பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தேம்பி அழுகிறது தேசம்!

தேம்பி அழுகிறது தேசம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தேம்பி அழுகிறது தேசம்!

ம.குணவதி, தமிழ்ப்பிரபா, ஓவியங்கள்: ஹாசிப்கான், ரவி

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க, ‘செல்வமகள் சேமிப்புத்திட்டம்’   தொடங்கிய நரேந்திர மோடியின் ஆட்சியில்தான் இந்தியாவின் இரு மாநிலங்களில், இரு சிறுமிகள் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு சம்பவத்திலும் ஏதோ ஒருவகையில் பா.ஜ.க-வினர் சம்பந்தப்பட்டிருப்பது, தேசமெங்கும் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் எழுப்பியிருக்கிறது.

 எட்டு வயது காஷ்மீர் சிறுமியின் மரணம், ஒவ்வொருவர் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. ஆனால், குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் போன மனசாட்சியற்றவர்களோ, இப்போது  அந்தச் சிறுமியின் பெற்றோர் சார்பாக வாதிடும் வழக்கறிஞர் தீபிகா எஸ்.ராஜாவாட்டையும் வன்புணர்வு செய்துவிடுவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார்கள். 

 ஜனவரி 10-ம் தேதி மதியம் 12:30 மணிக்கு , எப்போதும்போல மேய்ச்சல் நிலங்களுக்கு அந்தச் சிறுமியோடு சென்ற குதிரைகள் மாலை நான்கு மணி வாக்கில் வீடு திரும்பின. ஆனால், அழைத்துச் சென்ற சிறுமி மட்டும் வீடு திரும்பவேயில்லை. அது அவளுக்கு நன்கு பரிச்சயமான காடுதான். ஆனாலும் அவள் தொலைந்துபோனாள்.

பொழுது கழிந்த பின்னும், குழந்தையைக் காணவில்லையே என்ற பதற்றத்தில் காட்டில் சல்லடை போட்டுத் தேடியும் அவளது பெற்றோரால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘யாரேனும் குழந்தையைக் கடத்தியிருக்கக்கூடும்’ என்று கருதியவர்கள் புகார் அளிக்கச் சென்றபோது காவல்துறை அதிகாரி முன்ஷி, புகாரைப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு, 12-ம் தேதிதான் புகார் பதிவுசெய்யப்பட்டது.

தேம்பி அழுகிறது தேசம்!

அதற்குப்பிறகும், காவல்துறை மெத்தனமாகத்தான் தேடியிருக்கிறது. ஜக்தீஷ்ராஜ்  என்ற பழங்குடி இளைஞர் தன் குதிரையைத் தேடிக் காட்டுக்குள் சென்று வந்தபிறகு கொடுத்த தகவலின்பேரில்தான் 17ம் தேதி வாக்கில் கடுமையான காயங்களோடு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் அந்தச் சிறுமி. கத்வா மாவட்ட மருத்துவமனையில்  பிரேதப் பரிசோதனை முடித்து, குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சௌதா என்ற இறுதி நிகழ்வின்போது, சிறுமியின் மரணத்துக்காக நீதி கேட்டுக் குரலெழுப்பியவர்கள் மீது தடியடி நடத்தவும் தயங்கவில்லை காவல்துறை.

கிராமத்துப் பெண் ஒருவர், ‘சாஞ்சிராம்  பட்வாரி என்பவரின் வீட்டிலிருந்து சிறு குழந்தையின் அழுகுரல் கேட்டபடியே இருந்தது’ என்ற தகவலை அந்தச் சிறுமியின் தாயாரிடம் கூற, விசாரணை வேறு திசையில் திரும்பியது.காவல்துறையின் மோப்ப நாய், சாஞ்சிராம் பட்வாரி என்பவரின் மாட்டுக்கொட்டிலுக்கே சென்றது.

சாஞ்சிராம் பட்வாரி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மற்றும் தேவிஸ்தான் கோயிலின் நிர்வாகி. காவல்துறை அதிகாரிகள் தீபக் கஜூரியா, சுரீந்தர்குமார் உள்ளிட்ட எட்டுப் பேர் இந்தக் குற்றத்தை இழைத்ததாகக் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமை நடந்தது தேவிஸ்தான் கோயிலில். ஐந்து நாள்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, காட்டில் தூக்கிவீசப்பட்டிருக்கிறாள்.

இந்தக் கொடூரத்துக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதுதான் மனித அறம். ஆனால், மத அடையாளத்தை முன்னிறுத்தி,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற இந்துத்துவ அமைப்பு பேரணி நடத்தியது. பேரணியில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்  பா.ஜ.க-வைச் சேர்ந்த காஷ்மீர் வனத்துறை அமைச்சர் சௌத்ரி லால் சிங், தொழில்துறை அமைச்சர் சி.பி.கங்கா உள்ளிட்டவர்கள்.

ஆணாதிக்கத் திமிர், அதிகார போதை, மதவாத அரசியல் என்று பல விஷயங்கள் இந்த அநீதி ஆதரவின் பின்னே உள்ளது. அத்துடன் பழங்குடி மக்களுக்கு எதிரான மனநிலையும் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவரான சாஞ்சி ராம், பழங்குடியினரை அச்சுறுத்தி அவர்கள் இனி ஊருக்குள் வராதபடி செய்ய விரும்பினார் என்று முதல் தகவல் அறிக்கையிலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இறந்துபோன அந்தச் சிறுமி பகர்வால் என்னும் இஸ்லாமிய நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பெருவாரியாக உள்ள குஜ்ஜார் என்ற சமூகத்திலிருந்து கிளைத்தவர்கள். பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், மேய்ச்சல் நிலத்தைத் தேடியும் இடம்பெயர்ந்து மலைப்பகுதிக்கு வந்த இந்தச் சமூகத்தினர், இடம்பெயர்வதை இயல்பாகக் கொண்டுள்ளனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ச்சியாகவே இந்தியா முழுவதிலும் பழங்குடியினர் காடுகளிலிருந்து அகற்றப்படும் சூழலில், காஷ்மீர்க் காடுகளிலிருந்து பகர்வால் இனத்தவரை வெளியேற்றும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

இந்தியா முழுக்கப் பழங்குடிகளுக்கென இருக்கும் ‘வனவுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 2006’ சிறப்பு அந்தஸ்து காரணமாகக் காஷ்மீரில் செல்லுபடியாகாது. காஷ்மீரத்துப் பழங்குடிகள் இந்தச் சட்டத்தை ஜம்முவுக்கும் நீட்டிக்க வேண்டுமென நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்துவருகிறார்கள். ‘அப்படி நீட்டிக்க வேண்டுமானால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று பா.ஜ.க கூறுகிறது. 

எப்படி இருந்தபோதும் குரலற்றவர்களாக, கோரிக்கைகள் கவனிக்கப்படாதவர்களாக, புறக்கணிப்பின் வெம்மையில் தள்ளப்பட்டவர்களாக இந்த எளிய மக்கள் இருக்கிறார்கள். சிறுமியின் இறுதி அடக்கம் நடந்த கிராமத்துக்கு, குடிநீர் வினியோகம் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டது. கால்நடைகள் தண்ணீரின்றி வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அதிகார வர்க்கம் முடிந்தவரை தன் பலத்தைப் பிரயோகித்துப் பார்த்தபின்னும், நீதியின் வெளிச்சம் கசிந்துதான், இப்போது இந்தச் சம்பவம் தேசம் முழுவதும் விவாதமாய் மாறியிருக்கிறது.

இன்று அந்தச் சிறுமி இயற்கையோடு கலந்து புல்லாகவும் பனியாகவும் மாறிவிட்டாலும்  நீதிக்கான  குரல் எழுப்ப வேண்டியது, இந்தியாவில் வாழும் எல்லாச் சிறுமிகளுக்காகவும்தான்.

இது காஷ்மீர் அவலம் என்றால் உத்தரப்பிரதேசத்துத் துயரமும் நெஞ்சம் கனக்கச் செய்வது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் ஒரு சிறுமி, உதவி கேட்டு  பா.ஜ.க எம்.எல்.ஏவான குல்தீப் சிங்கிடம் சென்றிருக்கிறார். உதவி கேட்டு வந்த சிறுமியை எம்.எல்.ஏ மற்றும் சகோதரர் உட்பட சிலர் கூட்டாகச் சேர்ந்து வன்புணர்வு செய்திருக்கிறார்கள். தான் வன்புணர்வு செய்யப்பட்டோம் என்று அந்தச் சிறுமியும் அவர் குடும்பமும் குறுகிப்போய் மூலையில் உட்கார்ந்துவிடவில்லை. செய்தவர்கள் செல்வாக்குள்ளவர்கள் என்றாலும் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையில் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார்கள்.  புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி அந்தச் சிறுமியின் தந்தையை எம்.எல்.ஏ-வின் அடியாட்கள் தாக்கியிருக்கிறார்கள்.

இதையும் புகாராகக் காவல்நிலையத்தில் கூறியிருக்கிறார்கள். பல நாள்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருந்தாலும் அந்தக் குடும்பம் சளைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு முன் சென்று நீதி கேட்டுப் போராடுகிறார். ஒருகட்டத்தில் சலிப்படைந்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். உடனே காவல்துறையினரால் அந்தச் சிறுமி அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்.

தேம்பி அழுகிறது தேசம்!

அதன்பிறகு நடந்ததுதான் அநீதியின் உச்சம்.  அச்சிறுமியின் தந்தை மீது, பழைய வழக்கு ஒன்றின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து,  போலீஸ் காவலில் அழைத்துச் செல்கிறார்கள்  காவல்துறையினர். போலீஸ் காவலில் இருந்த அந்தச் சிறுமியின் தந்தை இறந்துபோனதால், இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தான் பாதிக்கப்பட்டு,  தந்தையையும் இழந்த அந்தச் சிறுமி செய்த தவறு உதவி கேட்டு எம்.எல்.ஏ - விடம் சென்றது மட்டுமே.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சமீபத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நீதித்துறை மீதும் கடவுள் மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். காதலர் தினத்தை எதிர்ப்பது, ‘கலாசாரத்தைக் காப்போம்’ என்று முழங்கி கேளிக்கை விடுதிகளில் நுழைந்து பெண்களை அடித்து உதைப்பது, திரைப்படங்களுக்கு மிரட்டல் விடுப்பது என்று கலாசாரக் காவலர்களாய்த் தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் பா.ஜ.க-வைச் சேர்ந்த  எம்.எல்.ஏ ஒருவரே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதும், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களே ஊர்வலம் போவதும், ‘இதுதானா நீங்கள் காப்பாற்ற விரும்பும் கலாசாரம்?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.

2010-ல் பா.ஜ.க எம்.எல்.ஏ த்விவேதியால் தான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக ஒரு பெண் குற்றம் சாட்டி, யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதம் உ.பி. மீடியாக்களில் பரபரப்பாக  விவாதிக்கப்பட்டது, பிரச்னையின் தீவிரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

 காஷ்மீரிலும் உத்தரப்பிரதேசத்திலும் மட்டும் அநீதியின் கரங்கள் தீண்டி நின்றுவிடவில்லை. தொடர்ச்சியாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.

சாதி, மதம், அரசியல் எல்லாவற்றையும் தாண்டி, இந்தச் சிறுமிகள் செய்த தவறு இந்தியாவில் பிறந்ததும், பெண் குழந்தையாக இருப்பதும்தானா?

ந்தியாவில் உள்ள 30% சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். அதாவது, தற்போது பதவியிலிருக்கும் 1581 பேர்மீது  கிரிமினல்  வழக்குகள் இருக்கின்றன. அதில், 3 எம்.பி, 48 எம்.எல்.ஏ என 51 பேர் பெண்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அதில் 4 பேர் மீது வன்புணர்ச்சி வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க 34 வழக்குகளோடு முன்னணியில் இருக்க, சிவசேனை 7 பேருடன் இரண்டாவது இடத்திலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 6 இடங்களோடு மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

தேம்பி அழுகிறது தேசம்!

இந்தியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி...

 2016 - 1,06,958 குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 222 ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றவை.

  2016 - 1775 குழந்தைகள் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள்.

காஷ்மீரில் பதிவான குழந்தைகள் கொலை மட்டும் - 6.

கடத்தப்பட்ட குழந்தைகள்:

இந்தியா முழுவதும் - 54,723. 

ஜம்மு -காஷ்மீர் - 168.