
- பரிந்து பேசும் எம்.எல்.ஏ... வரிந்துகட்டும் அமைப்புகள்...
ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்ட மேலவளவு சாதியப் படுகொலை, தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகப் படிந்திருக்கிறது. ஆனால், இதில் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் எம்.எல்.ஏ-வான பெரியபுள்ளான் குரல் எழுப்பியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து ஏழு பேரையும் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் மூன்று பேரை நன்னடத்தைக் காரணமாக முன்விடுதலை செய்தனர். இதேபோல் இப்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 14 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வான பெரியபுள்ளான் சட்டமன்றத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, ‘சாதியக் கொலையாளிகளுக்கு ஆதரவாகப் பேசிய எம்.எல்.ஏ மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரது பதவியைப் பறிப்பதுடன், அவரை கைதுசெய்ய வேண்டும்’ என்று புரட்சித் தமிழகம் கட்சியின் சார்பில் தமிழக உள்துறை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசனின் மனைவி மணிமேகலை முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து தம் கணவர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். ‘‘என் வீட்டுக்காரர் 1996, டிசம்பர் மாதத்தில் மேலவளவு பஞ்சாயத்துத் தனித் தொகுதியில் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்டார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று குறிப்பிட்ட சமூகத்தினர் தேர்தலை நடத்தவிடாமல் செய்தனர். என் கணவருக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனாலும் தேர்தலில் என் கணவர் வெற்றி பெற்றார். பிறகு, தேர்தலுக்கு முந்தைய கலவரத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி உதவி வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, என் கணவர் பஸ்ஸில் வந்துகொண்டிருந்தார். அப்போது, கூலிப்படையை ஏவி, என் கணவர் உள்ளிட்ட ஏழு பேரைப் படுகொலை செய்தனர். அதன் பிறகு என் நான்கு பிள்ளைகளையும் தனியாக வளர்த்து ஆளாக்கினேன். இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்துவிட்டேன். இரண்டு பையன்கள் என்னுடன் இருக்கிறார்கள். அரசாங்கம், சாலைப் பணியாளர் வேலை கொடுத்ததால் பிழைக்கிறேன். மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் சட்டப் பேரவையில் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறார். இதுவே அவர் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால், விடுதலை செய்யச் சொல்வாரா?’’ என்று கண்ணீர் வடித்தார்.

இதுதொடர்பாக மேலூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச்செயலரும் வழக்கறிஞருமான சே குவேரா கூறுகையில், ‘‘இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை, 2008 தி.மு.க ஆட்சியில் முன்விடுதலை செய்தனர். தற்போது, இந்தச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ராமர் உட்பட 14 பேரை விடுதலை செய்யக்கோரி சட்டமன்றத்தில் பேசியுள்ளார் பெரியபுள்ளான். இரண்டு திராவிட கட்சிகளும் ஆதிக்கச் சாதியினரின் ஓட்டு வங்கிக்காக, அவர்களை விடுதலை செய்யத் துடிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனைச் சிதைக்கும் வகையாகப் பேசிய எம்.எல்.ஏ-வைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும்’’ என்றார். இதேபோல உள்ளூரில் இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்புகளும் எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.

பெரியபுள்ளானிடம் பேசியபோது, ‘‘நான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. பத்து வருடங்களுக்கும் மேல் சிறையில் உள்ள நபர்களை, அரசு விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் என் தொகுதியைச் சேர்ந்த 14 பேரை முன் விடுதலை செய்ய வேண்டும் என்றேன். தி.மு.க ஆட்சியில் மூன்று நபர்களை விடுதலை செய்யும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் சொல்லும்போது அரசியல் காழ்ப்பு உணர்வு காரணமாக, எனக்கு எதிராக மனு அளித்தும் போஸ்டர் ஒட்டியும் வருகின்றனர். சட்டத்தை மீறி நான் எதுவும் செய்யவில்லை’’ என்றார்.
- அருண் சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்