Published:Updated:

பச்சைமால் பணம் வாங்கினாரா?

பச்சைமால் பணம் வாங்கினாரா?
பிரீமியம் ஸ்டோரி
News
பச்சைமால் பணம் வாங்கினாரா?

வன ரேஞ்சர் 20 லட்சம்... டி.எஃப்.ஓ 30 லட்சம்... லாரி டெண்டருக்கு 30 லட்சம்... கிளம்பும் புது சர்ச்சை!மோசடி

பச்சைமால் பணம் வாங்கினாரா?

அ.தி.மு.க அமைச்சர்கள் பதவியில் இருக்கும்போது ஆட்டம் போடு வதும், அவர்களின் பதவிபோனதும் அவர்களிடம் ஏமாந்தவர்கள் தவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வரிசையில் இப்போது முன்னாள் அமைச்சர் பச்சைமாலிடம் ஏமாந்ததாகச் சிலர் கொந்தளிக் கின்றனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேல் குமரியில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராகக் கோலோச்சியவர் பச்சைமால். 2001-ல் குளச்சல் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்று, அதே தொகுதியில் 2006-ல் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலிடம் தோற்றவர். மீண்டும் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வனத்துறை அமைச்சரானார். அதன்பின்தான் அவரது வாழ்க்கையும் வனத்தைப் போல செழிக்கத் தொடங்கியது என்கிறார்கள். 2011 முதல் 2014 வரை வனத்துறையிலும், தொழிலாளர் நலத் துறையிலும் அமைச்சராக இருந்தார் பச்சைமால். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குமரியில் அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குச் சென்றது. இதனால், பச்சைமாலின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அதன்பின், தொடர்ச்சியாக அவர் மீது புகார்களும் எழத் தொடங்கின.

“பச்சைமால் வனத்துறை அமைச்சராக இருந்தபோது வன ரேஞ்ஜர் பதவிக்கு ரூ.20 லட்சம், டி.எஃப்.ஓ-வுக்கு ரூ.30 லட்சம், போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.2 முதல் ரூ.3 லட்சம், ரேஷன் அதிகாரிப் பணிக்கு ரூ.3 லட்சம், டாஸ்மாக் பார்களுக்கு, டாஸ்மாக் லோடுகளைக் கொண்டு செல்லும் லாரி டெண்டருக்கு ரூ.30 லட்சம், அ.தி.மு.க வட்டச் செயலாளர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் என ஹோட்டல் மெனு கார்டுபோல அரசு வேலைக்களுக்கு பச்சைமால் வகையறாக்களும், உதவியாளர்களும் பணம் பெற்று இருக்கின்றனர்” என்கிறார்கள் ஏமாந்தவர்கள். 

“பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் பல அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். பணம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைக்காததால் பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ‘இப்போது என்கிட்ட பணம் இல்லை’ என்று பச்சைமால் தரப்பில் இழுத்தடிக்கின்றனர். ஆளும் கட்சி என்பதாலும், பச்சைமால் குமரி மாவட்டத்தில் செல்வாக்கு உள்ளவர் என்பதாலும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் பணம் கொடுத்தவர்கள் தயங்குகின்றனர். தினமும், பச்சைமால் வீட்டின் முன்பு பணம் கொடுத்தவர்கள் காத்துக் கிடக்கின்றனர். மொத்தத்தில் சுமார் ரூ.2 கோடிக்கு மேல் பச்சைமால் பணம்  திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. ரொம்ப நெருக்கடி கொடுத்தவர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பலருக்கு செட்டில் செய்து முடிக்கவில்லை” என்கிறார் குமரி அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து பச்சைமாலிடம் பேசினோம். ‘‘அப்படி என்கிட்ட யாரும் பணம் தரவும் இல்லை. நான் யாரிடமும் கைநீட்டிப் பணம் வாங்கவும் இல்லை. வேற யாராவது என் பெயரைச் சொல்லிப் பணம் வாங்கி ஏமாற்றி இருந்தால் அதுக்கு நான் பொறுப்புக் கிடையாது. கட்சியில் என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் கிளப்பி விடுகிற தகவல் இது. அம்மா எனக்குப் பதவி தந்திடக் கூடாதுனு எனக்கு எதிராக வேலை நடக்குது. நான் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை” என்று முடித்துக்கொண்டார்.

ஏமாற்றியது யார் என்பது ஏமாந்தவர்களுக்குத்தான் தெரியும்.

- த.ராம், படம்: ரா.ராம்குமார்