Published:Updated:

'காவல் துறை அதிகாரிகளும் கண்ணீர் வடித்தார்கள்!'

'காவல் துறை அதிகாரிகளும் கண்ணீர் வடித்தார்கள்!'

ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருந்தபோது அவரைப் பார்க்க வந்த அமைச்சர்கள் தொடங்கி, கட்சி நிர்வாகிகள் வரை எல்லோரையும் கர்நாடக காவல் துறை தடுத்து நிறுத்தியது. அப்போது அவர்கள் ஒவ்வொருவருமே சொன்னது, 'நம்ம புகழேந்தியைக் கூப்பிட்டு சொல்லச் சொல்லுங்க...’ என்பதுதான்!

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதல், அவர் அங்கிருந்து கிளம்பிய அக்டோபர் 18-ம் தேதி வரை பெங்களூரில் அ.தி.மு.க-வின் ஒவ்வோர் அசைவும் இவரைச் சுற்றியே இருந்தது. கோர்ட், ஜெயில், ஏர்போர்ட், அமைச்சர்கள் தங்கியிருந்த ஹோட்டல் என அனைத்து இடங்களிலும் எல்லா ஏற்பாடுகளையும் இவர்தான் கவனித்தார். ஜெயலலிதா ஜாமீனுக்கு ஷ்யூரிட்டி கொடுத்தது புகழேந்தியின் மனைவி குணஜோதி. இவர் தற்போது கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார்.

'காவல் துறை அதிகாரிகளும் கண்ணீர் வடித்தார்கள்!'

ஜெயலலிதா ரிலீஸ் ஆன அன்று கர்நாடக காவல் துறையின் வாகனத்தில் அமர்ந்தபடி மைக்கில், ''அம்மா நன்றாக இருக்கிறார். பத்திரமாக விரைவில்  வெளியே வருவார். நாம் எல்லோருமே அம்மாவைக் காணலாம். அதுவரை நம் தொண்டர்கள் அனைவரும் அமைதியாக போக்குவரத்துக்கு எந்த ஓர் இடையூறும் இல்லாமல், அம்மாவின் ஆணையை ஏற்று செயல்பட வேண்டும்'' என்று பேசியபடியே புகழேந்தி வலம் வந்தார். ஜெயலலிதா சென்னைக்குக் கிளம்பிய பிறகு, புகழேந்தியை ஓரம் கட்டினோம்.

''அம்மாவுக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பார்த்து தாங்கிக்கொள்ள முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. மாலுமி இல்லாத கப்பலைப்போல திசைகள் தெரியாமல் திக்கு முக்காடிவிட்டோம். இந்த கர்நாடக மண்ணில் அம்மாவுக்கு வெற்றித் தீர்ப்புதான் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம்.  

அதேசமயம், உச்ச நீதிமன்றத்தின் ஆணை எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. நாங்கள் தெய்வமாக அனுதினமும் வணங்கும் எங்கள் தாய், சீறுகொண்ட சிங்கமாகக் கிளம்பி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றபோது ஆனந்தக்கண்ணீர் வந்தது. 22 நாட்கள் அம்மாவோடு இருந்த உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என எல்லோரும் கலங்கினர். அவர்களுக்கு இந்த உச்ச நீதிமன்ற ஆணை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று வரை தாடியோடு சோகமாக இருந்த அம்மாவின் நேரடி உதவியாளர் பூங்குன்றன் முகத்திலும், முத்துச்சாமி, வீரப்பெருமாள், பெருமாள்சாமி, கனகராஜ் மற்றும் அமைச்சர்கள் அனைவரின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. அந்த நாளை எங்கள் வாழ்க்கையில் பொன்னாளாகவே கருதுகிறோம்.''

'காவல் துறை அதிகாரிகளும் கண்ணீர் வடித்தார்கள்!'

''ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே போகிறார் என்றாலே, ஏற்பாடுகளைக் கவனிக்க மாவட்டச் செயலாளர்கள் ரொம்பவே சிரமப்படுவார்கள். 22 நாட்களை எப்படிச் சமாளித்தீர்கள்?''

''வேலைப்பளு பற்றியோ, தூக்கத்தைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படவில்லை. அம்மாவை சென்னைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே எனக்கு இருந்தது. அம்மாவுக்காக உழைப்பது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். நான் எத்தனை பிறவி எடுத்தாலும் அம்மாவுக்குத் தொண்டு செய்யக் கூடியவனாக மட்டுமே பிறக்க வேண்டும். அதுதான், எனது லட்சியம். அதனால் வேலைப்பளு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. பரப்பன அக்ரஹாரா முதல் ஹெச்.ஏ.எல் விமான நிலையம் வரை 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு கன்னட மக்களும் திரண்டு நின்று மலர்கள் தூவி அம்மாவை வழி அனுப்பிவைத்தனர். நாங்கள் யாரையும் அழைக்கவில்லை.''

''பெங்களூருக்கு வந்த உங்க கட்சிக்காரர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்கூட தர்ணா போராட்டம் செய்திருக்கிறார்களே?''

''அம்மா மீது தீவிர அன்பு கொண்ட மக்கள் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் இருந்து வந்தார்கள். குறிப்பாக மும்பையில் இருந்தும் டெல்லியில் இருந்தும் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு வந்தார்கள். சிறை வளாகத்தின் முன்பு மிகுந்த எழுச்சியும், ஆரவாரமுமாக இருந்தது. தெருவில் மக்கள் உருண்டு, புரண்டு அழுவதைப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்த இடத்திலும் கர்நாடக மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பாதிக்காமல் அம்மாவின் ஆணையை ஏற்று அமைதியாகவே தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்தினார்கள்.''  

''தமிழக அமைச்சர்களைக்கூட விட்டுவைக்காமல் கர்நாடக காவல் துறை தொந்தரவு செய்ததாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவித்து இருக்கிறீர்களே?''

''நாங்களும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை. அவர்களும் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்ததோடு அம்மாவின் மீது அவர்களுக்கு ஆழ்ந்த அன்பும், பற்றும் இருந்ததால், அம்மாவை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பிவைத்தனர். கர்நாடக காவல் துறைக்கு நன்றி சொல்வது நமது மரபு என்பதால், அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். அம்மா ஜாமீனில் விடுதலை பெற்றுச் செல்லும்போது, கர்நாடக போலீஸாரும் கண்ணீர் வடித்தார்கள் என்பதுதான் உண்மை.''

''இந்த 22 நாட்களில் உங்களால் மறக்க முடியாத அனுபவம் என்ன?''

''அம்மா, பெங்களூருவை விட்டு கிளம்பும்போது கர்நாடக அ.தி.மு.க நிர்வாகிகளும், என் குடும்பத்தாரும் விமான நிலையம் முன்பு அம்மாவின் காருக்கு மலர் தூவியபடி நின்றோம். என் குடும்பத்தினரைப் பார்த்து அம்மா, அன்புடன் சிரித்தார்கள். அதை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன். இதுவே எனக்கும் என் குடும்பத்துக்கும் கிடைத்த நினைவுப் பொக்கிஷமாக கருதுகிறோம்!''

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி