Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - 4

“அதாவது கண்ணுங்களா!” - 4
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - 4

ஜான்ஸி ராஜா

‘‘பெண் என்றால் வீட்டில் அடங்கிக் கிடக்க வேண்டுமா? ஆண்களுக்குப் பணிவிடை செய்வதுதான் பெண்ணின் கடமையா? நமக்கும் சுயமரியாதை இருக்கிறது. நம்மாலும் தனித்து வாழ முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்’’ என்று ஆவேசமாகப் பெண்கள் மத்தியில் உரையாற்றுவார் அந்தப் பேராசிரியை. பெருமைக்குரிய அடையாளமான காப்பியத் தலைவியின் பெயர்கொண்டவர். ஆனால், இந்தப் பேச்சின் பின்புலம் தெரியாமல் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாகப் பலர் வீழ்ந்துவரும் கதைதான் சோகமானது. கல்வியை வளர்க்க வள்ளல் பெருமகனார் தொடங்கிய கல்வி நிறுவனத்தில், கலவியை எப்படிப் பயன்படுத்துவது என்று பாடம் எடுக்கும் இந்தப் பேராசிரியைக்கு பெண்கள் மேம்பாட்டுத் துறையே கையில் கிடைத்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“அதாவது கண்ணுங்களா!” - 4

நுனிநாக்கில் ஆங்கிலம், கலரிங் பண்ணிய கூந்தல், பார்ப்பவரை வசீகரிக்கும் மேக்கப்... இவைதான் அந்தப் பெண் பேராசிரியரின் அடையாளம். வீடுகளுக்கும் விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்ற நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இவர் தனி சாம்ராஜ்ஜியமே நடத்திவருகிறார். இவர் வளர்ந்த கதையைக் கேட்டாலே இவரின் வலைவிரிக்கும் லீலைகளின் ஆரம்பப் புள்ளியை அறிந்துகொள்ளலாம். சக்தி பெயர் கொண்ட கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர், பட்டயப் படிப்புக்காக, விருந்தோம்பல் நகரப் பல்கலைக்கழகத்தில் என்ட்ரி ஆனார். வசீகரிக்கும் குரலும், யாரையும் கவர்ந்து இழுக்கும் பார்வையும் இவருக்கு இயற்கை கொடுத்த அருட்கொடை. அதையே தன்னை வளர்த்துக்கொள்ளும் மூலதனமாக ஆக்கிக்கொண்டார். பட்டயப் படிப்பில் நெறிகாட்ட வந்த பேராசிரியர்தான் இவரது முதல் விக்கெட். அவரை வீழ்த்தியதுடன், அவர் வீட்டருகே குடிபுகுந்து பேராசிரியரின் குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டார். பேராசிரி யரின் மனைவியுடன் மல்லுக்கட்டு வரை விவகாரம் சென்றது. வசீகர வலையில் சிக்கிய அந்தப் பேராசிரியர் உதவியுடன் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியை வளைத்தார் காப்பிய நாயகி. அதன்பிறகு விஸ்வரூப வளர்ச்சி. 

மஞ்சள் நிற தேகம், வசீகர உடலமைப்பு என சக பேராசிரியர்கள் மத்தியில் தனியாக ஜொலித்த இவரைப் பார்த்து பல துறைத் தலைவர்களே மயங்கிவிழ ஆரம்பித்தார்கள். அதையே சாதகமாக்கி, முக்கியத் துறை தலைவர்களுடன் அவ்வப்போது குளுகுளு பிரதேசங்களுக்குப் பறக்க ஆரம்பித்தார். உழைப்புக்கு ஏற்ற பலன் வேண்டும் என முடிவு செய்தவர், தனது மனதில் வைத்திருந்த ஆசையைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தின் உச்சபட்ச பதவிதான் அவரது நோக்கம். அதற்குப் பல்கலைக்கழகத்தின் செல்வாக்கு மட்டும் போதாது, அரசியல் செல்வாக்கும் வேண்டும் என்பதை உடனேயே புரிந்துகொண்டார். அடுத்த இலக்குக்குத் தயாரானார்.

மத்தியில் கதர்ச் சட்டையும், மாநிலத்தில் கழக ஆட்சியும் இருந்த காலம் அது. தனது அடுத்தப் பாய்ச்சலுக்குத் தயாரானார் காப்பியத் தலைவி. அறம்காக்கும் அமைச்சருக்கு வலைவீச்சை நடத்தினார். அதே நேரம், பேராசிரியைக்கு அடுத்த ஜாக்பாட் அடித்தது. இவரை வைத்து சுய உதவிக்குழுக்களுக்குப் பயிற்சி கொடுக்கும் திட்டம் அரசால் அளிக்கப்பட்டது. பொன்முட்டையிடப் போகும் வாத்துகளாகவே சுய உதவிக்குழுப் பெண்களைப் பார்க்க ஆரம்பித்தார்.

“அதாவது கண்ணுங்களா!” - 4

வீட்டுக்குள் அடங்கிக்கிடந்த அந்தப் பெண்களுக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ‘‘வெளியுலகம் தெரிய இத்தனை வருஷமாயிடுச்சு உங்களுக் கெல்லாம்... சுதாரிப்பா இருந்தா பொழைச்சுக்க லாம்’’ இப்படித்தான் அக்கறையாக அவர்களிடம் பேச ஆரம்பிப்பார். கறுப்பாக, வயதான தோற்றத்தில் இருப்பவர்களைப் புறம்தள்ளிவிட்டு, 20 முதல் 30 வயதுள்ள பெண்கள்மீது தனிக்கவனம் செலுத்துவார்.

‘‘முன்னேறணும்னு ஆசை மேடம். ஆனா வீட்டு வேலைக்கே நேரம் சரியா இருக்கு.’’ இதுதான் பெண்கள் சொல்லும் முதல் வேதனை.

‘‘பெண்கள் சொந்தக்கால்ல நிக்கணும். ஆம்பளைங்க நேரம் காலம் பார்க்காம உழைக்கிறாங்க. பொம்பளைங்க உழைச்சாலும் நேரம் காலம் பார்க்காம உழைக்கணும்.’’ என்பார் பெருமையாக.

‘‘இரட்டை மாட்டு வண்டி போலத்தான் குடும்பம்... ஒரு மாடு சும்மா இருந்தா எப்படி?’’ என்பார்.

‘என்ன அழகா விளக்குறாங்க’ என பெண்கள் கூட்டம் ஆச்சர்யமாகக் கேட்கும்.

கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்பார். அவர்களில் யார் தொடர்ந்து முனைப்புடன் பேசுகிறார்கள் எனக் காத்திருப்பார். வலையில் வாளிப்பான மீன்கள் சிக்கும். அவர்களைப் பெரிய மனிதர்களிடம் பேச வைப்பார். கூச்சப்படுப வர்கள், ஒதுங்கி நிற்பவர்கள், தயக்கம் காட்டுபவர்கள் எனப் பெண்களிடம் வித்தி யாசம் இருக்கும். ‘இவர்கள் வழிக்கு வருவார்கள்’ என்பதைப் பார்வையா லேயே எடை போடத்தெரிந்தவர் காப்பிய நாயகி.

‘‘சாருக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு’’ என வார்த்தையை விட்டுப் பார்ப்பார். முகக் குறிப்பு எல்லாவற்றையும் ஒரு நொடியில் விளக்கிவிடும்.

குழுவில் உள்ள பெண்களை வெரைட்டியாகப் பிரித்தார். யார் எளிதில் கைகூடுவார்கள், யார் கொஞ்சம் பிகு பண்ணுவார்கள் என மனதில் கணக்குப் போட்டவர், ஆளுக்குத் தகுந்தவாறு வார்த்தை ஜாலங்களைக் கையாள ஆரம்பித்தார். இவரது துறையில் மாணவிகள் குறைவு என்பதால், குழுவில் உள்ள குடும்பப் பெண்களைக் குறிவைத்துக் காய்நகர்த்தினார். குடும்பக் கஷ்டம், ஆடம்பர ஆசை இருக்கும் பெண்களை நோக்கிக் காய்நகர்த்தினார். இதுதான் இந்தக் காப்பியத் தலைவிக்கு பலம். அதைக் காட்டியே மந்திரியை மகிழ்ச்சியூட்டும் வேலையைக் கச்சிதமாகச் செய்தார்.

அதே காலகட்டத்தில் மத்தியில் கோலோச்சி வந்த கஜானா நபர் தமிழகத்தில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் முதல்வரிசையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலர்ப் புடவையைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிடுவார். மேடையில் இருக்கும் கஜானா பிரமுகரின் கவனத்தைத் தனது கண்பார்வையிலே ஈர்க்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கஜானா பிரமுகரின் உதவியாளர், ‘‘உங்களைப் பார்க்கத் தலைவர் ஆசைப்படுகிறார்’’ என்று சொல்ல, ‘இதற்குத்தான் காத்திருந்தேன்’ என்று சிட்டுபோல பறந்து சென்றார். அந்தரங்கப் பேச்சுவார்த்தை பிடித்துப் போக, எளிதாகக் கைகூடியது பதவி. நன்றிக்கடனுக்காக கஜானாவைக் கவர்வதற்கு தலைநகருக்கே சென்று விருந்து வைத்தார்.

அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, ‘பழனி ஆண்டவரே துணை’ என்று படையெடுத்தார். பதவி கைகூடியது. குளுகுளு பல்கலைக்கழகத்தின் உச்சபட்ச பதவியும் கிட்டியது. எந்த அளவுகோலும் இந்தப் பதவிக்குத் தடைபோட முடியவில்லை. பழனி ஆண்டவரை அடிக்கடி தரிசிக்க ஆரம்பித்தவர், தன் வலையில் சிக்கிய பெண் பக்தர்களையும் சிலமுறை தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். இவரிடம் வசமாக இரண்டு மாணவிகள் சிக்கிக் கொண்டனர். ஒருவர் குடும்பச் சூழ்நிலையால் மாட்டியவர், மற்றொருவர் இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர். இவர்களை வைத்துப் பரமபதம் ஆடியவர், குடும்பத்துப் பெண்களையும் விட்டுவைக்கவில்லை.

அரசியல் அதிகாரத்துடன் காக்கிச் சட்டை அதிகாரத்தையும் தன்வயப்படுத்த, குழுவில் உள்ளவர்களைக் கச்சிதமாகப் பயன் படுத்திக்கொண்டார். தமிழகத்தில் முக்கியமான நான்கு காவல்துறை அதிகாரிகள், இந்தக் காப்பியத் தலைவியின் பெயரைக் கேட்டாலே இப்போதும் மானசீகமாக சல்யூட் அடிப்பார்கள். வயதானாலும், தனது தோற்றத்தை இளமையாக வைத்திருக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனை யுக்திகளையும் இன்றும் செய்து வருகிறார். இதோ... பதவிக்காலம் முடிந்து, பழைய இடத்துக்கே வந்தவர் ‘மன்மதன் அம்பு கையில் இருக்கும்போது, வீழ்வதற்கு ஆட்களா இல்லை’ என்ற நம்பிக்கையுடன் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார்.

(அடுத்தது யார்?)