
அதிர்ச்சி தரும் ஆவலப்பம்பட்டி
‘‘காவிரிக்காக ஒட்டுமொத்தத் தமிழகமும் போராட்டக் களமாக மாறியிருக்கும் சூழலில், எங்கள் ஊரில் அரசியல் புள்ளிகள் சிலர் ஆற்றுநீரை விற்றுக் காசு பார்க்கிறார்கள்’’ என்று கதறுகிறது ஒரு கிராமம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆவலப்பம்பட்டியிலிருந்து நமக்கு ஓர் அலைபேசி அழைப்பு. ‘‘பொள்ளாச்சி மற்றும் திருப்பூரின் முக்கிய நீர் ஆதாரமான பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டக் கால்வாய், எங்கள் ஊர் வழியே பாய்கிறது. கால்வாயையொட்டி நிலம் வைத்துள்ள அரசியல் பிரமுகர்கள் சிலர், பல வருடங்களாக ஆற்றுநீரைத் திருடி விற்கிறார்கள். அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஜூ.வி-தான் இதை அம்பலப்படுத்த வேண்டும்’’ என்று போனில் கதறியது அந்தக் குரல்.
ஆவலப்பம்பட்டிக்குப் புறப்பட்டோம். நமக்கு போன் செய்தவர், நான்கைந்து பேருடன் காத்திருந்தார். “எங்கள் பெயர்கள் வேண்டாம். இடத்தைக் காண்பிக்கிறோம். நீங்கள் பாருங்கள்’’ என வேண்டுகோள் வைத்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சில நிமிடப் பயணத்துக்குப்பின் ஓர் இடத்தை அடைந்தோம். அங்கு, கரையையொட்டிய நிலங்களில் ஏராளமான டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அங்கேயே பிரச்னையை விவரிக்க ஆரம்பித்தார் அவர்களில் ஒருவர். ‘‘பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்கள்... இரண்டு சுற்றுகள்... எனப் பிரித்துப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கிறது தமிழக அரசு. ஒரு சுற்றுக்கு 15 நாள் தண்ணீர் திறப்பதே குதிரைக்கொம்பு. அந்தத் தண்ணீரைத்தான், ‘இழுத்துக்கோ... பறிச்சுக்கோ’ என எல்லாரும் பாய்ச்சியாக வேண்டும். இந்தச் சுற்றுவட்டாரம் முழுக்கவே தென்னை விவசாயம். எனவே, தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகம்.
சில ஆண்டுகளுக்குமுன்பு கடைமடை விவசாயிகள் சிலர், கால்வாயை ஒட்டிய தோட்டங்களில் கொஞ்சமாக நிலங்கள் வாங்கி, அதில் கிணறு தோண்டி, கால்வாய் வரை சைடு போர்வெல் போட்டு, ஆற்றுத் தண்ணீரைக் கிணறுகளில் நிரப்பினர். பிறகு, கிணறுகளிலிருந்து டேங்கர் லாரிகள்மூலம் தங்கள் தோட்டங்களுக்குத் தண்ணீரைக் கொண்டுசென்றனர். ஊருக்குள் இது பெரிய பிரச்னையாக மாறியது. எனவே, வெளியூர்க்காரர்களுக்குக் கால்வாயை ஒட்டியுள்ள நிலங்களை விற்கக் கூடாது என ஊரே கூடி முடிவெடுத்தது. உள்ளூர்க்காரர்கள் மோட்டார் வைத்துக் கால்வாயிலிருந்து தண்ணீர் உறிஞ்சுவதைத் தடுப்பதற்காகவும் குழு அமைக்கப்பட்டது. கடைமடை விவசாயிகள், போலீஸ், மின்சார வாரியத்தினர் அடங்கிய கண்காணிப்புக் குழு அது. தண்ணீர் திறக்கப்படும் நாள்களில் இரவில் கால்வாயையொட்டி அந்தக் குழு ரோந்து போகிறது. ஆனாலும், அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தண்ணீரைத் திருடுகிறார்கள்.

இதில், முன்னாள் கவுன்சிலரான அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.வி.நடராஜன்தான் முக்கியமானவர். ஒரு நாளைக்கு 30 லாரிகளுக்கும் மேல் இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் ‘ஏற்றுமதி’ ஆகிறது. முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான பாலசுப்பிரமணியத்தின் தோட்டத்திலிருந்தும் ஏராளமான ட்ரிப் அடிக்கிறார்கள். இத்தனைக்கும் செங்குட்டுப்பாளையம் கிளை வாய்க்காலின் தலைவராக இருக்கிறார் பாலசுப்பிரமணி. இவர்கள் தவிர 10-க்கும் மேற்பட்டோர் இப்படித் தண்ணீர் பிசினஸில் இறங்கியுள்ளனர். ஒரு லாரி தண்ணீர் 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 லாரிகளுக்குக் குறையாமல் தண்ணீர் திருடுகிறார்கள். கால்வாயிலிருந்து தண்ணீரை உறிஞ்சுவதற்கு இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதுதொடர்பாக இரண்டுமுறை பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்துட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. தண்ணீர் திருட்டினால் கிணற்று நீர் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது’’ என்றார் கவலையுடன்.

இதுதொடர்பாக விளக்கம் பெறுவதற்கு நடராஜன் வீட்டுக்குச் சென்றோம். “நான் தண்ணீர் விற்கவில்லை. என் சொந்தக்கார விவசாயிகளின் தென்னந் தோப்புகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துபோயுள்ளன. அவர்களுக்குத்தான் தண்ணீர் கொடுக்கிறேன். காய்ந்த மரங்களைக் காப்பாற்றுவதற்குத்தான் தண்ணீர் கொடுக்கிறேனே தவிர, சம்பாதிப்பதற்கு அல்ல. பெட்ரோலுக்கும் வண்டி வாடகைக்கும் ஆகும் செலவை மட்டும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராத்திரியில் கால்வாயிலிருந்து தண்ணீர் திருடுகிறோம் என்று சொல்றதெல்லாம் சுத்தப் பொய்’’ என்றார்.
பாலசுப்பிரமணியோ, “கணக்கம்பட்டியில் எனக்கு 10 ஏக்கர் தோப்பு இருக்கிறது. அங்குதான் தண்ணீர் கொண்டுபோகிறேன். வெளியில் யாருக்கும் நான் தண்ணீர் விற்கிறது கிடையாது. எனக்கே தண்ணி இல்லை. நான் எப்படி விற்க முடியும்?’’ என்றார்.
ஆவலப்பம்பட்டியில் நாம் பார்த்ததை அப்படியே பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் தெரியப்படுத்தி னோம். ‘‘உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் இருக்கிறேன். இல்லையென்றால், நானே நேரில் வந்துவிடுவேன். விசாரித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று உத்தரவாதம் கொடுத்தார். அதன்பிறகு, ஆவலம்பட்டிக்குத் தாசில்தார், ஆர்.ஐ, வி.ஏ.ஓ உள்ளிட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்தச் சொல்லியிருக்கிறார் சப் கலெக்டர்.
நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்.
- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்