Published:Updated:

ஆந்திராவில் நடந்த நிஜ விசாரணை

ஆந்திராவில் நடந்த நிஜ விசாரணை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆந்திராவில் நடந்த நிஜ விசாரணை

மொட்டைப் போடப் போனோம்... லத்தியால் அடித்து துவைத்தார்கள்!அடாவடி

ஆந்திராவில் நடந்த நிஜ விசாரணை

மிழர்களுக்கு எதிரான ஆந்திர வனத்துறை மற்றும் போலீஸின் அராஜகம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம்,  ஏப்ரல் மாதம் கூலி வேலைக்காக ஆந்திரா சென்ற 20 தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் எனச் சொல்லி சுட்டுப்பொசுக்கியது  ஆந்திர காவல் துறை. திருவண்ணாமலையிலும், தர்மபுரியிலும் அந்த  உடல்கள் மொத்தமாக எரிக்கப்பட்டபோது (சில உடல்கள் எரிக்கப்படவில்லை) ஊரே கூடி அழுத  காட்சியை  யாராலும் மறக்க முடியாது.  தமிழகத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவையே அந்தச் சம்பவம் உலுக்கினாலும்  ஆந்திர அரசும், அந்த மாநில வனத்துறையும், போலீஸும் அலட்டிக்கொள்ளவே இல்லை. இப்போதும் தமிழர்களுக்கு எதிராக அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் சான்று. 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த லாரி பாடி பில்டிங் பணிகளைச் செய்யும் 9 பேர், கடந்த 28-ம் தேதி திருப்பதிக்கு மொட்டை போடச் சென்றனர். பேருந்தில் சென்ற அவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற ஆந்திர வனத்துறை யினர் அடித்துச் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

ஒன்பது பேரில் ஐந்து பேர் வேலைக்குச் சென்றுவிட ரமேஷ், ஜோதிமுருகன், சீனிவாசன், சின்னத்தம்பி உள்ளிட்ட நான்குபேரை மட்டும்தான் நம்மால் சந்திக்க முடிந்தது. அவர்கள் இன்னும் அந்த மிரட்சியில் இருந்து மீளவில்லை. ஜோதிமுருகன் முதலில் பேச ஆரம்பித்தார். “நாங்க 28-ம் தேதி  திருப்பதிக்கு மொட்டை போடுவதற்காகக் கிளம்பினோம். ரயில்ல போவதற்காக டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். சேலம் ரயில் நிலையத்தில் நாலாவது ப்ளாட்ஃபார்ம்ல ரயில் வர்றது  தெரியாம அஞ்சாவது ப்ளாட்ஃபார்ம்ல போய் நின்னதால ரயிலை மிஸ் பண்ணிட்டோம். பஸ்ஸில் சேலத்தில் இருந்து வேலூர் போயிட்டு அங்கிருந்து திருப்பதிக்கு பஸ் ஏறினோம். சித்தூர் பார்டர்ல  பஸ்ஸ நிறுத்தி, ஆந்திர வனத்துறை ஸ்பெஷல் ஸ்குவாட் சோதனை செய்தாங்க. எங்களை மட்டும் இறங்கச்சொல்லி ‘எங்க போறீங்கன்னு’ கேட்டாங்க. ‘திருப்பதி போறோம்’னு சொன்னோம். ‘ஏன் மொத்தமா டிக்கட் எடுத்தீங்க’னு கேட்டாங்க. ‘நாங்க எல்லாரும் ஒண்ணாதான் வந்துருக்கோம்’னு சொன்னோம். ‘என்ன யார் கால்லயும் செருப்பு இல்லை’ன்னு கேட்டாங்க.  ‘சார்... கோயிலுக்கு வர்றதால செருப்புப் போட்டுக்கிட்டு வரலை சார்’னு சொன்னோம். ‘என்னடா... கையெல்லாம் காப்பு காச்சிருக்கு... கால்ல செருப்பு இல்லை... மொத்தமா டிக்கெட் எடுத்துருக்கீங்க... மரம் வெட்டதான வந்துருக்கீங்க’னு தெலுங்குல ஒருத்தர் கேட்க அதை இன்னொருத்தர் தமிழ்ல எங்ககிட்டச் சொன்னார். எங்களுக்கு நடுங்க ஆரம்பிச்சிருச்சி. ‘சத்தியமா கோயிலுக்குத்தான் சார் வந்தோம்’னு எவ்வளவோ சொன்னோம். எங்களுடைய ஐடி கார்டு எல்லாத்தையும் எடுத்துக் காட்டினோம். ‘கோயிலுக்கு வர்றவங்க எல்லாரும் ஐ.டி கார்டோட வருவாங்களா’னு அதையும் எங்களுக்கு எதிராத் திருப்பி கேட்டாங்க. ‘ரயில்ல காட்டுறதுக்காக எடுத்துட்டுவந்தோம்’ன்னு சொன்னோம்.

ஆந்திராவில் நடந்த நிஜ விசாரணை

எங்க செல்போன், நாங்க வச்சிருந்த பணம் எல்லாத்தையும் பிடிங்கிகிட்டு. ஒரு ரூம்ல கொண்டு போய் வச்சி, ‘உண்மையச் சொல்லுங்க.. உண்மையச் சொல்லுங்க’னு... அடிச்சாங்க. வலி தாங்கமுடியாம எல்லாரும் கத்துனோம். ‘சங்ககிரி லாரி அசோசியேஷனுக்கு போன் பண்ணிக் கேளுங்க சார்... நாங்க லாரி பட்டறையிலதான் சார் வேலை பாக்குறோம்’னு கத்துனோம்... எதையுமே அவுங்க கேக்கலை.  கால்ல ரெண்டு பேர்.. கையில.. ரெண்டு பேர் ஏறிகிட்டாங்க உள்ளங்கால்லயே லத்தியால பழுக்கப்பழுக்க அடிச்சி.. உடனே தரையில குதிக்கச் சொல்லிக் கொடுமைப் படுத்துனாங்க. ‘ஒழுங்கா... மரம் வெட்டத்தான் வந்தோம்னு ஒத்துக்குங்க ஒத்துக்குங்க’னு சொல்லி உதைச்சாங்க. பெரிய சிக்கல்ல மாட்டிகிட்டோம்... இனி இங்கிருந்து வீட்டுக்குத் திரும்ப முடியாதுனு நெனைச்சோம் என்று ஜோதிமுருகன் நிறுத்த...

சீனிவாசன் பேசத் தொடங்கினார் “அதுக்கப்புறம் குடிபாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. அஞ்சுநாள் அங்கேயே வச்சிருந்தாங்க. நாங்க இதுக்கு முன்னாடி திருப்பதி வந்துருக்கோமான்னு எங்க செல் நம்பரை செக் பண்ணாங்க.  வீட்டுக்கு போன்கூடப் பண்ண விடலை. யாருக்கும் தகவல் சொல்லலை. போலீஸ் ஸ்டேஷன்ல எங்களை அடிக்கலை. மனரீதியா டார்ச்சர் பண்ணாங்க. என்ன பண்றதுனு தெரியாமத் தவிச்சப்பதான் அந்த ஸ்டேஷனுக்கு ஆக்ஸிடென்ட் கேஸுக்காக  திருச்சி டிரைவர் சரவணன்னு ஒருத்தர் வந்தார். அந்த ஸ்டேஷன்ல இருந்த போலீஸ்  ஒருத்தர்,  ‘யாருக்கும் தெரியாம, அந்த டிரைவர் போனை வாங்கிப் பேசுங்க’னு சொன்னார். எங்க ஓனர் குமாருக்குத் தகவல் சொன்னோம். அதுக்குப் பிறகு, லாரி அசோசியேஷன்ல பேசி எங்க ஓனர், எங்களைக் காப்பாத்தினார். எங்ககிட்ட இருந்து பிடுங்குன 30 ஆயிரம் பணத்தத் திருப்பித் தரலை. சாப்பாட்டுக்கு செலவாகிடுச்சினு பஸ்ஸுக்கு மட்டும் காசு கொடுத்து ‘இனிமே திருப்பதி பக்கமே வரக் கூடாது’னு சொல்லி அனுப்பிட்டாங்க’’ என்றார் நடுக்கத்துடன்.

ஒன்பது பேரையும் மீட்டு அழைத்துவந்த சங்ககிரி கே.எம்.சபரி லாரி பாடி ஒர்க்ஸ் உரிமையாளர் குமாரிடம் பேசினோம். “பசங்க போலீஸ்ல மாட்டிக்கிட்டது மூணு நாள் வரைக்கும் எங்களுக்குத் தெரியாது. ஃபாரஸ்ட்காரங்க அடிச்சி கொடுமைப் படுத்திருக்காங்க. போலீஸ் ஸ்டேஷன்ல பசங்களை அடிக்கலை. வனத்துறை அதிகாரிகள்தான் அடிச்சிருக்காங்க. குடிபால போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த ஒரு கான்ஸ்டபிள்தான் பசங்களுக்கு உதவி பண்ணியிருக்காரு. தகவல் கிடைச்சதும் எங்களுக்குத் தெரிஞ்ச அதிகாரிகளை வச்சிப் பேசினோம். லாரி அசோசியேஷன் லெட்டர்பேடுல எழுதி வாங்கிக்கிட்டு வாங்கன்னுச் சொன்னாங்க. எழுதிக் கொண்டு போய் கொடுத்து ரெண்டு நாள் கழிச்சிதான் பசங்களை விட்டாங்க. இது வெளியில யாருக்கும் தெரியாது பசங்களுக்கு மறுபடியும் எதுவும் பிரச்சனை வந்துடக் கூடாது’’ என்றார் அக்கறையாக.

செம்மரக் கடத்தல் என்ற போர்வையில் அப்பாவிகந்த் துன்புறுத்துவதை ஆந்திர வனத்துறையும் போலீஸாரும் இன்னமும் நிறுத்தவில்லை!

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.தனசேகரன்

“காற்றோடு பேசிக்கொண்டு...”

ஆந்திராவில் நடந்த நிஜ விசாரணை

சென்ற வருடம்  சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களில் ஏழு பேர் தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலையைச் சேர்ந்தவர்கள். அப்போது வெங்கடாச்சலம், மகேந்திரன், தருமன், காமராஜ், சத்தியராஜ், முருகன் ஆகிய ஆறு பேர் ஆந்திர சிறையில் சிக்கி இருப்பதாக சித்தேரி மக்கள் சொன்னார்கள். அவர்களின் நிலையை அறிய சித்தேரி மலைக்குச் சென்றோம். மகேந்திரன் வீட்டில் அவருடைய அம்மா சந்திரா இருந்தார். அவரிடம் பேசினோம். “ஜெயில்ல இருந்த ஆறு பேரையும் ரிலீஸ் பண்ணிட்டாங்க. செத்தவங்க குடும்பத்துக்கு நம்ம அரசாங்கம் நிவாரணமும் வேலையும் போட்டு கொடுத்துருக்கு. ஜெயில்ல இருந்து வெளிய வந்தவங்கள்ல என் மகனைத் தவிர, மத்த அஞ்சு பேரும் நல்லா இருக்காங்க. ஆனா, என் மகனுக்கு மட்டும் மனநலம் கெட்டுப் போச்சி. வந்ததுல இருந்து ஜெயில பத்தியே பேசுறான். நாம ஏதாவது எதிர்த்துப் பேசுனா அடிச்சிடுறான். காலையில கிளம்பிப் போறவன் சாயங்காலம்தான் வீட்டுக்கு வர்றான். அவன் பொண்டாட்டி கோச்சிகிட்டு போயிடுச்சி. ரெண்டு பசங்க படிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா, அவன் எதைப்பத்தியும் கண்டுக்கிறது இல்லை. காட்டுல அவனை மாதிரி பண்ணயம் பண்ண யாராலும் முடியாது. அவனுக்கா இந்த நிலைமைன்னு நெனைச்சு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நீங்க கவர்மென்ட் ஆபீஸரா? அவனுக்கு ஏதாச்சும் உதவி செய்ய முடியுமா?” என அப்பாவியாகக் கேட்கிறார் அந்தத் தாய். வழியில் சீவிய தலையும்.. சிரித்த பற்களுடனும் காற்றோடு பேசிக்கொண்டபடி  ஒருவர்  மலையேறிக் கொண்டிருந்தார். அவர்தான் மகேந்திரனாக இருக்குமென யூகித்து அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “அந்த கேஸ் சம்பந்தமாத்தான் போயிட்டு வர்றேன். மத்திய சர்க்கார்கிட்ட பேசணும். மெட்ராஸுக்கு போயிட்டு டெல்லிக்குப் போகணும்’’ என்று சொல்லிவிட்டு நிற்காமல் விறுவிறுவென மலையேறத் தொடங்கிவிட்டார். ஆந்திரப் போலீஸின் விசாரணை அவரை எந்த அளவுக்கு மனபாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நமக்குப் புரிந்தது.