்கூற விரும்பவில்லை" என வழக்கமாக அரசியல்வாதிகள் கூறுவது போன்ற ஒரு மழுப்பலான பதிலைக் கூறிவிட்டு சென்றிருக்கிறார் ரஹானே.

ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரருக்குப் பிரச்னை என்ற நிலையிலும் கூட சக கிரிக்கெட் வீரர்கள் யாரும் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு