
பெண்ணை மிரட்டிய கால் டாக்ஸி டிரைவர்
தலைநகர் சென்னையில் சுவாதி படுகொலையும், திருடனை விரட்டியதால் நந்தினி உயிரிழந்த சம்பவமும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை விதைத்துள்ள நிலையில், சென்னை நகரப் பெண்களிடம் மேலும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கடந்த 9-ம் தேதி சென்னை திருவான்மியூரில் இருந்து வளசரவாக்கம் செல்வதற்காக வாடகை காரில் பயணம் செய்தார் ஒரு பெண். காரை டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அதை ஆட்சேபித்தபோது, டிரைவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ‘கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிடுவேன்’ என்று அந்தப் பெண்ணை டிரைவர் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, இதுபற்றிப் புகார் கொடுக்கச் சென்ற அந்தப் பெண்ணை போலீஸார் அலைக்கழித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் விலாசினி ரமணி. என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டோம்.

“திருவான்மியூரில் இருந்து வளசரவாக்கத்துக்குக் கடந்த 9-ம் தேதி ஒரு வாடகை காரில் பயணம் செய்தேன். காரை அதிவேகத்தில் டிரைவர் ஓட்டிச் சென்றார். ‘ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள். மெதுவாகச் செல்லுங்கள்’ என்று சொன்னேன். அதை அவர் பொருட்படுத்தாமல் வேகமாகவே சென்றார். ‘மெதுவாகச் செல்லுங்கள்’ என்று மீண்டும் சொன்னபோது, ‘பிடிக்கவில்லை என்றால் காரில் இருந்து இறங்கு’ என ஒருமையில் கோபமாகத் திட்டினார். உடனே காரில் இருந்து இறங்கி, அண்ணா பல்கலைக்கழகம் அருகே நின்றேன். அந்த டிரைவரும் அங்கேயே நின்றார். சிறிது நேரத்தில் அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஏற முயன்றபோது, அந்த கார் டிரைவர் அருகில் வந்து, ‘பணத்தை எவ குடுப்பா?’ என்று கேட்டார். ‘நீதானே என்னை காரில் இருந்து இறக்கிவிட்டாய். எனவே, அதைப்பற்றி உன்னிடம் பேச முடியாது. ஓலா நிர்வாகத்திடம் பேசிவிட்டேன். நீ அவர்களிடம் பேசிக்கொள்’ என்று சொன்னேன். அதற்கு கையை முறுக்கிக் கொண்டு, ‘கழுத்தை அறுத்துவிடுவேன்’ என்று மிரட்டினார். நான் மிகவும் பயந்துவிட்டேன். நல்ல இருட்டு வேறு. அந்த நபர் ஆயுதம் ஏதாவது வைத்திருக்கலாம் என்ற பயம் வேறு. உடனே, ஆட்டோ டிரைவரைப் பார்த்து, ‘வண்டியை எடுங்கள்’ என்று அவசரப்படுத்தினேன்.
‘வழியில் எங்காவது போலீஸ் ரோந்து வாகனம் இருந்தால் நிறுத்துங்கள்’ என்று ஆட்டோ டிரைவரிடம் சொன்னேன். ஆனால், ஒரு ரோந்து வாகனம்கூட கண்ணில்படவில்லை. கடைசியாக, ராமாபுரத்தில் ஒரு அவுட்போஸ்ட்டில் சில போலீஸாரைப் பார்தேன். அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர்கள் சொன்னார்கள். நந்தம்பாக்கம் காவல் நிலையம் சென்றேன். ஆனால் அங்கிருந்த போலீஸார், ‘இது எங்கள் சரகத்துக்கு உட்பட்டது அல்ல... நீங்கள் கிண்டி காவல் நிலையத்துக்குச் செல்லுங்கள்’ என்றார்கள். கிண்டி செல்ல எனக்குப் பயமாக உள்ளது என்று தயங்கினேன். பிறகு, ஒரு காவலரை எனக்குத் துணையாக வளசரவாக்கத்துக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்” என்றார்.

‘கழுத்தை அறுத்துவிடுவேன்’ என்று ஒருவர் மிரட்டியதை அடுத்து உயிர் பயத்துடன், அதுவும் இரவு 10 மணிக்கு மேல், புகார் தர வரும் ஒரு பெண்ணிடம் இருந்து புகாரை வாங்கி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பிய போலீஸாரின் செயலை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கண்டித்து உள்ளனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட டிரைவர் மீது அந்த வாடகைகார் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நாகசைலாவிடம் பேசினோம்.
“இரவு 10 மணிக்கு மேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். அந்தப் புகாரைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குப் பின்னர் இவர்கள் அனுப்பிவைக்கலாம். குற்றவாளிகள் தப்பிக்காதவாறு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பது குறித்து காவல் துறைதான் விசாரணை நடத்த வேண்டும். வாடகை கார் டிரைவர்களை வேலைக்குச் சேர்க்கும் முன்பாக, அவர்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழை அந்த கார் நிறுவனம் வாங்க வேண்டும். அதுபோன்ற சான்று வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணே, காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வாடகை கார் நிறுவனமே போலீஸில் புகார் அளிக்க வேண்டும். அந்த வழக்கையும் தனியார் வாகன நிறுவனமே நடத்த வேண்டும். ஆனால், விலாசினி ரமணி பிரச்னையில் அந்த வாடகை கார் நிறுவனம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அந்த நிறுவனமே குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. எனவே, குற்றம் சுமத்தப்பட்டுள்ள டிரைவருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அந்த வாடகை கார் நிறுவனத்தின் மீதே வழக்குத் தொடரலாம்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் சங்கரிடம் பேசினோம். “இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புகாரை வாங்காமல் அலைக்கழித்த காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இதுபோன்ற புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களையும் அறிவுறுத்தி உள்ளோம். மேலும், அனைத்துத் தனியார் வாகன நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்குச் சில வழிகாட்டுதல்களை வழங்க உள்ளோம். காவல் துறையிடம் நன்னடத்தைச் சான்று பெற்ற டிரைவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். தொடர்ந்து இந்தத் தனியார் வாகன நிறுவனங்கள் தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளன” என்றார்.
பாதிக்கப்பட்ட விலாசினி ரமணி, அந்தத் தனியார் வாடகை கார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தபோது, ‘மெயில் அனுப்புங்கள்’ என்று பதில் வந்துள்ளது. இவரும் மெயில் அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு, அந்த நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. நாமும் அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய வாடிக்கையாளர் சேவைப் பிரிவு ஊழியர், “இந்தப் பிரச்னையை அதற்கான துறையிடம் எடுத்துச் செல்கிறோம்” என்று சொன்னார். மேலும், இதுகுறித்து ஒரு மெயில் ஒன்றை அனுப்பச் சொன்னார். அனுப்பிவிட்டு, மீண்டும் ஒருமுறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது பேசிய பெண் ஊழியர், ‘‘உங்களுடைய தொடர்பு எண்ணைக் கொடுங்கள். எங்களது டீமில் இருந்து தொடர்புகொள்வார்கள்’’ என்றார். இதுவரை தொடர்புகொள்ளவில்லை.
இவர்கள் சேவை செய்யும் லட்சணம் இதுதான்!
- கே.புவனேஸ்வரி
படம்: மீ.நிவேதன்