அலசல்
Published:Updated:

போலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை!

போலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை!
பிரீமியம் ஸ்டோரி
News
போலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை!

துணைபோனாரா அ.தி.மு.க எம்.எல்.ஏ?

போலி ஏ.டி.எம் அட்டைகளைப் பயன் படுத்தி சர்வதேச அளவில் கோடிக் கணக்கில் பணத்தைக் கொள்ளை யடித்த கும்பலைப் புதுச்சேரி காவல்துறை வளைத்திருக்கிறது.

கேரளாவில் சமீபத்தில் வாகன சோதனையின் போது, ரமீஷ் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மூலம் கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட ரமீஷ், புதுச்சேரியிலிருந்து போலி ஏ.டி.எம் அட்டைகளை வாங்கிய முகவரியைத் தெரிவித்தார். அதையடுத்து, இந்த விஷயத்தை புதுச்சேரி போலீஸ் தலைமைக்கு கேரள போலீஸ் தெரிவித்தது.

புதுச்சேரி டி.ஜி.பி சுனில்குமார் கௌதம் உத்தரவின்பேரில் அந்த முகவரியைக் கண்காணித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், பிருந்தாவனம் பகுதியில் இயங்கிவந்த பி.ஜே.எம் எண்டர்பிரைசஸ் என்ற கம்ப்யூட்டர் சென்டரில் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த பதிவு செய்யப்படாத வெள்ளை நிற ஏ.டி.எம் அட்டைகள், ஸ்வைப்பிங் மெஷின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. அந்த சென்டரின் உரிமையாளரான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்ஜினீயராகப் பணிபுரியும் பாலாஜியைக் கைதுசெய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், கடலூரைச் சேர்ந்த கமல், சென்னையைச் சேர்ந்த ஷியாம் ஆகிய மூன்று பேரையும் அடுத்தடுத்துக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ளப் பொருள்களைப் போலீஸார் கைப்பற்றினர்.

போலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை!

இந்தக் கும்பல், ஏ.டி.எம் மையங்களில் யாருக்கும் தெரியாமல் ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்திவிடும். அந்த ஏ.டி.எம்-மில் தங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அனைவரின் விவரங்களையும் அதன் மூலம் திருடுகிறது. அந்த கார்டு விவரங்களை வைத்து போலி ஏ.டி.எம் அட்டைகளைத் தயாரிக்கிறது. அதை வைத்து அவர்களின் பணத்தை அபகரிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட தொகைக்குமேல் ஏ.டி.எம்-களில் எடுக்க முடியாது என்பதால், போலியான நிறுவனங்களைப் பதிவுசெய்து ‘ஸ்வைப்பிங்’ மெஷின்களை வாங்கி, ஏதோ பொருள் வாங்கியதற்குப் பணம் கொடுப்பது போல பணத்தைச் சுருட்டியிருக்கிறது இந்தக் கும்பல். தமிழகம், கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கும்பலிடம் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாந்துள்ளனர். ‘ஸ்வைப்பிங்’ மெஷினை வாங்கித் தருபவர்களுக்கு 30 சதவிகிதம் கமிஷன் தொகையும் கொடுத்துள்ளனர். அப்படி மெஷின்கள் வாங்கிக் கொடுத்ததாக புதுச்சேரி அரசு மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர் விவேக் ஆனந்த் கைதுசெய்யப்பட, அவர் மூலம் இந்த மோசடிக்கு மூளையாக இருந்த சந்துருஜி என்பவரின் பெயர் வெளியானது.

“சாதாரண ஏ.டி.எம் கார்டு திருட்டு வழக்காகத் தான் இதை முதலில் பார்த்தோம். ஆனால், இந்தியாவைத் தாண்டியும் சர்வதேச அளவில் இவர்களுக்கு ‘நெட்வொர்க்’ இருக்கிறது. வெளிநாட்டில் வசிப்பவர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடியும் கோடிக்கணக்கான பணத்தை இந்தக் கும்பல் சுருட்டியுள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்தக் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் இவர்கள் கொள்ளை யடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஏழு ஆண்டுகளுக்குமுன் சாதாரணமாக இருந்த சந்துருஜி, தற்போது மூன்று ஹோட்டல்கள், பி.எம்.டபிள்யு கார் என மிகக் குறுகிய காலத்தில் கோடிகளில் கொழித்திருக்கிறார். 28 முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். குன்னூர், ஊட்டி எனப் பல்வேறு இடங்களில் எஸ்டேட்டுகளை வாங்கிக் குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை, மோசடிகள் அனைத்துக்கும் சந்துருஜிதான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார்.

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சந்துருஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். இருவருக்கும் இடையே பணப் பரிமாற்றமும் நடந்திருக்கிறது. அந்த விவரங்களைத் திரட்டியுள்ளோம். தற்போது சந்துருஜி தலைமறைவாக உள்ளார். அந்த எம்.எல்.ஏ-வை விசாரணை வளையத்தில் கொண்டுவர உள்ளோம். சந்துருஜி வீட்டில் நடத்திய சோதனையில் பல அரசியல் பிரமுகர்களிடம் நடந்த பணப்பரிமாற்றம் குறித்த முழுத் தகவல்களும் கிடைத்துள்ளன. அதேபோல, சாய்பாபா பெயரை வைத்திருக்கும் பி.ஜே.பி பிரமுகர் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் வருகிறார். சாதாரணக் காவலராக இருந்த அவரிடம் திடீரென்று கோடிகள் புரளுகின்றன. இப்படி மேலும் பலர் எங்கள் லிஸ்டில் இருக்கிறார்கள்” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை உயர் அதிகாரி ஒருவர்.

போலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை!

முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிற, தற்போது  தலைமறைவாக இருக்கும் சந்துருஜிக்கும், முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பாஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இருவரும் பல்வேறு நாடுகளுக்கு உல்லாசச் சுற்றுலா சென்று வந்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவின. இதுகுறித்து விளக்கம் கேட்க பாஸ்கரைத் தொடர்புகொண்டோம். “சந்துருஜி எனக்கு நண்பர்தான். மறுக்கவில்லை. ஆனால், அவன் இப்படிச் செய்திருக்கிறான் என்று எனக்கு எப்படித் தெரியும்? என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக என் அரசியல் எதிரிகள் சில புகைப்படங்களை வெளியிட்டு எனக்கு எதிராகத் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.

“சர்வதேச அளவில் தொடர்புடைய இந்த வழக்கில் அரசியல் புள்ளிகள் பலர் சம்பந்தப் பட்டுள்ளனர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

- ஜெ.முருகன்
 படங்கள்: அ.குரூஸ்தனம்