
மன்னிப்புக் கேட்ட பிறகும் கொலை!
சமையல் வேலைக்கு ஆட்கள் கூப்பிடப்போன இடத்தில் நடந்த வாக்குவாதம், மதமாற்றச் சர்ச்சையாக மாறி, கொலையில் முடிந்திருக்கிறது. கொலைக் குற்றம் தொடர்பாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்லர். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று குரல் எழுப்பியுள்ளது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு.
கும்பகோணம் அருகே திருபுவனம் மேல துண்டிவிநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க-வில் நகரச் செயலாளராக இருந்தவர். திருபுவனத்தில் ‘தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ்’ என்ற பெயரில் சமையல் தொழில் செய்து வந்தார். சமையல் பணிக்கு ஆட்களைக் கூப்பிடுவதற்காக, பாகனாந்தோப்பு பகுதிக்கு கடந்த 5-ம் தேதி சென்றார். அப்போது நடந்த வாக்கு வாதத்துக்குப் பின்னர், அன்று இரவு கொல்லப்பட்டார் என்கிறார்கள்.

அந்த வாக்குவாதத்தின்போது உடன் இருந்த ஒருவரிடம் பேசினோம். “சமையல் வேலைக்காக ஆட்களைக் கூப்பிடச் சென்ற போது, அந்தப் பகுதியிலுள்ள தாழ்த்தப் பட்டோரை மதமாற்றம் செய்ய சிலர் முயலும் விஷயம் அவரது கவனத்துக்கு வந்தது. அவர்களை ராமலிங்கம் கண்டித்தார். அத்துடன் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் களுக்குத் திருநீறு பூசிவிட்டார். தன் தலையில் குல்லா அணிந்து காட்டினார். பின்னர் கடைக்குத் திரும்பிய ராமலிங்கம், அந்தச் சம்பவத்தின்போது வரம்புமீறி நடந்து கொண்டதை உணர்ந்தார். உடனே, சம்பந்தப் பட்ட மதத் தலைவர்கள் சிலரிடம் அவர் வருத்தம் தெரிவித்ததுடன், ‘உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு நடந்துகொண்டேன்’ என்றும் சொல்லியிருக்கிறார். உள்ளூர் தலைவர்கள் அவரிடம், ‘நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துவிட்டீர்கள். இதன் பிறகு பிரச்னை ஏற்படாது’ என்று சொல்லியுள்ளனர். ஆனால், இப்படியாகிவிட்டது” என்றார்
ராமலிங்கத்தின் மனைவி சித்ராவிடம் பேசினோம், “எங்கள் வீட்டை சில புது ஆட்கள் நோட்டமிட்டனர். நான் என் கணவருக்குப் போன் செய்து ‘என்னங்க ஏதாவது பிரச்னையா’ என்று கேட்டேன். அப்போதுதான் அன்றைக்கு காலையில் நடந்ததை என்னிடம் கூறினார். அதுதொடர்பாக அந்த மதத்தைச் சார்ந்த பெரியவர்களிடம் பேசிவிட்டேன். பிரச்னை தீர்ந்துவிட்டது’ என்றும் சொன்னார். ஆனால், பிணமாகத்தான் வீட்டுக்கு அவரைக் கொண்டு வந்தார்கள். மன்னிப்பு கேட்ட பின்பும், கொலை செய்வதை எந்தக் கடவுள் சொல்லிக் கொடுத்தார்” என்று கதறினார்.

சம்பவத்தன்று ராமலிங்கத்துடன் சென்றவர் அவரின் மகன் ஷ்யாம் சுந்தர். அவரிடம் பேசியபோது, “அன்று இரவு கடையை மூடிவிட்டு லோடு ஆட்டோவில் அப்பாவும் நானும் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது காரில் வந்த நான்கு பேர், எங்களை வழிமறித்தனர். அவர்களிடம், ‘பெரியவர்களிடம், நடந்ததைப் பற்றிப் பேசிவிட்டேன்’ என்றார் அப்பா. என்னை நோக்கி அவர்கள் கத்தியை வீச என் மேல் பட்டுவிடக்கூடாது என அப்பா கையில் தடுத்தார். அப்போது அவர் கையில் வெட்டு விழுந்தது. மற்றொருவர் ஆட்டோவில் இருந்த சாவியை எடுக்க முயன்றார். அப்பா வலது கையால் சாவியைப் பிடித்துக்கொள்ள, கறி வெட்டும் கத்தியால் ஒருவர் கையில் பலமாக வெட்டினர். அப்பாவிற்கு ரத்தம் கொட்டியது. உடனே நான் ஆட்டோ விலேயே அழைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றேன். சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற வழியில் இறந்து விட்டார்” என்று சொல்லிக் கதறினார்.

சம்பந்தப்பட்ட மதப் பெரியவர்களிடம் பேசினோம். “ராமலிங்கம் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுடன் சகோதரர் போலப் பழகினார். பிப்ரவரி 5-ம் தேதி நடந்த சம்பவம் குறித்து, எங்கள் மதத்தைச் சேர்ந்த பெரியவர் களுடன் பேசினார். அவர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து எங்கள் தரப்பிலும் பிரச்னை முடிந்து விட்டது என நினைத்தோம். ஆனால், அவர் கொல்லப்பட்டதால், இரண்டு ஜமாத்களைச் சேர்ந்தவர்களும் ரொம்பவே வருத்தத்தில் உள்ளனர். ராமலிங்கத்தைக் கொன்றவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இதில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்றார்கள்.
தஞ்சாவூர் எஸ்.பி மகேஷ்வரனிடம் பேசினோம். “திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, அசாருதீன், ரிஸ்வான், சர்புதீன் உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள்மீது மதத்தின் பெயரால் கொலை செய்தல் என்கிற பிரிவில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள் ளன. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை யான குற்றவாளிகள்தான்” என்றார்.

இதற்கிடையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவரான எம்.முஹம்மது இஸ்மாயில், “ராமலிங்கம்மீது திருபுவனம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்கள்தான் அவரைக் கொலை செய்தனர் என்று சிலர் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற நிர்பந்தங்களைப் புறந்தள்ளி உரிய விசாரணையின் மூலம் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். கைதுசெய்யப்பட்ட ஒரு முதியவர் உட்பட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
- கே.குணசீலன், படங்கள்: ஆர்.வெங்கடேஷ்