
பினாமிகளின் கையில் கல்குவாரிகள்...

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையாம்பாட்டி கல்குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்தபோது மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றன.
பல ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் நடந்துவந்த கிரானைட் கொள்ளை, சகாயம் ஐ.ஏ.எஸ் குழுவின் ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்தது. கிரானைட் குவாரி வழக்குகள் இப்போது நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. இந்த விவகாரத்தால் அனைத்துக் குவாரிகளுக்கும் தடை போடப்பட்டது.
“கிரானைட் குவாரிகள் மீதுதானே புகார்கள், சாதாரண கல் உடைக்கும் குவாரிகளுக்கு அனுமதி அளியுங்கள், பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்” என்று, சிலர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர். உடனே மாவட்ட நிர்வாகம், இதுதான் ‘வாய்ப்பு’ என்று கடந்த வருடம் கல்குவாரிகளுக்குத் தாராளமாக அனுமதி அளித்தது. கிரானைட் குவாரிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கல்குவாரிகளும் தோண்டத்தோண்ட லாபம்தான். மாவட்டச் சுரங்கத் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியுடன், பினாமிகள் பெயர்களில் ஏலம் எடுத்து அரசு அனுமதித்த அளவுக்கு மேல் மலைகளை உடைக்க ஆரம்பித்து, வருமானத்தைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.
சேகர் என்பவர் நடத்திவரும் குவாரியில் வெடிவைக்கும் பணியில் பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராமு, நடுப்பட்டியைச் சேர்ந்த நல்லையன், தெத்தூர் செந்தில்குமார் மற்றும் கொண்டையம்பட்டி சுதர்சன் உள்ளிட்ட தொழிலாளர்கள் கடந்த 8-ம் தேதி ஈடுபட்டிருந்தனர். வெடி வெடித்ததும் திடீர் என்று குவாரிக்குள் அதிக அதிர்வு ஏற்பட்டு மணல் சரிந்துள்ளது. கயிற்றில் தொங்கியபடி வெடிவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடிமானத்துக்காகப் பிடித்திருந்த கற்களும் சரிய ஆரம்பித்தன. அதனால், 300 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து பாறைகளுக்குள் சிக்கி மூன்று பேரும் உயிரிழந்தனர். சுதர்சன் என்பவர் காயங்களுடன் உயிர்தப்பினார்.

இதுநாள் வரை குவாரி செயல்படுவதற்கு அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகம், மூன்று தொழிலாளர்கள் உயிர்போனபிறகு, குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள். மத்திய புவியியல் சுரங்கத் துறை துணை இயக்குநர் ஷியாம் ஷர்மா, பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘‘விதிகளைமீறி முறைகேடாகப் பாறைகள் உடைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களும் பாதுகாப்பற்ற முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் பாறைகள் சரிந்துவிழும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, மாவட்டத்தில் அனைத்துக் கல்குவாரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப் போவதாக கலெக்டர் வீரராகவ் கூறியுள்ளார். விபத்து நடைபெற்ற கல்குவாரியை மதுரை அ.தி.மு.க., தி.மு.க நிர்வாகிகளின் பினாமிகள்தான் நடத்தி வந்தனர் என்று கூறப்படுகிறது. இதேபோல் இன்னும் 20 கல்குவாரிகள் மாவட்டத்தில் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் செயல்படுவதாகவும், இதை நடத்துபவர்கள் அரசியல்வாதிகள் என்பதால் அவர்களின் குவாரியை ஆய்வு செய்ய மாட்டார்கள். இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ என்று அச்சத்தில் இருக்கின்றனர் பொதுமக்கள்.
சட்டவிரோத கல்குவாரிகளுக்கும் ஒரு விசாரணைக் கமிஷன் போடுங்கள் மை லார்ட்!
- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்