
டாஸ்மாக் ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூல்!

“படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்’’ என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்ததும் முதல் கட்டமாக 500 கடைகளை மூட உத்தரவிட்டார். மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதாகக் கூறி டாஸ்மாக் உயர் அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகப் பகீர் புகார் கிளம்பியிருக்கிறது.
கடை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்டம்தோறும் போராட் டங்களை நடத்தி வருகிறார்கள். மாற்றுப்பணிகள் குறித்து தெளிவான வரையறை வகுக்க வேண்டும், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க வேண்டும் எனப் பல தரப்பட்டக் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் டாஸ்மாக் கடை ஊழியர்கள். பாதிக்கப்பட்ட சிலரிடம் பேசினோம்.
‘‘நான் கடந்த 13 ஆண்டுகளாக சேல்ஸ்மேனாக வேலைபார்த்து வந்தேன். தற்போது அந்தக் கடையை மூடிவிட்டார்கள். எனக்கான மாற்று வேலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு டாஸ்மாக் அலுவலகப் பணிகளுக்கு ஊழியர்களை நியமித்து வருகிறார்கள். அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்’’ என்றார் மதுரையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர்.
“நான் வேலை பார்த்த கடையில் விற்பனை மந்தமாக இருந்தது. அதன் காரணமாகத்தான் கடையை மூடி இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் 43 கடைகளை மூடி இருக்கிறார்கள். அதில் இருந்த 150 ஊழியர்களும் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு உடனடியாக மாற்றுப்பணி வழங்க வேண்டும்” என்றார் சிவகங்கையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்.
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் திருச்செல்வனிடம் பேசினோம். ‘‘தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி கடைகளின் நேரத்தை மாற்றியும், 500 கடைகளை மூடவும் உத்தரவிட்டார் முதல்வர். இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. 2003-ம் ஆண்டு டாஸ்மாக் சில்லறை விற்பனையை அரசு தொடங்கியபோது சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 27,000 பேர் பணிபுரிகிறார்கள். இந்த நிலையில் 500 கடைகள் மூடப்பட்டதால் 1,500 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள், நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை அகற்றுவதற்குப் பதிலாக விற்பனை குறைவாக இருக்கும் கடைகளைத் தேர்ந்தெடுத்து மூடியிருக்கிறார்கள். நெடுஞ்சாலைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 729 கடைகளை மூடச் சொல்லி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதை இன்னும் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், ‘உங்களுடைய கடையும் மூடப்படும் பட்டியலில் இருக்கிறது’ என்று சொல்லி கடை ஊழியர்களிடமும், பார் உரிமையாளர்களிடமும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் வசூல் வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இப்படி இருந்தால் அரசின் கொள்கை முடிவு எந்தவிதத்தில் மக்களைச் சென்று சேரும்? அரசின் நடவடிக்கையால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையாது, வருமானமும் பாதிக்காது.
‘மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களின் சீனியாரிட்டியைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு, காலிப்பணியிடங்கள் உள்ள மதுக்கடைகள், குடோன்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள், பறக்கும் படை ஆகியவற்றில் மாற்றுப்பணி வழங்கப்படும்’ என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. அதுபோல சிலரை மட்டும், 3 லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனை நடக்கும் கடைகளுக்கு கூடுதல் பணிக்கு அனுப்பினார்கள். இதிலும் சில அதிகாரிகள் ‘சீக்கிரம் மாற்று வேலை கிடைக்க வேண்டுமானால், எங்களைக் ‘கவனிக்க’ வேண்டும்’ என்று ஊழியர்களை வற்புறுத்துகிறார்கள். 13 ஆண்டு காலம் வேலைபார்த்த ஊழியர்களைத் திடீரென வீட்டுக்கு அனுப்புவது சரியான செயல் அல்ல. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, கல்வித்தகுதி அடிப்படையில் அரசின் இதர துறைகளில் இருக்கும் பணி வாய்ப்புகளைத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசினோம். ‘‘மாற்றுப்பணிக்கு நாங்கள் ஏற்கெனவே அறிவித்ததுபோல செயல்பட்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்குக் கண்டிப்பாக மாற்றுப்பணி வழங்கப்படும். இதுவரை எங்களுக்கு எந்தப் புகார்களும் வரவில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். மற்ற துறைகளில் பணி வழங்குவது பற்றி அரசுதான் முடிவு செய்யும்’’ என்றார்.
மதுக்கடைகளை மூடுவதால் பாதிக்கப்படும் கடைநிலை ஊழியர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு உரிய வழி செய்ய வேண்டும்.
- மா.அ.மோகன் பிரபாகரன்