
தெ.சு.கவுதமன், படங்கள்: வெ.நரேஷ் குமார், ப.பிரியங்கா ஓவியம்: ஹாசிப்கான்
விஜய் மல்லையா, நீரவ் மோடி என்று பெரும்பணக்காரர்கள் வங்கிகளிடமிருந்து கடனைப் பெற்றுவிட்டுக் கட்டாமல் கம்பி நீட்டும்போது எல்லாம், “இதுக்குத்தான் வங்கிகளை எல்லாம் தனியார்மயம் ஆக்கணும்கிறது” என்கிற குரல்களை நாம் கேட்கத் தொடங்குவோம். ஆனால் இப்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலேயே ‘வீடியோகான்’ வேணுகோபால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வாராக்கடன்கள் எப்படி உங்களையும் என்னையும் பாதிக்கிறது... ஒரு பார்வை பார்த்துவிடலாமா?

வாராக்கடன் என்றால் என்ன?
இன்றைய வங்கி விதிமுறைகளின்படி, வங்கிகளிடமிருந்து வாங்கிய தொழில் கடனை 90 நாள்களுக்குமேல் அசல் மற்றும் வட்டியைச் செலுத்தாமல் விட்டால், அந்தக் கடனுக்குப் பெயர்தான் ‘வாராக்கடன்.’
வங்கிகள் எப்போது தொடங்கப்பட்டனவோ, அப்போதிலிருந்தே வாராக்கடனும் இருக்கிறது. ஆனால், சிறியளவில் இருந்த வாராக்கடன் கள் இன்று 9.5 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்திருப்பதுதான் வங்கிகளின் சிக்கலுக்குக் காரணம்.
வாங்கும் கடனே 100 கோடிக்குமேலதான்!
1991-ம் ஆண்டுக்கு முன்புவரை இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 90 சதவிகிதக் கடன்கள் 25,000 ரூபாய்க்கும் குறைவானவை. விவசாயிகளுக்கும் சிறுதொழில்களுக்கும் கடன் வழங்கும்படி அரசாங்கமே அறிவுறுத்திய காலம் அது. ஆனால் 1991-க்குப் பிறகு அரசாங்கம், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடனுதவி வழங்குவதை ஊக்கப்படுத்தியது.
2017ல் மட்டும் இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும்மேல் வங்கிக்கடன் பெற்றவர்கள் 11,643 பேர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் என்பது, மொத்த வங்கிக் கடனில் 38.4%. அதாவது, மூன்றில் ஒரு பங்கு. வாங்கிய கடனை ஒரே ஒரு நிறுவனம் சரியாகத் திரும்பச் செலுத்தாவிட்டாலும்கூட வங்கிகளுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும்.

அனுபவம் இல்லாதவர்களுக்குக் கடன் தந்தால்..?
‘‘ தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அதீதத் தன்னம்பிக்கையில்தான் நினைத்தபடியெல்லாம் செயல்பட்டு, தொழிலில் நஷ்டப்பட்டு, கடனில் சிக்கிக் கொள்கிறார்கள் பலர். அதிக முதலீட்டில் தொழில்களைத் தொடங்குபவர்களுக்கு அந்தத் தொழில் குறித்த கல்வி அவசியம் என விதிமுறைகள் வரவேண்டும். ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கு பவர்களுக்கு (TAFE - Technical and Further Education) கூடுதல் தொழிற்கல்விச் சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது. அதேபோல, இங்கும் தொழில் தொடங்க, அந்தத் தொழில் சார்ந்த கல்வியறிவு கட்டாயமாக் கப்பட வேண்டும். தகுந்த ஆலோசனைகள் கூறிச் சரிசெய்ய, தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் வங்கிகள் வசம் கிடையாது’’ என்று வங்கித் துறையின் இயலாமைகளைப் போட்டுடைத்தார் நிதித்துறை நிபுணர் எஸ்.சிவக்குமார்.
இந்த ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி எல்லாம் யாரு?
``90-களில் நீண்டகாலக் கடன்களை, வளர்ச்சி நிதி நிறுவனங்களாக இருந்த ஐ.சி.ஐ.சி.ஐ., ஐ.டி.பி.ஐ.,
ஹெச்.டி.எஃப்.சி., ஐ.டி.எஃப்.சி ஆகியவை வழங்கிவந்தன. பிற்பாடு இந்த மூன்று நிறுவனங்களையும் வங்கிகளாக மாற்றி, நீண்டகாலக் கடன்களைக் கொடுக்கும் வேலையில் இறக்கிவிட்டார்கள்.
பொதுவாக, வங்கிகள் நீண்டகாலக் கடன் கொடுக்கக் கூடாது. ஏனெனில், வங்கிகளில் இருப்பவை பொதுமக்களின் வைப்புநிதி. இந்தப் பணத்தை அவர்கள் கேட்கும்போது அதைத் திரும்பக் கொடுத்தாக வேண்டும். இந்த அடிப்படைத் தவற்றைப் புரிந்துகொள்ளாமல் நீண்டகாலக் கடனை வங்கிகள் கொடுக்கத் தொடங்கியதிலிருந்தே பிரச்னை பெரிதாகத் தொடங்கியது.

பெரிய நிறுவனக் குழுமங்கள், தொழில் போட்டியைச் சமாளிப்பதற்காக அவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்டுப் பல புதிய நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். வங்கி அதிகாரிகளும் அந்த நிறுவனங்களின் முந்தைய சாதனையை மனதில்கொண்டும், அவர்களிடம் ஆதாயத்தை எதிர்பார்த்தும், புதிய நிறுவனங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இன்றிக் கடன் வழங்குகின்றனர். அதேபோல, கொடுத்த கடனை முறையாகப் பயன்படுத்துகிறார்களா எனக் கண்காணிப்பதிலும் தவறிவிடுகின்றனர். கடன் வாங்கிய நிறுவனங்களும் அந்தத் தொகையைத் தவறாகப் பயன்படுத்தி வாராக்கடன் பட்டியலில் சேர்ந்துவிடுகின்றன. வீடியோகான் நிறுவனக் குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் இந்த வகையில்தான் சேரும்’’ என்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்.

வங்கிகளுக்கு ஆபத்தா?!
``2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிபோல நமக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வங்கிகள் திவாலாகும் நிலை வரும். வரும் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் மொத்த இழப்பு தோராயமாக 88,000 கோடியாக இருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள். பொதுத்துறை வங்கிகளோடு சில தனியார் வங்கிகளும் நஷ்டமடையக்கூடும். இதனால் வங்கிகளில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் மக்களின் பணத்துக்கும் ஆபத்து வரும்’’ என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்!
தொழிலதிபர்கள் வங்கிகளில் கட்டாமல் கம்பி நீட்டும் பணம் என்பது சாமான்ய மக்கள் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்திருக்கும் பணம்தான். அது வெறுமனே கரன்சி நோட்டுகள் அல்ல, சாதாரண மக்களின் நம்பிக்கை, உழைப்பு, குடும்ப பாரம், எதிர்காலம். இவையெல்லாம் சிதையாமல் இருக்க, வங்கிகளை ஏமாற்றும் பண முதலைகளைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறது அரசாங்கம்?
விஜய் மல்லையா - தொடரும் சிக்கல்!
பல்வேறு வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன் ரூ.9 ஆயிரம் கோடியைத் தராமல், லண்டனில் கவலையில்லாமல் ஜாலியாக இருக்கிறார் விஜய் மல்லையா. அவரது சொத்துகளை முடக்க, சட்டத்தில் வழியில்லை. கிங்ஃபிஷர் நிறுவனத்துக்காகக் கடனுதவி பெற்றபோது, அந்த விமான நிறுவனம் மற்றும் அதற்குரிய தலைமையகக் கட்டடம் ஒன்றையும் மட்டுமே பிணையாகக் காட்டியுள்ளார் மல்லையா. அவருடைய மற்ற சொத்துகள் யுனைடெட் ப்ருவெரீஸ் நிறுவனத்தின் பெயரில் இருக்கின்றன. அந்த நிறுவனத்திலிருந்த அவருடைய பங்குகளின் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு விற்றதால், அந்த நிறுவனத்தின் தலைவராக வேறு ஒருவர் இருக்கிறார். ஆக, அது விஜய் மல்லையாவின் நிறுவனம் கிடையாது என்பதால், அந்த நிறுவனத்தை முடக்குவது சட்டப்படி முடியாது. இப்படித்தான் மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு இன்னமும் தனது சொத்துகளை முழுமையாக இழக்காமல் குதூகலமாக இருக்கிறார் விஜய் மல்லையா. அவருடைய சொத்துகளைக் கைப்பற்றி, அதை விற்று, பணமாகப் பெறுவதில் வங்கிகள் சந்திக்கும் சிக்கல் தொடர்கதையாகவே இருக்கிறது.

‘‘ரிஸ்க்கைக் கணிக்கும் திறமை வங்கிகளுக்கு இல்லை!’’
டாக்டர் அனந்த நாகேஸ்வரன்,
சர்வதேசப் பொருளாதார நிபுணர்
‘‘வாராக் கடன் இவ்வளவு தூரம் உயரக் காரணம், 2008-க்குப்பிறகு மோசமான தொழில்களுக்குக் கடன் தருவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான். மேலும், பப்ளிக் - ப்ரைவேட் பார்ட்னர்ஷிப் மூலம் தொடங்கப்பட்ட கட்டுமானத் திட்டங்கள் மிகக் குறைந்த மதிப்பில் அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டன. இதனால் இந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை இழந்து, வாங்கிய கடனைத் திரும்பத் தரமுடியாத நிலையை அடைந்தது.
வாராக் கடன் பிரச்னையைத் தீர்க்க, தொடர்ச்சியான நடவடிக்கை தேவை. ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை. தவிர, ஒவ்வொரு பிசினஸிலும் உள்ள ரிஸ்க்கைக் கணிக்கும் திறமை பெற்றிருப்பதுடன், அந்த ரிஸ்க்கைத் தொடர்ந்து கண்காணிக்கும் திறமையும் வேண்டும். இப்போதைய நிலையில், பொதுத் துறை வங்கிகளுக்கு இந்தத் திறமை இல்லை என்பது வேதனை தரும் உண்மை’’.