Published:Updated:

"சாதகமான தீர்ப்பு சொல்ல ஒரு கோடி கேட்டார்!"

"சாதகமான தீர்ப்பு சொல்ல ஒரு கோடி கேட்டார்!"
பிரீமியம் ஸ்டோரி
News
"சாதகமான தீர்ப்பு சொல்ல ஒரு கோடி கேட்டார்!"

புரோக்கர்களோடு சிக்கிய நாமக்கல் நீதிபதி அநீதி

"சாதகமான தீர்ப்பு சொல்ல ஒரு கோடி கேட்டார்!"

சொத்து வழக்கு ஒன்றில், ஒருசாரா ருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என நாமக்கல் மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த நீதிபதிக்கு பணம் வாங்கிக்கொடுக்கும் புரோக்கர் களாகச் செயல்பட்ட நான்கு பேர் கடந்த 6-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட உரிமையியல் விரைவு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் மான்விழி. இவருடைய நீதிமன்றத்தில் டேவிட் பத்மநாபன், ஜெயசித்ரா என்பவர்களுக்கு இடையிலான சொத்து வழக்கு ஒன்று நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. அதில், ஜெயசித்ரா குடும்பத்தினருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்க, நீதிபதி மான்விழி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, அந்த நீதிபதி கடந்த பிப்ரவரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஜெயசித்ராவின் தம்பி கோகுல், ‘‘ராசிபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரான சாமுவேலுக்கு மனைவி, குழந்தைகள் கிடையாது. அவருக்குப் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருந்தன. சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக 1973-ல் பத்மநாபன் என்பவரையும், 1993-ல் என் அக்கா ஜெயசித்ராவையும் தத்து எடுத்துக் கொண்டார். சாமுவேல்ராஜ் இறப்பதற்கு முன்பாக, பஸ்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை பத்மநாபன் மற்றும் ஜெயசித்ரா பெயர்களில் தனித்தனியாக உயில் எழுதிவைத்தார். அவை தவிர, சாமுவேல் பெயரில் இருந்த கல்வி நிறுவனம், மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லம் உட்பட 100 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துக்களைப் பிரிப்பதில் எங்கள் குடும்பத்துக்கும், பத்மநாபன் குடும்பத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு, 1993 முதல் நாமக்கல் விரைவு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2014-ல் மான்விழி என்ற நீதிபதி நாமக்கல் விரைவு நீதிமன்றத்துக்கு வந்த பிறகு, அண்ணாதுரை என்பவர் எங்களிடம், ‘நீதிபதி மான்விழி என்னுடைய அக்கா. சொத்து வழக்கில் உங்களுக்குச் சாதகமாக தீர்ப்பை வாங்கித் தருகிறேன்’ என்று சொன்ன தோடு, மான்விழியின் வீட்டுக்கும் எங்களை அழைத்துச் சென்றார். அப்போது மான்விழி, ‘உங்கள் கேஸை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்றால், உயர் நீதிமன்றத்தில் ஒரு ஆர்டர் வாங்க வேண்டும். அது சம்பந்தமாக என் தம்பி உங்களிடம் பேசுவான். எதுவாக இருந்தாலும் என் தம்பியிடம் சொல்லுங்க’ என்றார்.

ஒரு வாரம் கழித்து அண்ணாதுரை, ஜெயந்த், ரவிசங்கர், ராஜசேகர் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வந்து, ‘உயர் நீதிமன்றத்தில் தெரிந்தவர் களை கரெட் பண்ணி ஆர்டர் வாங்கிவிட்டோம். இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். ஒரு கோடி ரெடி பண்ணுங்கள்’ என்றார்கள். ‘எங்களிடம் பணம் இல்லை’ என்றோம். அதற்கு, ‘உங்கள் பஸ்ஸை வைத்துப் பணம் வாங்கித் தருகிறோம்’ என்றார்கள். அதையடுத்து சேலத்தைச் சேர்ந்த பஸ் ஓனர் ஒருவரிடம் ஜெயந்த் என்பவர், ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். மூன்று மாதங்கள் முடிந்து தீர்ப்பும் வரவில்லை, பஸ்ஸை மாற்றி எழுதியதற்குப் பணமும் வரவில்லை.

"சாதகமான தீர்ப்பு சொல்ல ஒரு கோடி கேட்டார்!"

இதுதொடர்பாக, சேலம் போலீஸ் கமிஷனராக இருந்த அமுல்ராஜிடம் புகார் கொடுத்தோம். அவர், நீதிபதி ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புகார் அனுப்பினார். அதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் விஜிலென்ஸ் மூலம் விசாரணை நடத்தி, நீதிபதி மான்விழியை சஸ்பெண்ட் செய்தது. அண்ணாதுரை, ஜெயந்த், ரவிசங்கர், ராஜசேகர் ஆகியோர் இப்போது கைதுசெய்யப்பட்டு உள்ளனர்’’ என்றார்.

டேவிட் பத்மநாபனிடம் பேசியபோது, ‘‘பாதிரியார் சாமுவேல் என் பெயருக்கும், ஜெயசித்ரா பெயருக்கும் பல சொத்துக் களை உயிலாக எழுதிவைத்திருந்தார். அதுதவிர, சாமுவேல் பெயரில் இருக்கும் பல கோடி ரூபாய் சொத்துக்கள், டிரஸ்ட் சொத்துகள். இவற்றை அவர்கள் பெயரில் மாற்றிக்கொள்ளத் துடிக்கிறார்கள்’’ என்றார்.

நீதிபதி மான்விழி, ‘‘என் மீதான குற்றச்சாட்டு கள் பொய்யானவை. அண்ணாதுரை என் கார் டிரைவராக இருந்தார். யாரோ செய்த தவறுக்காக என்னைச் சிக்கவைத்து விட்டார்கள். நான் நேர்மையானவர் என்பது விரைவில் நிரூபண மாகும்’’ என்றார்.

நீதிபதிகளே இப்படி ஆகிவிட்டபிறகு அரசியல்வாதிகளைக் குறை சொல்ல என்ன இருக்கிறது?

- வீ.கே.ரமேஷ் படங்கள்: எம்.விஜயகுமார்