
சசிகலா புஷ்பாவின் நண்பர் பிலால் கேட்கிறார்!பேட்டி

சசிகலா புஷ்பாவின் விவகாரத்தில் அடிபடும் பெயர்களில் ஒன்று பிலால்! அ.தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகம் ஆன பெயர். அ.தி.மு.க உறுப்பினர் அட்டை வழங்கும் பொறுப்பில் பல ஆண்டுகளாக தலைமைக் கழகத்தில் வேலை பார்த்தவர்தான் இந்த பிலால். கடந்த ஜனவரி மாதமே அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து விலகி விட்டார். இப்போது சசிகலா புஷ்பா ரூபத்தில் இவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி சிவா விவகாரத்தில், சசிகலா புஷ்பா விசாரணைக்காக கார்டனுக்கு அழைக்கபட்ட தினத்தன்று, பிலாலையும் கார்டனுக்கு வரச்சொல்லி ஜெயலலிதா விசாரித்தார். பல்வேறு உண்மைகளை பிலால் அப்போது முதல்வரிடம் சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்கள். சசிகலா புஷ்பா, பிலாலுக்கு கேக் ஊட்டும் போட்டோகளும், வாட்ஸ் அப்களில் உலவின. “சசிகலா புஷ்பா கூட பிலால்னு ஒருத்தர் இருந்தார். அவரும் எங்களை ரொம்ப டார்ச்சர் செய்தார். சசிகலா புஷ்பாவுக்கு அவர் தாலி கட்டித் திருமணம் செய்துள்ளார்” என்று சசிகலா வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இரண்டு பெண்கள் தூத்துக்குடியில் அளித்த புகாரில் கூறி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிலால் சிக்கியது எப்படி? என்ற கேள்விகளோடு பிலாலை தொடர்பு கொண்டோம். நம்மிடம் கண்ணீர் மல்கப் பேசினார். “நான் பதினைந்து ஆண்டுகாலம் அ.தி.மு.க-வே கதி என்று கிடந்தவன். அம்மாதான் உலகம் என்று வேலை செய்துவந்தேன். ஆனால் என் மீது இப்படி ஒரு களங்கத்தைச் சுமத்திவிட்டார்கள்” என்று தொடர்ந்தவர்...

“எனக்கு சசிகலா புஷ்பா அறிமுகம் ஆனது சில ஆண்டுகளுக்கு முன்புதான். இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைச் செயலாளராக அவர் பதவிக்கு வந்தபோது, ஒரு நாள் என்னிடம் வந்து புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வேண்டும் என்று பணம் கட்டினார். நானும் உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தேன். அதன் பிறகு, கட்சி அலுவலகம் வரும்போதெல்லாம் என்னிடம் வந்து பேசுவார். நமது எம்.ஜி.ஆர் பேப்பர் வாங்கி வரச் செல்வார். எல்லோரிடம் பழகுவது போலதான் என்னிடமும் பழகுவார். அந்தப் பழக்கத்தில் அவரது கணவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தூத்துக்குடி மேயர் ஆனதும் சென்னை வரும்போது மட்டும் பேசுவார். கட்சி தொடர்பாக உதவிகள் தேவைப் பட்டால் கேட்பார். செய்து கொடுப்பேன். இதில் என்ன தவறு? நான் ஆயிரம் ஆண்களுக்கு உதவிகள் செய்துள்ளேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு நட்பு ரீதியாக உதவி செய்ததை வைத்து இன்று என்னை இவ்வளவு கேவலப்படுத்துகின்றனர். அவர் குடும்பத்துக்கு நான் நன்றாக அறிமுகம் ஆனவன். அனைவரும் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். அவர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். என்மீது அவர் குடும்பத்தினர் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். எனக்குத் திருமணமாகி, குடும்பம் உள்ளது. அவருக்கும் குடும்பம் உள்ளது. கேக் ஊட்டும் போட்டோ எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். அவருடைய பிறந்த நாள் அன்று என்னை அழைத்து இருந்தார். நான் காலையில் போகமுடியாமல், அலுவலக வேலை முடித்து இரவுதான் அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுக்குப் போனநேரத்தில் அவரது குடும்பத்தினர் அனைவருமே வீட்டில் இருந்தார்கள், நான் வந்தவுடன், எனக்கு அவர் கேக் ஊட்டினார். அப்போது அவருடைய கணவர், அவரது அம்மா எல்லோரும் பக்கத்தில்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள போட்டோவில் பக்கத்தில் நின்ற அனைவரையும் கட் செய்துவிட் டார்கள். அப்படி கட் செய்து போட்டோவை வெளியிடவேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவருடன் ெடல்லிக்கு போவதாகச் சொல்கிறார்கள். நான் இதுவரை டெல்லியை பார்த்தது கூட இல்லை” என்றார்.
‘‘சசிகலா புஷ்பாவை எப்போது கடைசியாகச் சந்தித்தீர்கள்?” என்று கேட்டோம்.
“நான் அவருடன் பேசியே ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்
எம்.பி ஆனதற்குப் பின்னால் அவருடன் நான் பேசவே இல்லை. சந்திக்கவும் இல்லை. ஆனால் திடீரென்று இப்போது அவருடன் என்னைச் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள். சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த அந்த இரண்டு பெண்களையும் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். யாரோ சொல்லிக் கொடுத்துத்தான் அந்தப் பிள்ளைகள் பேசுகிறார்கள். என் குடும்பத்திலேயும் எனக்குப் பிரச்னை. நான் வெளியே தலைகாட்ட முடியாமல் வேதனையில் இருக்கிறேன்.சசிகலா புஷ்பாவைக் கல்யாணம் செய்துகொண்டேன் என்று சொல்வது உண்மை அல்ல. நிர்வாகிக்கும், கட்சி ஊழியனுக்கும் இடையே என்ன பழக்கம் இருக்குமோ அதுதான் எனக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் இடையே இருந்தது. என்னைப் பற்றி அம்மாவுக்குத் (ஜெயலலிதா) தெரியும். சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடைபெற்ற அன்று நான் சென்னையிலேயே இல்லை. அப்புறம் எப்படி என்னிடம் அம்மா விசாரித்திருக்க முடியும்? வேலையைவிட்டு நின்ற பின், நான் அம்மாவைச் சந்திக்கவே இல்லை. காலம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்” என்றார்.
ஆமாம்! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
-அ.சையது அபுதாஹிர்