
எச்சரிக்கும் நீதிபதி... ராஜினாமா செய்த அரசு வழக்கறிஞர்கள்!விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என அவரின் மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, கடந்த ஜூன் 29-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், ‘‘சி.பி.சி.ஐ.டி போலீஸார் பலமுறை அவகாசம் வாங்கிவிட்டனர். மேலும் 6 வாரங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் கண்டுபிடிக்கவில்லை என்றால் சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டியிருக்கும்’’ என எச்சரித்தார். ஆனால், அந்த எச்சரிக்கைக்குப் பலன் இல்லாமல் போய்விட்டது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த பலர், தங்கள் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்துவிட்டனர். குறிப்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்த
கே.செல்லப்பாண்டியனுக்குப் பதிலாக, அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த பி.புகழேந்தி அந்த இடத்துக்கு, கடந்த 2-ம் தேதி முதல் பொறுப்பேற்றுக்கொண்டார். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டதால் இப்போது, புதிதாக வழக்கில் மீண்டும் வாதாடும் நிலைவரும். இதனால், ராமஜெயம் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பில், ஓர் அறிக்கை தாக்கல்செய்த கையோடு, ‘‘இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். மீண்டும் அவகாசம் வேண்டும்’’ எனக் கேட்டார்கள். ராமஜெயம் மனைவி லதா தரப்பு, ‘‘இப்படியே அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நீதிமன்றம் வழங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிட வேண்டும்’’ என வாதம் செய்தது.
இதனை அடுத்து இந்த வழக்கில் கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘‘இப்படியே அறிக்கை தாக்கல்செய்வது, அவகாசம் கேட்பது என இருந்தால் எப்படி இந்த வழக்கு முடிவுக்கு வரும்? இந்த வழக்கை முடிக்க என்ன தேவை எனச் சொல்லுங்கள். இந்தக் கொலை நடந்து நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. அவரது மனைவி உங்கள் விசாரணையில் நம்பிக்கையில்லை என நீதிமன்றத்தை நாடி, ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ராமஜெயம் உயிரோடு இருந்தபோது அதைச்செய்தார், இதைச்செய்தார் என அறிக்கை தாக்கல் செய்கிறீர்களே தவிர, அவர் கொலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம், குற்றவாளி யார் என்பது குறித்து எதையும் சொல்லவில்லை. ராமஜெயம் உயிரோடு இருந்தபோது, என்ன செய்து இருந்தால் என்ன? நீங்கள் தாக்கல் செய்த அறிக்கைகள்படி பார்த்தாலே இந்த வழக்கு சரியான பாதையில் போகவில்லையோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
இதுதான் கடைசி வாய்ப்பு என கடந்த முறையே எச்சரித்தேன். ஆனால், நீங்கள் மீண்டும் அவகாசம் கேட்டு நிற்கிறீர்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா, முடியாதா? அக்டோபர் மாதம் 17-ம் தேதிவரைதான் உங்களுக்கு அவகாசம். ராமஜெயம் கொலை எப்படி நடந்தது, இந்தக் கொலை விசாரணை எப்படிப் போனது என்ற விவரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யுங்கள்’’ என உத்தரவிட்டார்.
ராமஜெயம் தரப்பில், ‘‘இந்த வழக்கை இப்போது 6-வது நீதிபதி விசாரிக்கிறார். இப்படி நீதிபதிகள் மாற்றத்தால் அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சி.பி.சி.ஐ.டி தரப்பு 8-வது முறையாக அவகாசம் வாங்கியுள்ளார்கள். இந்த வழக்கை முடிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. சீல் இடப்பட்ட கவரில் 15 பக்கம் அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டு அவகாசம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த வழக்கு விசாரணையில் ராமஜெயம் குடும்பத்தார் ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள்’’ என்கிறது போலீஸ். ஆனால், போலீஸாருக்கு எங்கள் தரப்பில் அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டோம்.
ஆனால், நெருங்கிய வட்டாரங்களைத் தாண்டி விசாரணை போகவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் அல்லது நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தினால் உண்மை தெரியவரும். டி.எஸ்.பி மலைச்சாமிக்கு ராமஜெயம் கொலைவழக்கில் உள்ள ஆவணங்கள், விசாரணைக்கு உட்பட்டவர்கள் என அனைத்தும் முழுமையாகத் தெரியும். கடந்த 4 வருடங்களாக விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி மலைச்சாமி கடந்த 30-ம் தேதியோடு ஓய்வு பெற்றுவிட்டார்.
திருவானைக்காவலில் நடந்த இரட்டை கொலைவழக்கில் சாமியார் கண்ணன் சிக்கிய பிறகுதான் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சுதாரித்துக்கொண்டு கண்ணனை கைதுசெய்தனர். அப்படி ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா என
சி.பி.சி.ஐ.டி போலீஸார் காத்திருக்கிறார்கள். அதனால்தான் சி.பி.ஐ விசாரணை கோருகிறோம்’’ என்றார்கள்.
- சி.ய.ஆனந்தகுமார்