அரசியல்
சமூகம்
Published:Updated:

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!
பிரீமியம் ஸ்டோரி
News
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!

வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில்  தி.மு.க-வின் பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவரது நண்பருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்த உடனே, சிறுமியின் பெற்றோரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ராஜ்குமார் தரப்பிலிருந்து வந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டே இருந்ததால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை. தொடர்ச்சியான முயற்சிகளுக்குப்பிறகு, சிறுமியின்  தந்தையைச் சந்தித்துப் பேசினோம். 

கேரள மாநிலத்தைச் சேர்ந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளி. இவர், 15 வயதான தன் மகளை  முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜ்குமாரின் வீட்டில், கடந்த 2012 ஜூன் 23-ம் தேதி வேலைக்குச் சேர்த்துவிட்டார். இதன் பின்னர், ஜூன் 25-ம் தேதியே தன் தாயாருக்குப் போன் செய்த சிறுமி, ‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. என்னைக் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அழுதார். பதறிய சிறுமியின் பெற்றோர், பெரம்பலூருக்குப் புறப்பட்டனர். அவர்கள் வந்து சேர்வதற்குள், ‘உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லி ஒரு தனியார் மருத்துவ மனையில்  சேர்க்கப்பட்டிருந்தார். மயக்க நிலையில் இருந்த மகளைத்தான், அவர்கள் பார்க்க நேர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் சிறுமி இறந்துவிட்டார்.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!

இதுகுறித்துப் பேசிய சிறுமியின் தந்தை, “ராஜ்குமார் தன் பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்துடன் கொண்டாடியிருக்கிறார். அப்போது, என் மகளை அவர்கள் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், உடல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட என் மகளை, சிலர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதன் பின்பே எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். நாங்கள் அதன் பின்பு மூன்று மருத்துவமனைகளில் மாற்றி, மாற்றி  குழந்தைக்குச் சிகிச்சை அளித்தோம். ஆனால், ஒவ்வொரு மருத்துவமனையிலும் எங்களைப் பின்தொடர்ந்து வந்த எம்.எல்.ஏ-வின் ஆள்கள், மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி எங்களுக்கு உண்மை தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். மகள் இறந்தபின்பு பிரேதப் பரிசோதனையிலும் எதுவும் சொல்லவில்லை.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!

கடைசியில் இறுதி சடங்குக்காக மகளின் பிரேதத்தைக் குளிப்பாட்டியபோதுதான் மார்பிலும் பிறப்பு உறுப்பிலும் காயங்கள் இருந்ததைப் பார்த்தோம். உடனே மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கத் தோழர்களிடம் விஷயத்தைச் சொன்னோம். அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின்பே மறு பிரேதப் பரிசோதனை செய்து, என் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அறிக்கை கொடுத்தார்கள். அதன் பின்பும் அவர்கள் எங்களைப் பல வழிகளில் மிரட்டினார்கள். அவர்களுக்குப் பயந்து, தலைமறைவு வாழ்க்கை எல்லாம் நடத்தினோம். என் குழந்தையைச் சீரழித்து, கொலை செய்த அவர்களுக்குப் பத்து ஆண்டு தண்டனை போதாது; தூக்கில் போட வேண்டும்” என்றார் ஆவேசமாக!

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!

ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால், கடந்த டிசம்பர் மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. ராஜ்குமாருக்கும் அவரின் நண்பர் ஜெய்சங்கருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.42,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்குக்காகப் போராடியதில் முக்கியப்பங்கு வகித்த ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சுகந்தி, “இரண்டு அரசு மருத்துவமனைகள் உட்பட மூன்று மருத்துவமனைகளில் சிறுமிக்கு மருத்துவம் பார்த்தனர். ‘பாலியல் கொடுமை நடந்துள்ளது’ என்று மூன்று மருத்துவமனைகளிலும் சொல்லவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு, பாலியல் கொடுமையால் இறந்ததாக, கேரள அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கேரளத்திலும் தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடத்தினோம். அதன் பிறகுதான், எஃப்.ஐ.ஆர் மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. எங்களுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தனர். எல்லாவற்றையும் மீறி, குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளோம்” என்றார்.

இந்த வழக்கில் நேரடியாக பல மிரட்டல்களை எதிர்கொண்டவர், மாதர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் துணைத் தலைவர் கலையரசி. அவர் நம்மிடம், “ராஜ்குமாரும் அவருக்கு நெருக்கமானவர்களும் என்னைத் தொடர்ந்து மிரட்டினர். பணம் தருவதாகப் பேரம் பேசினர். எதற்கும் மசியாததால், என் பெயரில் போலியாக லெட்டர்பேடு தயாரித்து, நீதிபதியை நான் மோசமாக விமர்சிப்பதுபோல கிளப்பிவிட்டனர். நீதிபதியிடம் நான் உண்மையை எடுத்துச் சொன்னேன். சாட்சிகளையும் கடுமையாக மிரட்டினார்கள். சாட்சிகளை நாங்கள் பாதுகாக்க வேண்டியதாயிற்று. இப்படியொரு தீர்ப்பு வந்த பிறகுதான், அவர்களுக்கு எங்கள் மீது இன்னும் கோபம் அதிகரித்துள்ளது” என்றார். இதுதொடர்பாக எம்.எல்.ஏ குடும்பத்தினரிடம் பேசினோம். “மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கிறோம். இதுபற்றிக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்று மட்டும் சொன்னார்கள்.

- எம்.திலீபன்