சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

ம.குணவதி - படங்கள்: சாய் தர்மராஜ், ஈ.ஜெ.நந்தகுமார்

தொடர்ச்சியாக நாடு முழுக்க நடக்கும் படுகொலைகளின் பட்டியலில் ஒன்றாகக் கரைந்துபோகாமல்,  கொடூரத்தன்மை காரணமாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் காரணமாகவும் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளிக்கு வந்திருக்கிறது கச்சநத்தம் படுகொலை.

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்,  தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. இச்சம்பவத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இன்னும் 5 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்   தெய்வேந்திரனும், அவரது நண்பர் பிரபாகரனும், கால் மேல் கால் போட்டுத் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சாதி  வன்மமே, கொலைக்கான காரணம் என்பது முதற்கட்டச் செய்தியாக வெளிவந்தது. மேலும் கஞ்சா விற்பனை, கந்துவட்டி எனப் பல பிரச்னைகளால், நெடுங்காலமாக அவர்கள் அவதிப்பட்டு வருவதை ஆற்ற முடியாத கண்ணீரின், வார்த்தைகளின் வழி அறிய முடிந்தது.

சம்பவம் நடந்துமுடிந்த நான்காவது நாளில், கச்சநத்தம் கிராமமே மதுரை அரசுப் பொது மருத்துவமனைக்கு எதிரில், நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்தது. சாதிப் பெயரை சொல்லித் தாக்கப்பட்ட 36 வயது இளைஞர் சந்திரசேகர் இறந்த செய்தி கேட்டு, போராடிய மக்கள் மருத்துவமனை நோக்கி ஓடினர். ‘இனி நாங்க எதுக்கு வாழணும்?’ என்று பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தார் சந்திரசேகரின் தாய். லாரி ஓட்டுநரான சந்திரசேகரனுக்கு, ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். பிறவியிலேயே பேச முடியாத குறைபாட்டோடு பிறந்த மகளுக்கு, சமீபத்தில் ஓர் அறுவைச் சிகிச்சையும் நடந்து முடிந்திருக்கிறது.  ஆனால் அந்த மகளைக் கவனித்துக்கொள்ள இப்போது சந்திரசேகர் இல்லை.

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

“சண்முகநாதன் (படுகொலை செய்யப்பட்ட மற்றொருவர்) அண்ணன், ஆதிக்கச் சாதிக்காரங்க கஞ்சா விக்குறதையும், கந்துவட்டி வாங்குறதையும் எதிர்த்ததோடு நிறைய முறை இவற்றுக்கு எதிரா மனுவும் கொடுத்திருக்கார். கஞ்சா விக்கிறதைப் பத்தி போலீஸ்ல புகார் கொடுக்கப் போகையிலதான், எங்க சித்தப்பாவும் கூடப் போச்சு. ஊட்டுக்குள்ள புகுந்து வெட்டும்போது, எங்க ஜாதிப் பேரை அசிங்கமாத் திட்டிக்கிட்டேதான் வெட்டினாங்க. தடுக்க வந்தவுங்களையும் மிரட்டினாங்க. வீடுகளை அடிச்சு உடைச்சாங்க” - விலகாத பயத்தோடு, நடுங்கும் குரலில் அன்றைய சம்பவத்தை விவரித்தார் சந்திரசேகரனின் அண்ணன் மகள்.

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

ராணுவ வீரராகப் பணிபுரியும் தெய்வேந்திரன்.  “திருவிழா முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு, நானும், பிரபாகரனும் கோயில் வாசல்ல உக்காந்து பேசிட்டே டீ குடிச்சிட்டு இருந்தோம். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சுமன் ‘என்னடா, எங்க முன்னாடியே திமிரா உட்காருவீங்களா?’ன்னு எகத்தாளமாப் பேசினான். நாங்க கோபப்பட்டுத் திரும்பப் பேசினதும், கத்தியால குத்த வந்தான். நான் திருப்பாச்சேத்தி போலீஸிடம் புகார் கொடுத்தேன். சுமனை போலீஸ்காரங்க தேடிப் போனப்போ அவன் இல்ல. போலீஸ்காரங்க, அவனோட அப்பாவக் கண்டிச்சு ஒரு அடி கொடுத்தாங்க. அதை வன்மமா வெச்சுட்டு ரெண்டு நாள் கழிச்சு ஆட்களைக் கூட்டிட்டு வந்து, இப்படிப் பண்ணிட்டான். எங்கப்பாவக் கொன்னுட்டாங்க” என குரல் ஒடுங்கி நிறுத்தியவர், “ஆனா, இது மட்டுமே பிரச்னையோட மூல காரணமில்லங்க. நாங்க படிக்கப் போறது, மதுர டவுன்ல வீடெடுத்து இருக்கிறது, நல்ல வேலைக்குப் போறது, என்னை மாதிரி ஆளுங்க ராணுவத்துக்குப் போறதுன்னு சுயமரியாதையா வாழ்றது அவங்களுக்குப் பிடிக்கல. இதோ லீவு முடிஞ்சு நான் நாட்டைக் காப்பாத்தப் போகணும். இவங்ககிட்ட இருந்து என் வீட்டையே காப்பாத்த எனக்குத் துப்பில்லாமப் போச்சு” என்று கதறுகிறார்.

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

“பட்டியலின மக்கள் பெருவாரியாகவும், ஆதிக்கச் சாதியினர் சிறுபான்மையாகவும் வசிக்கும் கிராமம் கச்சநத்தம்.  சொந்தமாக நிலம் இருந்தாலும் ஆதிக்கச் சாதியினர் வயல்களில்   அவர்களை வேலை செய்ய நிர்ப்பந்திப்பது, பெண்களைச் சீண்டுவது, தேநீர்க் கடைகளில் கூட வேற்றுமை பாராட்டுவது என சாதி ரீதியான பாரபட்சம் நீண்டகாலமாகவே நிலவுகின்றன” என்கிறார் தேவேந்திர சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கண்ணா,

‘முக்குலத்தோர் எழுச்சிக் கழகம்’ என்னும் அமைப்பின் தலைவர் வி.கே.கவிக்குமார், “இந்தக் கொலையை சாதி அடிப்படையில் ஆதரிக்காதீங்கன்னு, எங்க மக்கள்கிட்டயே சொல்றேன். கொலைகாரங்களைக் கைது பண்ணுங்க. என்ன காரியத்துக்காகக் கொலை செஞ்சாலும் தப்புதான்.  அந்த குடும்பங்களுக்கு எங்க அனுதாபங்கள தெரிவிச்சுக்கிறோம். ஆனால், கொலை செஞ்சவங்கள விட்டுட்டு, மக்களைத் திருப்திப்படுத்தணும்னு கூடுதலா நாலஞ்சு பேர் மீது வழக்குப் பதிவு செஞ்சா, இந்தப் பிரச்னை தீராது. இந்த வன்மம் அப்படியே தொடரும். பீஸ் கமிட்டி போட்டுப் பேசணும். அதெல்லாம் செய்யாம, கையில கிடைக்குறவனை யெல்லாம் கைது பண்ணா எதுவும் மாறாது” என்கிறார்.

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

``சிவில் இன்ஜினீயரிங் படிக்கும் ஒரு பையன், வீட்டுக்குள் படித்துக்கொண்டிருந்திருக்கிறார். சம்பவத்தன்று, பிரச்னை என்னவென்றே தெரியாத அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சாதியரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அடிநிலையில் இருப்பவர்கள் முன்னேறுவதைக்கூட ஆதிக்கச் சாதி மனங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. முதியவர் ஒருவரின் உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியிருக்கிறார்கள். அவர் ஒவ்வொரு நொடியும் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பிரச்னை குறித்து முன்பே காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.அவர்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருந்தால் மூன்று பேரின் இறப்பைத் தடுத்திருக்கலாமே.

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

பட்டியல் இன மக்கள் சாமி கும்பிடச் செல்லும்போதும், வெளியே சென்று திரும்பும்போதும் ஏதேனும் சொல்லிச் சீண்டுவதை ஒரு கும்பல் வழக்கமாகக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, சட்டம் படித்துவரும் மாணவனின் கைகளை வெட்டியதாகச் சொல்லப்ப டுகிறது. அவமானப்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், மீண்டும் அதே ஆதிக்கத்துக்கு பயந்து ஒடுங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கஞ்சா விற்பனை, கந்துவட்டி, சாதிக் கொடுமை என எதற்காகவும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை இருந்தென்ன, இல்லாமலென்ன? அரசு எதைக் கவனித்துக்கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,

“சுயமரியாதையோடு வாழறது தப்பா?” - கதறும் கச்சநத்தம்

கொலை செய்யப்பட்ட வர்களுக்காக நீதி கேட்டுப் போராடியதன் விளைவாக சிபிசிஐடி விசாரணை, இழப்பீடு, பழையனூர், திருப்பாச்சேத்தி வன்கொடுமை மண்டலமாக அறிவிப்பு, குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம், கச்சநத்தம் பெண்களுக்கு தாட்கோ லோன் என்பது மட்டுமில்லாமல், தனிச்சுடு காட்டை நோக்கிய இறுதி ஊர்வலத்தில் 800 போலீஸார் பாதுகாப்பு - இவையெல்லாம் உயிரிழப்புகளுக்குப் பிறகு...

உயிரோடு இருக்கும்போதே உரிமைகளை  உறுதி செய்ய அரசும், சிவில் சமூகமும் எப்போது தயாராகும்?