Published:Updated:

“கடனைத் திருப்பிக்கொடுத்தால் என் மகன் உயிர் கிடைக்குமா?”

“கடனைத் திருப்பிக்கொடுத்தால் என் மகன் உயிர் கிடைக்குமா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“கடனைத் திருப்பிக்கொடுத்தால் என் மகன் உயிர் கிடைக்குமா?”

தற்கொலை செய்த மாணவரின் தந்தை கதறல்!

“கல்விக்கடனைத் திருப்பிக் கட்டலைன்னு பேங்க் ஆளுங்க டார்ச்சர் கொடுத்ததால என் மகன் தற்கொலை செஞ்சுக்கிட்டான். இப்போ அந்தக் கடனை நான் கட்டிட்டா, என் மகனோட உயிரை அந்த பேங்க் திருப்பிக் கொடுத்துடுமா?’’ என்றவாறு கதறுகிறார் கதிரேசன்.

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான கதிரேசனின் மகன் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் 1.90 லட்சம் ரூபாய் கல்விக்கடன் வாங்கி பொறியியல் படிப்பு முடித்தார். கடந்த ஆண்டு படிப்பு முடிந்தது. ஆனால், உடனடியாக வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கித் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால் லெனின் தற்கொலை செய்துகொண்டார்.

“கடனைத் திருப்பிக்கொடுத்தால் என் மகன் உயிர் கிடைக்குமா?”

மகனை இழந்த துயரத்தில் இருந்த கதிரேசனிடம் பேசினோம். “சமூகத்துல ஏதாவது மாற்றம் கொண்டு வருவான்கிற நம்பிக்கையிலதான் என் மகனுக்கு லெனின் பெயரை வெச்சோம். கொத்தனார் வேலை செஞ்சுதான் அவனை பி.இ வரை படிக்க வெச்சேன். ரொம்பக் கஷ்டப்பட்டு ரெண்டு லட்சம் ரூபாய் ரெடி பண்ணி கட்டினேன். அதைத் தாண்டியும் பணம் தேவைப்பட்டுச்சு. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுல கல்விக் கடன் கேட்டோம். ரெண்டு மாசம் அலையவிட்டாங்க. அப்புறம், 1.90 லட்சம் ரூபாய் கடன் கிடைச்சது. போன வருஷம் படிப்பு முடிஞ்சது. ரெண்டு அரியர்ஸ் இருந்துச்சு. அதை முடிக்கணும்னு படிச்சுக்கிட்டு இருந்தான்.

அதே நேரத்துல வேலை தேடிக்கிட்டும் இருந்தான். இந்த நிலையிலதான், கல்விக்கடனைக் கட்டச் சொல்லி பேங்க்ல இருந்து தொடர்ச்சியா அவனுக்கு போன் வந்துச்சு. அதனால, ஆரம்பத்துல கொஞ்சம் கடன் கட்டினான். ஆனாலும், கடனை மொத்தமாகக் கட்டச் சொல்லி வீட்டுக்கு ஆள் வந்திருக்காங்க. அவனுக்கு ரொம்ப நெருக்கடி கொடுத்திருக் காங்க. ‘கடனைக் கட்டலைன்னா எல்லா சர்ட்டிஃபிகேட்டையும் பறிச்சிட்டுப் போயிருவோம். உங்க வீட்டை ஏலம் விட்டுருவோம்’னு மிரட்டியிருக்காங்க. தொடர்ந்து அவனுக்கு நெருக்கடி கொடுத்திருக் காங்க. நான் வேலைக்குப் போயி ருவேன். எனக்கு எதுவும் தெரியாது. எங்கிட்ட அவன் எதையும் சொல்லலை. ஒரு கட்டத்துல அவங்க நெருக்கடியைச் சமாளிக்க முடியாம இப்படியொரு முடிவைத் தேடிக்கிட்டான். என்கிட்ட சொல்லியிருந்தா, இந்த வீட்டை வித்தாவது கடனைக் கட்டியிருப்பேன்” என்று கண்ணீர் சிந்தினார்.

“கடனைத் திருப்பிக்கொடுத்தால் என் மகன் உயிர் கிடைக்குமா?”

இந்தச் சம்பவம் குறித்து வழக்கறிஞர் வேல்முருகன், “கல்வியை அரசு இலவசமாகத் தரவேண்டும். ஆனால், அந்தக் கடமையில் இருந்து அரசு தவறிவிட்டது. அதுமட்டுமில்லாமல், கல்விக்கடனை வசூலிக்க தனியாரை அடியாளாக ஏவி விடுகிறார்கள். இதுவா ஒரு நல்ல அரசாங்கம்? பல்வேறு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட், அடியாட்களை வைத்து கடனை வசூல் செய்யக் கூடாது என்று சொல்லி இருக்கிறது. ‘தனியார் நிறுவனத்தின் மூலம் கடனை வசூல் செய்யச் சம்மதம்’ என்று வங்கிகளில் கடன் வழங்கும்போதே மாணவர்களிடம் சொல்லாமல் பல்வேறு ஆவணங்களில் கையொப்பம் வாங்குகிறார்கள்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து மும்பையில் இருக்கும் ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.  பெயர் வேண்டாம் என்றவாறு நம்மிடம் பேசினார். “கல்விக்கடன்களை வசூலிக்கும் பொறுப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். வங்கிகளில் ஏலம் மூலம் கடனை வசூல் செய்ய ஒப்பந்தம் போடும் ரிலையன்ஸ் நிறுவனத்தினர் ஒரு மாணவர் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார் என்றால், வங்கியிடம் மூன்று லட்சத்துக்குள் ஏலம் எடுக்கிறார்கள். வங்கிக்கு மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே கட்டுவார்கள். ஆனால், மாணவரிடம் ஐந்து லட்சமும், அதோடு வட்டியும், கூடுதலாக தனியார் நிறுவனத்தின் சர்வீஸ் சார்ஜ் தொகையும் வசூல் செய்துவிடுவார்கள். முதலீடு இல்லாமே கோடிக்கணக்கான ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் லாபமாகச் சம்பாதிக்கிறது. கல்விக்காக வாங்கும் தொகை வாராகடனாக இருப்பதைத் தவிர்க்க, சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ‘கியாரன்டி ஃபண்ட் ஸ்கீம்’ கொண்டு வரப்போவதாகச் சொன்னார்கள். அதை இதுவரை கொண்டு வரவில்லை. இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால் மாணவர்களுக்கு நல்ல பயனளிக்கும். கடனை வசூல் செய்யும்போது மன உளைச்சல் கொடுத்தாலோ, தேவையற்ற வார்த்தைகள் பேசினாலோ போலீஸ் மற்றும் நீதிமன்றத்தை மாணவர்கள் நாடலாம்” என்றார்.

“கடனைத் திருப்பிக்கொடுத்தால் என் மகன் உயிர் கிடைக்குமா?”

கடன் நெருக்கடிகளால்தான், இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பைத் தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் கொடுத்திருப்பதால், இனி மாணவர் தற்கொலைகள் நாடு முழுவதும் நிகழும் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாணவரின் தற்கொலை என்று தெரிகிறது.

- சண்.சரவணக்குமார்
படம்: நா.ராஜமுருகன்