
மிரட்டிய போலி அதிகாரி... ஏன் ஓடினார் எம்.எல்.ஏ?
விஜிலென்ஸ் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான இ.கருணாநிதியிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மிரட்டல் சம்பவத்துக்குப் பின்னணியில் பல மர்மங்கள் மறைந்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், ‘‘நான் விஜிலென்ஸ் அதிகாரி வரதராஜன். எங்களுக்குக் கிடைத்த முக்கிய ஃபைல் அடிப்படையில் உங்கள் வீட்டில் ரெய்டு நடத்தவுள்ளோம். ரெய்டு நடத்தாமல் இருக்க 15 லட்சம் ரூபாய் தர வேண்டும்’’ என்று கூறியுள்ளார். குரோம்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் காத்திருப்பதாக அந்த நபர் சொன்னதால், உடனே காரில் கிளம்பி அங்கு சென்றுள்ளார் கருணாநிதி.

“எம்.எல்.ஏ-விடம் அந்த நபர், தான் ஒரு விஜிலென்ஸ் அதிகாரி என்று அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். அதைப் பார்த்ததும் எம்.எல்.ஏ-வுக்கு சந்தேகம் வந்துள்ளது. பணத்தை எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டு வந்த எம்.எல்.ஏ., சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். பிறகு, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் டிரைவரைப் போல கருணாநிதியுடன் காரில் சென்றுள்ளார். சுதாரித்த வரதராஜன் தப்பிவிட்டார். செல்போன் சிக்னல் மூலம் அந்த நபர் திருவொற்றியூர் பெரியார் நகரில் இருப்பதைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தனர்” என்றார், கருணாநிதியின் வழக்கறிஞர் ராஜாராம்.
‘‘வரதராஜன் திரைப்படங்களில் துணை நடிகராகவும், சீரியல்களிலும் நடித்து வருவதும் தெரியவந்தது. ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்துள்ளார். அதனால் கடனில் சிக்கித் தவித்த அவர், வசதிபடைத்தவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை மிரட்டிப் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். யாருக்கு ஸ்கெட்ச் போடலாம் என யோசித்தவர், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை மிரட்டினால் பிரச்னை ஏற்படாது என்று தீர்மானத்துக்கு வந்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் விவரங்களை இணையத்தில் தேடியுள்ளார். வி.ஜி.ராஜேந்திரன், அரவிந்த் ரமேஷ், சேகர்பாபு, கே.பி.பி.சாமி, இ.கருணாநிதி ஆகிய தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் போன் நம்பர்களைச் சேகரித்துள்ளார். வரதராஜன் போன் செய்தபோது, கருணாநிதியைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் யாரும் எடுக்க வில்லை. இதனால், கருணாநிதியை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார்’’ என்றனர் போலீஸார்.
“இந்த நபர் என்னை மிரட்டிப் பணம் கேட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை போலீஸார் விசாரிக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. இந்த மிரட்டல் சம்பவத்தின்போது பல காமெடிகள் நடந்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறினார். “போனில் வரதராஜன் மிரட்டியதும், அலறியடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு எம்.எல்.ஏ சென்றுள்ளார். ஹோட்டலில் வரதராஜனுக்கு எம்.எல்.ஏ குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி கேமரா பதிவில் உள்ளன. வரதராஜன் பார்ப்பதற்கு போலீஸ் கெட்டப்பில் இருந்ததால், அவர் மிரட்டியதும் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்காமல் பணத்துடன் எம்.எல்.ஏ தனியாகச் சென்றுள்ளார்.
கருணாநிதியிடம் எதுவும் தவறு இல்லை என்றால், அவர் ஏன் அவ்வளவு அவசரமாக ஓட வேண்டும்? எம்.எல்.ஏ தொடர்புடைய முக்கிய ஆவணம் வரதராஜனிடம் இருப்பதாக எங்களுக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது. கருணாநிதியை மட்டுமல்லாமல் இன்னும் சிலரையும் வரதராஜன் மிரட்டிப் பணம் சம்பாதித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கருணா நிதியை மிரட்டிய சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம்” என்றார் அந்த போலீஸ் அதிகாரி.
என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது!
- எஸ்.மகேஷ்