சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பார்க்கில் காதலியைச் சரமாரியாகக் கத்தியால் குத்திய காதலன், தானும் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழவரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 23 வயதாகும் இவர் கோவையில் பணியாற்றுகிறார். இவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த நிவேதாவும் காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர், தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். இவர்கள் இருவரும் இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள டவர் பார்க்குக்கு வந்தனர். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேஷ், திடீரென நிவேதாவைக் கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். அடுத்து, ராஜேஷும் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டார்.
மதியம் நேரம் என்பதால் பார்க்கில் கூட்டம் குறைவாகவே இருந்தது. நிவேதாவின் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். எதற்காக ராஜேஷ், கத்தியால் குத்தினார் என்ற விவரம் தெரியவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ராஜேஷ், நிவேதா ஆகியோர் பள்ளி பருவத்திலிருந்தே பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், நிவேதா, நம்முடைய காதலை இத்துடன் முடித்துக் கொள்வோம் என்று ராஜேஷிடம் தெரிவித்துள்ளார். அதற்காக, கோவையிலிருந்து ராஜேஷ் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது, கத்தியையும் அவர் வாங்கிவந்துள்ளார். இருவரும் அண்ணாநகர் டவர் பார்க்கில் பேசினர். அப்போது நடந்த தகராறில்தான் நிவேதா கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதில் நிவேதாவுக்கு மார்பு, தோள்பட்டை, வயிறு ஆகிய பகுதிகளில் ஆறு கத்திக்குத்து காயங்கள் உள்ளன. நிவேதாவைக் கத்தியால் குத்தியபிறகு ராஜேஷ், தன்னுடைய தொண்டையில் கத்தியால் குத்தியிருக்கிறார். அதன்பிறகு மார்பு, வயிறு பகுதியில் குத்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இருவரும் தனித்தனியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.