அலசல்
Published:Updated:

திருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்!

திருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்!

திருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்!

‘‘திருச்சியில் கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தாராளமாகப் புழங்குகின்றன. பள்ளி மாணவர்கள் பலர் இந்தப் போதைப்பொருள்களுக்கு அடிமையாகிவருகின்றனர். ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இதனால் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. இந்தப் போதை மோதலில் கொலைகளும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன’’ என்று அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

திருச்சி பால் பண்ணைப் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சமீபத்தில் போலீஸார் நடத்திய அதிரடிச் சோதனையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வட மாநிலங்களிலிருந்து திருச்சி பெரிய கம்மாளத் தெருவுக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்குப் போதைப்பொருள்கள் சப்ளை செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, திருச்சி பெரியகடை வீதியில் பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்த, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒக்காராம், தேவராம், மங்களராம் ஆகியோர் ஜூலை 4-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கும் போதைப்பொருள்கள் விற்பனை செய்துவந்துள்ளனர்.

திருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்!

இது பற்றிய விசாரணையில் இறங்கியபோது, அதிரவைக்கும் பல தகவல்கள் கிடைத்தன.

‘‘பள்ளி மாணவர்கள் உள்பட அனைவருக்கும் பலவிதமான போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. கஞ்சா விற்றுவந்ததாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி ஸ்ரீரங்கம் புதுத் தெருவைச் சேர்ந்த சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளியான அமாவாசை என்பவர், தங்கள் பகுதியில் கஞ்சா விற்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடுத்த சில மணிநேரத்தில், அமாவாசைமீது ஜேம்ஸ் என்பவர் தலைமையிலான கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு, கஞ்சா விற்கும் கும்பலின் தொடர்ச்சியான கொலை மிரட்டல் காரணமாக, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீயை வைத்துக்கொண்டார் அமாவாசை. கஞ்சா கும்பலுக்கு எதிரான போராட்டத்தில் தன் உயிரையே அவர் மாய்த்துக்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவைச் சேர்ந்த ரவுடி மகேஷ்வரன், திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும், அந்தப் பகுதி இளைஞர்களையும் குறிவைத்துக் கஞ்சா வியாபாரம் செய்துவருவதாகப் புகார் உள்ளது. இந்த நிலையில், அந்த கோஷ்டிக்கும் இன்னொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அரிவாளால் சிலர் வெட்டப்பட்டனர். சில வாரங்களுக்கு முன்பு, ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ஒரு கோயில் திருவிழாவில், ரவுடி மகேஷ்வரன் கும்பலுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அடுத்த நாள், கஞ்சா போதையில் இருந்த மகேஷ்வரனும் அவரின் ஆதரவாளர்களும் இரண்டு பேர்மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

அதே கோயில் திருவிழாவில் இன்னொரு மோதலும் நடந்தது. திருச்சி பகுதியில் மிகவும் பிரபலமான ரவுடி சந்துரு. அவரின் நண்பர் மீன் பாலா தரப்புக்கும், ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் என்பவருக்கும் திருவிழாவில் தகராறு ஏற்பட்டது. மறுநாள் கஞ்சா போதையில் இருந்த மீன் பாலா தரப்பு, பார்த்திபனைக் கல்லால் அடித்துக் கொன்றது. இந்தக் கொலை வழக்கில் மீன் பாலாவை மட்டும் கைதுசெய்த போலீஸார், மற்றவர்களைத் தப்ப வைத்தனர். இந்த விவகாரத்தில், ரவுடி சந்துருவுக்கு திருச்சி தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர் சப்போர்ட் பண்ணுவதாகச் சொல்லப்படுகிறது.

திருச்சியைத் திணறடிக்கும் கஞ்சா கொலைகள்!

ரவுடி சந்துரு, கத்தியுடன் வெறிகொண்டு கடைகளை உடைக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் சமீபத்தில் வைரலானது. அதனால், சந்துருவை மதுரையில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து ரவுடி மகேஷ்வரனை விராலிமலை டோல்கேட் அருகே போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம், திருச்சி ரயில் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இரவு நேரங்களில் மாநகர் முழுவதும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. திருவெறும்பூர், சத்திரம், எடமலைப்பட்டிப் புதூர், ஸ்ரீரங்கம், கம்பரசம்பேட்டை என நகரின் பல பகுதிகளும் போதையில் தள்ளாடுகின்றன. ஒத்தக்கடை கான்வென்ட் ரோடு, சத்திரம், வண்ணாரப் பேட்டை, செந்தண்ணீர்புரம், குட்ஷெட் மேம்பாலம் பகுதிகளில் பாயின்ட் வைத்துக் கஞ்சா சப்ளை நடக்கிறது. இந்த விவகாரத்தில் துப்பாக்கி சுரேஷ், அம்மாசி, செல்வம் எனப்பலரின் பெயர் அடிபடுகிறது’’ என்றார்கள்.

இந்த விவகாரம் குறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜிடம் கேட்டோம். ‘‘போதைப்பொருள்கள் விற்ற வடமாநில இளைஞர்கள் சிலரைக் கைது செய்துள்ளோம். தொடர்ந்து போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். கஞ்சா விற்பனை குறித்தும் விசாரிக்கச் சொல்கிறேன். திருச்சி மாநகரில் போதைப்பொருள்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்கள் விற்பனை குறித்த தகவல் தெரிந்தால், போலீஸாருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: தே.தீட்ஷித்