Published:Updated:

"ஆன்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த ஊழல்... பலிகடாவான மாதவன் நாயர்!

"ஆன்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த ஊழல்... பலிகடாவான மாதவன் நாயர்!
பிரீமியம் ஸ்டோரி
News
"ஆன்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த ஊழல்... பலிகடாவான மாதவன் நாயர்!

அதிரவைக்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிஊழல்

"ஆன்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த ஊழல்... பலிகடாவான மாதவன் நாயர்!

ன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புயலைக் கிளப்பிக் கொண்டிருந்த அதேநேரத்தில், விண்வெளித்துறையில் நடந்த 2.32 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஆன்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பான ஊழல், தேசத்தையே அதிர வைத்தது. அதுதொடர்பாக, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதே நேரம், இதே வழக்கில், சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

“இந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகராக இருந்த பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார்’’ என்று  பிரபல சட்ட நிபுணர் ராம்ஜெத் மலானி குறிப்பிட்டு இருந்தார். சிவகாசியைப் பூர்வீகமாகக் கொண்ட பாலச் சந்திரன், இஸ்ரோவின் பொருளாதார ஆலோசகர் மற்றும் கூடுதல் செயலராகப் பணியில் இருந்தவர். அவரிடம் பேசினோம்.

“ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு பற்றிச் சொல்லுங்கள்?”

“இந்த விவகாரங்கள், 2010-ம் ஆண்டு நடந்தவை. தேவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை செயல்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்தன. அப்போது என்னிடம் பேசிய விஞ்ஞானி ஒருவர், ‘இந்த ஒப்பந்தத்தால் தேவாஸ் மட்டும் நிறைய ஆதாயம் அடையும். ஆன்ரிக்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம்தான் ஏற்படும்’ என வேதனைப்பட்டார். அவரிடம், ‘இந்தத் தகவல்களை விஜிலென்ஸ் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என அனுப்பி வைத்தேன். விஞ்ஞானி பி.என்.சுரேஷ் தலைமையில் ஒரு கமிட்டியை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ஏற்படுத்தினார். தேவாஸ் ஒப்பந்தத்தில் உள்ள தொழில்நுட்பம், சட்டரீதியான விவகாரங்கள், வணிகம் ஆகிய மூன்று விஷயங்களை ஆராய்ந்து அந்த கமிட்டி அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 2010 ஜூன் மாதம், சுரேஷ் கமிட்டி அறிக்கையை என்னிடம் கொடுத்த ராதாகிருஷ்ணன், ‘இதை ஆராய்ந்து சொல்லுங்கள்’ என்றார்.

"ஆன்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த ஊழல்... பலிகடாவான மாதவன் நாயர்!

அந்த அறிக்கையை ஆராய்ந்த நான், ‘இதற்கு முன்பு இன்டல்செட் என்ற கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டோம். அதில் தேசப் பாதுகாப்பு அம்சங்கள் தெளிவாக வரையறை செய்யப்பட்டன. இண்டல்செட் நிறுவனம் தன் பங்குதாரர்களாக யாரை சேர்த்தாலும் இஸ்ரோ அனுமதி இல்லாமல் சேர்க்க முடியாது. ஒவ்வொரு மூன்று வருடங் களுக்கு ஒருமுறையும் ஆய்வு நடக்கும். ஆனால், தேவாஸ் ஒப்பந்தத்தில் இந்த இரண்டு அம்சங்களும் இல்லை. அதைவிட ஆபத்தானது, இஸ்ரோவின் அனுமதியில்லாமல் யாரை வேண்டுமானாலும் பங்குதாரர்களாக அவர்கள் சேர்த்துக் கொள்ளலாம் என்பது. இதை ஆன்ட்ரிக்ஸ் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் நினைத்தால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பைக்கூட பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளலாம்’ என்றேன். கூடவே, தேவாஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப்படும் செயற்கைக்கோளில் உள்ள 90 சதவீத எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம்கள் அவர்களுக்கே சொந்தமாகும். 10 சதவிகிதம்தான் ஆன்ட்ரிக்ஸ் வசம் வரும். இந்த இரண்டு செயற்கைக்கோள்களுக்காக ஆயிரத்து 100 கோடி ரூபாயை பல காலகட்டங்களில் தேவாஸ் கம்பெனி நமக்குத் தரும். இந்த செயற்கைக் கோளை தயாரிக்கவே 900 கோடி செலவாகும். அவர்கள் தரும் 1,100 கோடியில் மீதம் 200 கோடி ரூபாய் என்பது ஒரு தொகையே இல்லை. நமக்கு லாபமே கிடைக்காது. சமூக சேவை என்றால் லாபம் பார்க்கத் தேவையில்லை. ஆனால், தனியாருக்குக் கொடுக்கும்போது நாம் லாபம் பார்த்துத்தான் ஆக வேண்டும்’ என விரிவாகவே அறிக்கை ஒன்றை தயாரித்தும் அவரிடம் கொடுத்தேன். அதை அவர், ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.”

“தேவாஸ் நிறுவனத்துக்காக ஒட்டுமொத்த இஸ்ரோவும் இயங்கியது ஏன்?”

“தேவாஸ் நிறுவனத்தை நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி. தேவாஸ் நிறுவனத்துடன் போர்ஜ் என்ற அமெரிக்கன் கம்பெனி ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு மொரிஷீயஸில் இவர்கள் அனைவரும் சேர்ந்து கம்பெனி ஒன்றைத் தொடங்கினார்கள். ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் தேவாஸ் ஒப்பந்தம் போட்டதும் டாய்ஸ் டெலிகாம் என்ற ஜெர்மனி கம்பெனி பார்ட்னராக வந்து சேர்ந்தது. இவர்களுக்குப் பின்னணியில் அந்த அமெரிக்கன் கம்பெனி இருந்தது. ஒப்பந்தம் போட்ட சில நாட்களில் தேவாஸ் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் வந்துவிட்டது. இந்த மாயமந்திரத்துக்கு சொந்தக்காரர்களாக இஸ்ரோ தலைமைப் பொறுப்பில் இருந்த முன்னாள் அதிகாரிகள் சிலர் இருந்தார்கள்.”

“இவ்வளவு நாட்கள் கழித்து பேசும் நீங்கள், முன்பே மீடியாக்கள் முன்பு சொல்லியிருக்கலாமே?”

"ஆன்ரிக்ஸ் தேவாஸ் ஒப்பந்த ஊழல்... பலிகடாவான மாதவன் நாயர்!

“தேவாஸ் ஒப்பந்தம் குறித்து நான் அனுப்பிய அறிக்கைகள் அத்தனையும் மிகுந்த ரகசியமானவை. இதைப் பற்றி நான் வெளியில் பேசக் கூடாது. என்னுடைய அறிக்கையை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் சிலர் இஸ்ரோவுக்கு விண்ணப் பித்துக் கேட்டார்கள். ‘தேசப் பாதுகாப்பு தொடர் பானது. தர முடியாது’ என மறுத்துவிட்டனர். அதேநேரத்தில், என்னுடைய அறிக்கையைக் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தது தேவாஸ் கம்பெனி. அவங்களுக்கு எனது முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டார்கள். இந்த சம்பவம் என்னை ரொம்பவே அதிர்ச்சியடைய வைத்தது. பொதுச் சொத்தாக என்னுடைய கடிதம் மாறிப் போய்விட்டதால், நான் பேசுவதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது என்றுதான் பேசுகிறேன். அந்த ஒப்பந்தத்தை சரியான முறையில் நீக்கும் செயலை அடுத்துவந்தவர் செய்யவில்லை. இப்போது மாதவன் நாயரை மட்டும் பலியாக்கிவிட்டார்கள்”.

“தற்போது சி.பி.ஐ விசாரணை சரியான கோணத்தில் செல்கிறதா?”

“மாதவன் நாயர் காலத்தில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டாலும், அதைச் செயல்படுத்தியது முதல் கேபினட் நோட்டில் தகவல்களைச் சொல்லாமல் மறைத்தது வரையில் ராதா கிருஷ்ணன்தான் முன்னின்று செயல்படுத்தினார். குற்றப்பத்திரிகை யில் அவர் பெயர் சேர்க்கப்படாதது விந்தையாக இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார் பாலச்சந்திரன்.

இந்த ஊழல் தொடர்பாக, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தனது அரசியல் செல்வாக்கு காரணமாக ராதாகிருஷ்ணன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

-ஆ.விஜயானந்த்