மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர் - 13

குற்றம் புரிந்தவர்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றம் புரிந்தவர் ( சுபா )

வெட்டி வீசப்பட்ட வாலிபம்..!

குற்றம் புரிந்தவர் - 13

கிறங்கடிக்கும் அழகி. கனவுகள் வளர்த்த நட்சத்திரம். அனுபவம் இல்லாத விடலைப் பெண். திட்டமிடும் சாகசக்காரி. நிம்மதியற்ற ஆத்மா.

அமெரிக்காவைச் சேர்ந்த எலிஸபெத் ஷார்ட் [Elizabeth Short], 60 வருடங்களாக செய்திகளில் இப்படி  வெவ்வேறு விதமாகச் சித்திரிக்கப்படுகிறாள். ஆனால், உண்மை என்னவென்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் சரித்திரத்தின் வன்முறைப் பக்கங்களில் உலராத ஒரு கறையாகப் படிந்தவள், எலிஸபெத்.

1947. ஜனவரி 15. ஓர் இளம் தாய், லாஸ் ஏஞ்சல்ஸின் நகர வீதியோரம் மூன்று வயது மகளுடன் கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தாள். தற்செயலாகப் பக்கத்தில் இருந்த புதரில் அவள் பார்வை விழுந்தது. முதல் பார்வையில், துணிக்கடை பொம்மை இரண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டதாகவே அவளுக்குத் தோன்றியது. நின்று உன்னிப்பாகப் பார்த்ததும், நெஞ்சில் தீப்பிடித்தது. அவசரமாகத் தன் குழந்தையின் கண்களை மூடினாள். அருகிலிருந்த வீட்டுக்கு, குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினாள். பதற்றமும், மூச்சிரைப்புமாகக் காவல் துறைக்கு போன் செய்தாள்.    

காவல் துறையினர் வந்து சேர்ந்தபோது, பத்திரிகையாளர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் அந்த இடத்தில் அலைமோதிக்கொண்டிருந்தனர். கொலையாளி விட்டுச் சென்றிருக்கக்கூடிய முக்கியமான தடயங்கள் எல்லாம் அவர்களுடைய தள்ளுமுள்ளுவில் கலைந்தன.

கண்ட காட்சி காவலர்களையே அதிரடித்தது.

இடுப்புக்குக் கீழ் தனியாகவும், ஓரடி இடைவெளியில் இடுப்புக்கு மேல் தனியாகவும் இரண்டு பகுதிகளாக அவள் புல்தரையில் கிடந்தாள். ஆடைகள் அற்ற உடல். இரண்டு கைகளும் தலைக்கு மேலே 'ப’ போல் மடங்கியிருந்தன. வாயோரத்திலிருந்து காது வரை இரு கன்னங்களும் கோரமாகக் கிழிக்கப்பட்டிருந்தன. வெட்டப்பட்ட உடலிலோ, புல்தரையிலோ துளி ரத்தக்கறைகூட இல்லை.

வேறு எங்கோ கொல்லப்பட்டு அவளுடைய உடல் அங்கே கொண்டுவந்து வீசப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட பின், ரத்தம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, அவளுடைய உடல் சுத்தமாகக் கழுவப்பட்டிருந்தது.

கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதற்கு முன், கொலையுண்டது யார் என்று கண்டுபிடிக்கும் வேலை போலீஸுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

40 போலீஸ் ஆபீஸர்கள் அக்கம் பக்கத்தை சல்லடை போட்டு சலித்தார்கள். வீடு வீடாக ஏறிச் சென்று, சாட்சிகளோ தடயங்களோ கிடைக்குமா என்று அலசினார்கள். சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் ரத்தம் தோய்ந்த துணி ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். குடியிருப்புகளில் இருந்தவர்களைக் கேள்விகளால் துளைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த ஆதாரங்களோ, தடயங்களோ கிடைக்கவில்லை.

'உடலின் இரண்டு பகுதிகளையும் இணைத்தால், இந்தப் பெண் ஐந்தரை அடி உயரம் இருப்பாள். சுமார் 50 கிலோ எடை. பழுப்பு நிறத் தலைமுடியில் மருதாணிகொண்டு சாயம் ஏற்றப்பட்டிருக்கிறது. விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவள். மண்டையில் பலமாகத் தாக்கப்பட்டதில் உள்ளே ரத்த நாளங்கள் வெடித்து அவளுடைய மரணம் நிகழ்ந்திருக்கிறது' என்று தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

நல்லவேளை கைவிரல்களின் ரேகைகள் சிதைக்கப்படாமல் இருந்தன. திஙிமி தங்களிடம் இருந்த பல மில்லியன் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.

குற்றம் புரிந்தவர் - 13

'அனுமதிக்கப்பட்ட வயதுக்கு முன்பாக மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ரேகைகளுடன் இது ஒத்துப்போகிறது. இறந்துபோனவள் எலிஸபெத் ஷார்ட்' என்று அடையாளம் சொன்னது, எஃப்.பி.ஐ. தவிர, ராணுவத்தின் அஞ்சல் துறையில் பணிபுரிவதற்காக அவள் விண்ணப்பித்தபோதும், அவளுடைய விரல்ரேகைகள் அரசாங்க ரெக்கார்டுகளில் பதிவாகியிருந்தன. விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த அவளுடைய புகைப்படத்தை எஃப்.பி.ஐ வெளியிட்டது.

பத்திரிகையாளர்களின் வாய்கள் பிளந்தன. 22 வயதே ஆன எலிஸபெத் பேரழகு கொண்டிருந்தாள்.

செக்ஸ், பேரழகு, வன்முறை  'கவர்ச்சி மிக்க ஒரு நாயகியைச் சுற்றி செய்திகளைப் பின்னப்போகிறோம். மற்றவர்களை நாம் முந்திக்கொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் பெரும் உற்சாகத்தையும், போட்டியுணர்வையும் கொடுத்தன.

லிஷீs கிஸீரீமீறீமீs ணிஜ்ணீனீவீஸீமீக்ஷீ என்ற பத்திரிகையின் நிருபர்கள் செய்திகளில் சுவாரஸ்யம் ஊட்டுவதற்காக, சற்றுத் தரம் தாழ்ந்து, மிகத் தவறான ஓர் அணுகுமுறையைக் கையாண்டார்கள். அந்தப் பத்திரிகையின் நிருபர் எலிஸபெத்தின் தாய்க்கு போன் செய்தார்.

'வாழ்த்துகள். உங்கள் மகள் எலிஸபெத்துக்கு அழகிப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அவளைப் பற்றிய செய்தியை வெளியிட விரும்புகிறோம்.. அவளைப் பற்றிச் சொல்லுங்கள்..' என்றார்.

உடனடியாக மகளிடம் பேசி செய்தியைச் சரிபார்த்துக்கொள்ள வசதியில்லாத காலம். எலிஸபெத்தின் தாய் அவளைப் பற்றி பல விவரங்களை அப்பாவித்தனமாக அந்தப் பத்திரிகையாளருக்குக் கொடுத்தாள். தங்களுக்குத் தேவையான அத்தனை விவரங்களையும் வாங்கிக் கொண்ட பிறகுதான், அவளுடைய மகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விஷயத்தை அவளுக்கு அவர் சொன்னார்.

அந்தத் தாய் தன் கோபத்தைத் தெரிவித்தபோது, நிருபர் அடுத்த அஸ்திரத்தை வீசினார்.

'தவறுதான். பிராயச்சித்தமாக, நீங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வருவதற்கு உங்களுக்கு விமானக் கட்டணம் கொடுக்கிறோம். இங்கு நீங்கள் தங்கும் செலவு எங்களுடையது. இங்கிருந்துகொண்டு, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம்..'

எலிஸபெத்தின் தாய் சமாதானமானாள். உண்மையில் மற்ற எந்தப் பத்திரிகையாளர்களோ, போலீஸாரோ அவளைத் தொடர்புகொள்ள வேண்டுமானால், தங்களைக் கடந்துதான் செய்யவேண்டும் என்பதற்காகவே அந்தப் பத்திரிகை அவ்வாறு செய்தது.

அழகி என்று குறிப்பிடப்படுவதற்கு என்னென்ன வளைவுகள் தேவையோ அவ்வளவும் எலிஸபெத்திடம் குறைவற்றுக் குவிந்திருந்தன. மருதாணி சிவப்பு பூசப்பட்ட தலைமுடி. அடர் சிவப்பு லிப்ஸ்டிக். கூந்தலில் செருகப்பட்ட வெள்ளை மலர்கள். பளிங்கு போன்ற சருமம். மயக்கும் வெளிர் நீல விழிகள். முகத்துக்குக் கூடுதல் அழகு சேர்க்க, சற்றே அண்ணாந்த நாசி.

அவளுடைய பெற்றோருக்குப் பிறந்த ஐந்து மகள்களில் எலிஸபெத்தும் ஒருத்தி. தந்தை க்ளியோ, தொழிலில் தோற்று திடீரென்று ஒரு நாள் காணாமல் போனார்.

க்ளியோ அவர்களை உதறிவிட்டுப் போன பிறகு, அந்தக் குடும்பம் ஒரு சிறிய போர்ஷனுக்கு இடம் பெயர்ந்தது. ஐந்து மகள்களையும் முன்னுக்குக் கொண்டுவர, அவர்களின் தாய், கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். 16 வயதிலிருந்து எலிஸபெத்துக்கு மூச்சிரைப்பு, ஆஸ்துமா தொந்தரவுகள் உண்டு. உணவு விடுதிகளில் அவள் பகுதி நேரப் பணிகள் செய்ததுண்டு.

சிறு வயதிலிருந்தே எலிஸபெத்துக்கு ஹாலிவுட்டில் பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்று கனவு இருந்தது. அவர்களை உதறிவிட்டுப் போன தந்தை க்ளியோ, சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் இருப்பதாக செய்தி கிடைத்தது. தந்தை இருந்த இடத்துக்கு அருகில் ஹாலிவுட் இருந்ததால், தன்  19வது வயதில் அவருடன் வாழ்வதற்காக எலிஸபெத் இடம்பெயர்ந்தாள்.

பல வருடங்களுக்குப் பிறகு, தந்தையும் மகளும் இணைந்தனர். ஒற்றை ஆணாக இருந்த க்ளியோ, தன் மகள் தனக்குச் சமைத்துப் போட்டு, துணிகளைத் துவைத்து, வீட்டை ஒழுங்காகப் பராமரித்துப் பார்த்துக்கொள்வாள் என்று எதிர்பார்த்தார். ஆனால், எலிஸபெத்தின் கனவுகள் வேறு. சிறு சிறு வேலைகள் செய்வதில் அவளுக்கு ஒருபோதும் விருப்பம் இருந்ததில்லை. சுதந்திரப் பறவையாக அலைய விரும்பினாள். ஒரே கூரைக்குக் கீழ் வாழ்ந்தாலும் தந்தை  மகளாக இல்லாமல், இரண்டு அந்நியர்களாகவே அவர்கள் வாழ்ந்தார்கள்.

இந்தச் சமயத்தில்தான் ராணுவத்தின் அஞ்சல் பிரிவில் அவள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ராணுவ முகாம்களில் இந்தப் பேரெழில் ஒயிலாக நடந்துபோனபோது, குடும்பத்தைப் பிரிந்து, பல காலம் பெண் வாடையற்று வாடியிருந்த இளம் சிப்பாய்கள் பெருமூச்செறிந்தனர். எப்படியாவது அவளுடைய கவனத்தைக் கவர்ந்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தனர்.

'ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் அத்தனை அம்சங்களும் உன்னிடம் இருக்கின்றன..' என்று அவர்கள் குறையில்லாமல் புகழ்ந்து தள்ளியபோது, எலிஸபெத் மகிழ்ந்துபோனாள். ராணுவ வீரர்களிடம் தாராளமாகவே நடந்துகொண்டாள்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட வயதுக்கு முன்பாகவே மது அருந்தி காவலர்களிடம் அவள் சிக்கியதும், அந்த வேலை பறிபோனது.

அடுத்த இரண்டு வருடங்கள் எலிஸபெத், எங்கும் நிலைக்காமல் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தாள். எங்கே போனாலும், உணவு விடுதியில் அவளுக்கு உடனடியாக வேலை கொடுக்கப்பட்டது. அவளுடைய அழகு, பல வாடிக்கையாளர்களை இழுத்து வரும் என்ற நம்பிக்கையே காரணம்.

தன்னுடைய அழகு காண்பவரைக் கட்டிப் போடுகிறது என்ற கர்வம், எலிஸபெத்துக்கு எப்போதுமே உண்டு. உழைத்துச் சம்பாதிக்காமலேயே தேவையானவை எல்லாம் அவளுக்கு சிறு புன்னகைகளிலும், சற்று தாராளமான தொடுகைகளிலும் கிடைத்துவிடும் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

வாழ்க்கையை எந்தக் குறையுமின்றி முழுமையாக வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்ற அவளுடைய இச்சை, இரவு விடுதிகளுக்கு அவளை இழுத்துப் போனது. அதிரும் இசை, கட்டுப்பாடற்ற சூழல், தவிக்கும் ஆண்களின் தனிமை எல்லாமே அவளை ஈர்த்தன. அவளாக விரும்பினாலன்றி, ஒருபோதும் அவள் தனித்து விடப்பட்டதில்லை – இரண்டாக வெட்டப்பட்டு வீசப்படும் வரை.  

இப்படி கொள்ளை கொள்ளையாக விவரங்கள் கிடைத்தனவே தவிர, எலிஸபெத்தின் கொலையாளி யார் என்று புரியாமலேயே போலீஸ் தவித்தது.

செய்தித்தாள்களில் எலிஸபெத்தின் மரணம் பரபரப்பானபோது, அவளுடைய ஆண் தோழர்கள் என்று சொல்லிக்கொண்டு பலரும் தாமாக முன்வந்தார்கள். செய்திகளில் அடிக்கடி தங்கள் பெயரும் அடிபட வேண்டும் என்ற நப்பாசையுடன் வந்தவர்களே அதிகம் என்று போலீஸ் விரைவில் உணர்ந்தது.

இந்த நிலையில்...

உடல் கண்டெடுக்கப்பட்ட எட்டாவது நாள், லாஸ் ஏஞ்சல்ஸ் எக்ஸாமினர் பத்திரிகைக்கு ஒரு போன் வந்தது.

'எலிஸபெத் பற்றிய செய்திகளை நிறுத்தாமல் வெளியிடுங்கள். அவளுடன் தொடர்புள்ள சில பொருட்களை நாளைக்கே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..' என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளாமலேயே தொடர்பைத் துண்டித்தான், போன் பேசியவன்.  

வழக்கு புதிய திருப்பத்தைக் காணப் போகிறது என்று அனைவரும் ஆர்வமாயினர்.

தொடர்ச்சி அடுத்த இதழில்..

- குற்றம் தொடரும்