
#நானும்தான் - குறுந்தொடர் - 8
அந்த வீட்டுவசதி வாரிய வளாகத்தில் `ஏ, பி, சி, டி' தொடங்கி `எம்' வரை வரிசையாகக் கட்டடங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் நான்கு மாடிகள். ஒவ்வொரு மாடியிலும் இரண்டு வீடுகள்.
இரண்டாவது சனிக்கிழமை தந்த கூடுதல் விடுமுறையால் காலையில் இருந்தே அசமந்தமாகப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள் ஷைலஜா. புத்தகக் காட்சியில் ஆசையாக வாங்கிப் படிக்க நேரமில்லாமல் போட்ட புத்தகங்கள், தூக்கிக் கொஞ்சப்படாத குழந்தை போல ஏக்கத்துடன் கிடந்தன. ஜாடி ஸ்மீத் எழுதிய `வொய்ட் டீத்' பத்தாவது பக்கத்தில் கவிழ்ந்து படுத்திருந்தது. லண்டனுக்குப்போகிற கனவின் மிச்சம் அந்தப் புத்தகத்தை வாங்கிய ஆவலில் தொக்கிக்கிடந்தது. இன்றைய லண்டனின் பின்னணியில் எழுதப்பட்ட பெஸ்ட் செல்லர் நாவல் அது. லண்டன் கனவு, மெள்ள சாத்தியமாகப் போகிற மகிழ்ச்சியோடு பார்வைக்குத் தெரியாத சோகமும் அவளுக்குள் இருந்தது.
வழக்கமாக இரண்டாவது சனிக்கிழமை களில் கிளினிக் விடுமுறை. மகளைக் குளிப்பாட்டி தலைமுடிக்கு சாம்பிராணி போட்டு ஜன்னல் ஓரத்தில் வெயில்படும் படியாக உட்காரவைத்துவிட்டு, சமையல் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள் நித்யா. குழந்தை செல்வி, ஜன்னல் வழியே சாலையில் நடந்துகொண்டிருப்பவர்களைப் பார்த்தாள். தலை முதல் இடுப்பு வரை கன்னிப் பெண்ணாகவும் இடுப்புக்குக் கீழே பச்சைக்குழந்தையாகவும் இருந்தாள் செல்வி. இரண்டு சொட்டு போலியோ மருந்து கொடுக்காமல் போன கவலை நித்யாவைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. கிளினிக் வேலையைவிட்டுவிட்டு வேறு என்ன செய்வதெனவும் தெரியவில்லை. பொழுதெல்லாம் மகளைப் பார்த்துக்கொள்ள முடிகிற வேலை. மாலையில் சென்று இரவு எட்டரைக்கெல்லாம் திரும்பிவந்துவிடலாம் என்பதுதான் அதில் இருக்கிற வசதி. டாக்டர் தருகிற தொல்லையைப் பொறுத்துக்கொள் வதும் அதனால்தான்.

வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டு சிமென்ட் கலவை நிறைந்த பாண்டு சுமப்பது சிரமமாக இருந்தது. பிள்ளை பிறக்கிற வரை வேலைக்குப் போக வேண்டாம் எனச் சொல்லிவிட்டான் ஏழுமலை. அவன்தான் நாகபூஷணத்தின் நிலைமையை அறிந்து கோயிலில் வைத்துத் தாலிகட்டி பொண்டாட்டியாக்கிக் கொண்டான். கல்யாணத்தன்றே மூன்று மாதங்கள். புதிதாக வந்த கொத்தனார் அவன். திண்டிவனத்தைச் சேர்ந்தவன். மாடியிலிருந்து குதித்து உயிரைவிட இருந்தவளைப் பார்த்து, கைபிடித்துக் காப் பாற்றியவன். ‘‘இனி உன்மேல எந்த ஆம்பளை கைவைக்கிறான்னு பாத்துடறேன்’’ என தைரியம் தந்தவன். சனிக்கிழமை என்றால் கூலி கொடுக்கிற நாள். வரும்போதே அல்வா, மல்லிகைப்பூ என அமர்க்களப்படுத்துவான்.
வனிதா இப்போது கார்மென்ட் வேலையை விட்டுவிட்டாள். செல்போன் விற்கும் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துவிட்டது. வாடிக்கையாளர் வரும்போது கைகூப்பி வணங்கி, என்ன மாதிரி செல்போன் வேண்டும் என விசாரித்து, அவர்கள் பட்ஜெட்டுக்குட் பட்ட போன்களை எடுத்துக் காண்பித்து விளக்க வேண்டும். இப்போதுதான் சேர்ந் திருந்ததால் இங்கு என்ன மாதிரியான சிரமங்கள் வரும் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை. கடையில் வேலை செய்கிற ஆண்கள், வாடிக்கையாள ஆண்கள் யாருடைய முகங்களையும் அவள் ஒரு சில விநாடிகளுக்கு மேல் பார்ப்பதில்லை. பார்ப்பதில்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது என்பது அவளுடைய சமீபத்திய கண்டுபிடிப்பு. செல்போன்களைப் பார்த்தபடியே பெரும்பாலும் பேசுகிறாள். செல்போன்களால் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து இருக்கிறதோ, இல்லையோ தனக்கு ஆபத்து இல்லை என அவள் நினைத்தாள்.
அத்தனை ஆசையாக போலீஸ் வேலைக்குச் சேர்ந்தவள் எதற்காக ஒரு நாளில் அடம்பிடித்து வேலையைவிட்டு நின்றாள் என வீட்டில் யாருக்குமே சொல்ல மறுத்துவிட்டாள் மீனாட்சி. படித்துமுடித்துவிட்டு, வேலைக்கும் போக மாட்டேன் என்பவளுக்கு வீட்டில் தரப்படும் உடனடி தண்டனை, திருமணம். அன்று மாலை அவளைப் பெண் பார்க்க பத்து பதினைந்து பேர் வருவார்கள். ஏன் போலீஸ் வேலைக்குப் போக விரும்பவில்லை எனக் கேட்பார்கள். எப்போது பார்த்தாலும் வெயிலிலும் மழையிலும் பந்தோபஸ்துக்குப் போடுகிறார்கள். அவளுக்கு உடம்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை என லாஜிக்கான ஒரு பதிலை அப்பா சொல்வதாகச் சொல்லியிருந்தார். நம்பும்படியாக அதைச் சொல்வதொன்றே அவளுடைய நோக்கமாக இருந்தது. ஜன்னல் வழியாகச் சாலையைப் பார்த்தாள். போலீஸ் ஜீப் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அவசர மாக அதைத் தவிர்த்துவிட்டு, உள்ளே வந்து படுத்தாள்.
சுவிட்சர்லாந்து குளிரில் பாடல்காட்சியில் நடித்துவிட்டு இப்போதுதான் சென்னை திரும்பியிருந்தாள் தனுஜா, இதற்குத்தான் ஆசைப்பட்டோமா என்ற விரக்தியின் உள்ளே இருந்தாலும் பெரிய ஹீரோ படத்தில் நடிக்கிற புகழ் வெளிச்சம் அவள்மீது விழுந்ததில் அது காணாமல் போயிருந்தது. அந்த வீட்டுவசதி வாரிய காம்ப்ளெக்ஸ் வீட்டில்தான் அவளுடைய தோழி ரமா வீடு இருந்தது. அவளைப் பார்க்கத்தான் வந்திருந்தாள். ரமா வீட்டினருக்கு ஆச்சர்யம். ‘‘படம் ரிலீஸ் ஆன பிறகு இப்படி வருவியா தனு?’’ என வாய்விட்டுக் கேட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ரமா கேட்டாள்: ‘‘ஹீரோ எப்படி? ரொம்ப ஹம்பள் பர்ஸன் இல்ல?’’ என்றாள், தன் சினிமா துணுக்கு படித்த ஞானத்தில். தனுஜா ஒன்றும் சொல்லவில்லை. ‘‘பச்’’ என்றாள்.
வீடியோ கிராபர் அருள்மொழி, அந்த டாக்ஸி டிரைவரை போலீஸில் பிடித்துக்கொடுத்தாள். அவனைச் சிறைக்கு அனுப்பியது பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு ஒரு பாடம் என டி.வி சேனல்கள் புகழ்ந்தன. ஏனோ விஷ்ணு பற்றி அவள் யாரிடமும் சொல்லவில்லை. சில விநாடிகளில் குற்றம்புரிவதில் இருந்து தப்பித்தவன். நாகரிகமாக நழுவிவிட்டவன். வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்பது அவளுடைய லட்சியம். ‘நல்ல’ வேலை எது என்பதில்தான் சிக்கல் அதிகம் இருந்தது.
மாலை ஏழு மணிக்கு எல்லா டி.வி-யிலும் #metoo பற்றி பரபரப்பாகச் செய்திகள் ஓடின. பாலியல்தொல்லைக்கு ஆளான பல பிரபல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பத்தாண்டு களுக்கு முன் நிகழ்ந்த தொல்லைகளை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டுவசதி வாரியத்தின் ப்ளாக்கில் இருந்த நாகபூஷணம், வனிதா, நித்யா, மீனாட்சி, ஷைலஜா, தனுஜா அருள்மொழி என அனைவருமே ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களால் இப்படி எதுவும் செய்து நியாயம் பெற முடியாதா என அவர்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படி இன்னும் எத்தனைப் பெண்கள் நினைத்திருப்பார்களோ என்பதைத்தான் அவர்களால் கணிக்க முடியவில்லை.
(அதிர்ச்சிகள் போதும்)
- தமிழ்மகன், ஓவியம் : ஸ்யாம்