தொடர்கள்
Published:Updated:

அடி... உதை... வன்மம்! - அவிழ்க்க முடியாத மர்மம்...

அடி... உதை... வன்மம்! - அவிழ்க்க முடியாத மர்மம்...
பிரீமியம் ஸ்டோரி
News
அடி... உதை... வன்மம்! - அவிழ்க்க முடியாத மர்மம்...

வெ.நீலகண்டன், தமிழ்ப்பிரபா, ஓவியம்: ஹாசிப்கான்

திருக்கோவிலூரிலிருந்து மூன்றரைக்  கி.மீ தூரத்தில் இருக்கிறது வெள்ளம்புத்தூர். 650 குடும்பங்கள் வசிக்கிற ஊர். ஓர் எல்லையில் காலனி என்றால், இன்னோர் எல்லையில் பழங்குடிக் குடியிருப்பு. நடுவில் ‘ஊர்.’ சாலையில் போடப்பட்டுள்ள வேகத்தடைகள், காலனியிலிருந்து ஊரைப் பிரிக்கின்றன. 

பயமும் பதற்றமும் கலந்த திகிலான அமைதியில் உறைந்திருக்கிறது வெள்ளம்புத்தூர். குறிப்பாக, காலனி. முகப்பில் உள்ள சிறு திண்டில் அமர்ந்து,  தென்படும் புதிய மனிதர்களை மிரள மிரளப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள். காலனியைச் சுற்றிலும் கருவேலமரங்கள் காடுகளாக அடர்ந்திருக்கின்றன.

குடியிருப்புகளின் இறுதியில் இருக்கிறது ஆராயி வீடு. கதவு தெறித்து உடைந்திருக்கிறது. வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறார்கள். ஆயினும் ஆங்காங்கே சில ரத்தத்துளிகள் தென்படுகின்றன.அந்த வீட்டை மரண  வாடை சூழ்ந்திருக்கிறது.

அடி... உதை... வன்மம்! - அவிழ்க்க முடியாத மர்மம்...

சில வாரங்களுக்கு முன் ஒரு நள்ளிரவில் ஆராயியின் வீட்டுக்குள் புகுந்த சிலர், அவரையும், அவரின் 13 வயது மகளையும், 9 வயது மகன் சமயனையும் கொடூரமாகத் தாக்கியதோடு  அச்சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளார்கள். சமயன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட, மிகவும் ஆபத்தான நிலையில் ஆராயியையும் சிறுமியையும் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை, இருவரும் சுய நினைவற்றுக் கிடக்கிறார்கள். சிறுமியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆராயியிடம் அவ்வப்போது அசைவு தெரிகிறது.

ஆராயியின் கணவர் ஏழுமலை நான்காண்டுகளுக்கு முன்பு காசநோயால் இறந்து விட்டார்.  ஆறு பிள்ளைகள். மூன்று மகன்கள் பெங்களூரில் கட்டுமானத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். மகள் அஞ்சுலெட்சம் ஈரோட்டில் ஒரு நூற்பாலையில் பணிபுரிகிறார். வன்முறைக்குள்ளான சிறுமி, தேவனூரில் உள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பும், சமயன் உள்ளூரிலேயே உள்ள தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பும் படித்தார்கள்.

மூத்த மகன் பாண்டியனுக்கு மட்டும் திருமணமாகியிருக்கிறது. சம்பந்தி ஊரான  வீரபாண்டியில் நடந்த திருவிழாவுக்குப் போய்விட்டு வீடு திரும்பியிருக்கிறார் ஆராயி. அன்று இரவுதான் இந்தக் கொடுரம் நடந்திருக்கிறது.

“எங்களுக்கு எதிரின்னு யாரும் இல்லை சார். சமயனுக்கு எட்டு வயசு சார்... அவனை எப்படிக் கொலை பண்ணியிருக்காங்க தெரியுமா? எலும்பெல்லாம் நொறுங்கிப்போச்சு. தங்கச்சி சின்னப்பொண்ணு சார்... அவளே குழந்தை மாதிரிதான்.  இத்தனை நாளாச்சு, இதுவரைக்கும் யாரு செஞ்சாங்கன்னே போலீஸால கண்டுபிடிக்க முடியலே. தங்கச்சிக்கு இன்னும் காதுல ரத்தம் வடிஞ்சுக்கிட்டிருக்குன்னு சொல்றாங்க. அம்மாவோட நிலையும் தெரியலே. ஆஸ்பத்திரிக்குள்ள விடவே மாட்டேங்கிறாங்க. எப்போ என்ன செய்தி வருமோன்னு பயந்துபோய் உக்காந்திருக்கோம்...”  என்கிற பாண்டியனின் கண்களில் நீர் திரள்கிறது. அவரது சகோதரர்களும் தங்கையும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

அடி... உதை... வன்மம்! - அவிழ்க்க முடியாத மர்மம்...

``ஆராயியக்கா, யாரு வம்பு தும்புக்கும் போகாத ஆளுங்க... சுதாரிப்பா இருக்கும். அவ்வளவு ஈஸியா ஒருத்தன் உள்ளே புகுந்து இந்தக் காரியத்தைப் பண்ணிட்டுப் போயிருக்க முடியாது. நாலைஞ்சு பேரு சேர்ந்துதான் பண்ணியிருக்கணும். சம்பவம் நடக்கிற அன்னிக்கு 10 மணி வரைக்கும் இதோ இந்தத் திண்டுலதான் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்துச்சு. பத்து மணிக்கு மேல ஊரே அமைதியாயிரும். பூனை கத்துனாக்கூட இந்தத் தெருவெல்லாம் கேக்கும். இவ்ளோ பெரிய காரியத்தைப் பண்ணியிருக்கான்... சின்ன சத்தம்கூட வெளியில வரலே சார்.  பக்கத்து வீடுகளுக்குக்கூடக் கேக்கலை...” - ஆராயி வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சுந்தரி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சாதிய ரீதியிலான தாக்குதலாக இருக்கலாம் எனத் தொடக்கத்தில் செய்திகள் பரவின. ஆனால், அதற்கான அடிப்படைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஊரில் அதற்கான சூழலும் தென்படவில்லை. 

இந்த வன்முறைச் சம்பவங்கள், வெள்ளம்புதூருக்குப் புதிதில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதேமாதிரி இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். மூவருமே வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். வீட்டில் இருந்த பெரியவர்களையும் பெண்களையும் தலையில் அடித்துக் காயப்படுத்தி, சுயநினைவு தப்பச் செய்தபிறகே வன்புணர்வு செய்திருக்கிறார்கள். சம்பவங்கள் நிகழ்ந்தபோது, அவர்களது வீடுகளுக்குச் சென்று விசாரணையெல்லாம் நடத்திய காவல்துறை, ஏனோ வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுகுறித்துக் கேட்டால், ``அப்பெண்களின் பெற்றோர் சரிவரப் பதில் சொல்லவில்லை”  என்கிறார் டி.எஸ்.பி அசோக்குமார்.

அடி... உதை... வன்மம்! - அவிழ்க்க முடியாத மர்மம்...

பெங்களூருதான் இந்த ஊர் இளைஞர்களின் தொழில்தளம். எட்டாம் வகுப்போ, பத்தாம் வகுப்போ படித்துவிட்டு பெங்களூருக்குக் கிளம்பிவிடுவார்கள். கட்டுமான வேலை, மார்க்கெட்டில் வண்டி இழுப்பது, மாலை கட்டுவது எனக் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்கிறார்கள். ``40 வருஷமா இப்படித்தான்.  பசங்க தலையெடுத்து வெளியுலகம் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னா, உடனே பெங்களூருக்கு ஓடிருவாங்க. அவங்க அனுப்பற பணத்தை வெச்சுத்தான் இங்கிருக்கிறவங்க ஜீவனம் பண்றாங்க.

ஆம்பளைங்க இல்லாத வீடுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் இந்தமாதிரிக் காரியத்தைப் பண்றாங்க. இந்த அளவுக்குக் கொடூரமா நடந்துக்கணும்னா, நிச்சயம் அவன் சைக்கோவாத்தான் இருக்கணும். ‘நாமதான் பெருசாப் படிக்க முடியலே, தம்பியையும் தங்கச்சியையுமாவது நல்லாப் படிக்க வெச்சிருவோம்’ன்னு அவ்ளோ வைராக்கியமா எல்லோரும் சேர்ந்து உழைச்சாங்க. பாவிப்பசங்க எதுக்கு இந்தக் குடும்பத்தை நாசம் பண்ணானுங்கனு தெரியலை...” - கலக்கமாகப் பேசுகிறார் இப்பகுதியைச் சேர்ந்த வெற்றி.

 ``இந்த ஊர்ல பொம்பளைகளுக்குப் பாதுகாப்பே இல்லை தம்பி. கொஞ்சநாள் முன்னாடி, வேலைக்குப் போய்ட்டு தேவனூர்ல இருந்து நடந்து வந்துக்கிட்டிருந்தேன். ஒருத்தன் பின்னாடியே வந்தான். ரயில்வே பாதையைத் தாண்டுறபோது, கொஞ்சம் நில்லுன்னு சொல்லிட்டு வேகமா வந்தான். சேலையை அள்ளிப்பிடிச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன். இதுமாதிரி நிறைய பெண்களுக்கு நடந்திருக்கு. தொகுப்பு வீடுகளுக்குள்ள வேக்காட்டுக் காலத்துல படுக்க முடியாது. கதவைத் திறந்து வெச்சுட்டுப் படுப்போம். பாவிப்பயலுக, நாலைஞ்சு வீடுகள்ள புகுந்து தாலிய அறுத்துக்கிட்டுப் போயிட்டானுவ. இப்பெல்லாம் வெளியில நடமாடவே பயமா இருக்கு.

பொம்பளைப் புள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியல. ஏற்கெனவே ரெண்டு சம்பவம் நடந்திருக்கு... இப்பவந்து நிக்குற போலீஸ்,  அப்பவே ஒழுங்கா நடவடிக்கை எடுத்திருந்தா இன்னிக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ராத்திரில ஒண்ணுக்குப் போகணும்னாக்கூட அடக்கி வெச்சுட்டு காலையிலதான் தம்பி போறோம்” என்கிறார், ஆராயி வீட்டுக்கு அருகில் வசிக்கிற பெண்.

ஆராயி குடும்பத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு ஊருக்குள் வராதிருந்த பேருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் வந்துபோகிறது. எரியாதிருந்த தெருவிளக்குகள் பளீரென்று எரிகின்றன. காலனியைச் சுற்றி அடர்ந்திருக்கும் மரங்களை வெட்டிச் சுத்தப்படுத்தியிருக்கிறார்கள். சமயன் புதைக்கப்பட்ட இடத்தில் புற்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. மிஞ்சியிருந்த முதியவர்களும் விசாரணைக்கு அஞ்சி வெளிக்கிளம்பிவிட்டார்கள். அடுத்த இலக்கு யார் என்ற அச்சத்தில், கதவை இறுகப் பூட்டிவிட்டு உறக்கம் வராமல்  தவிக்கிறார்கள் வெள்ளம்புத்தூர் பெண்கள்.

காவல்துறை வழக்கம்போல, விசாரித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சம்பவம் நிகழ்ந்தபிறகு, பொதுசமூகத்தின் நினைவிலிருந்து விலகிப்போய்விடுவார்கள் ஆராயியும் சமயனும், அந்தப் பரிதாபத்துக்குரிய சிறுமியும்!