உத்தரப்பிரதேச மாநிலம், பர்சா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண வர்மாவின் மகன் விவேக். வியாழக்கிழமை மாலை வெளியே விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. அதைத் தொடர்ந்து, பெற்றோர் எங்கு தேடியும் சிறுவன் விவேக்கை காணவில்லை. உடனே விவேக்கின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இந்த நிலையில், விவேக் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை 3 பேரை கைதுசெய்திருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``காணாமல் போன விவேக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், சடலமாக வயலில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அனூப் என்ற உறவினர் இருந்திருக்கிறார்.
அனூப்புக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்தக் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. அந்தக் குழந்தைக்குப் பல்வேறு இடங்களில் சிகிச்சை செய்திருக்கிறார்கள். ஆனால், அது எதுவும் பலனளிக்காததால், அனூப் தன் கிராமத்துக்கு அருகிலுள்ள ஒரு மந்திரவாதியை அணுகியிருக்கிறார்.

அந்த மந்திரவாதி நரபலி கொடுத்தால் குழந்தைக்கு நோய் குணமாகும் என்று தெரிவித்திருக்கிறார். அதை நம்பிய அனூப், சிறுவனின் மாமாவான சிந்தாரத்துடன் சேர்ந்து, விவேக்கை அழைத்து வந்து மண்வெட்டியால் சிறுவனின் கழுத்தை வெட்டி கொலைசெய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அனூப், சிந்தாரம், மந்திரவாதி ஆகிய மூவரையும் கைதுசெய்திருக்கிறோம். குற்றவாளிகள்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.