
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: பாலகிருஷ்ணன்
அது, இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் காலம். ஒரு பதினைந்து வயதுச் சிறுவன், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்ட காரணத்துக்காக நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். அவனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன...
``உன் பெயர் என்ன?’’
``ஆசாத்.’’ (`ஆசாத்’ என்றால், `சுதந்திரம்’ என்று பொருள்)
``உன் தந்தையின் பெயர் என்ன?’’
``சுதின்.’’ (`சுதின்’ என்றாலும் `சுதந்திரம்’ என்றுதான் அர்த்தம்)
``நீ இருக்கும் வீடு..?’’
``சிறைச்சாலை.’’
பதினைந்து வயதுச் சிறுவனின் இந்தப் பதிலை எதிர்பாராத நீதிமன்றம் நிலைகுலைந்தது. அந்தச் சிறுவனுக்குப் பதினைந்து கசையடிகளைத் தரும்படி தீர்ப்பளித்தார் நீதிபதி. தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவன் உடம்பில் ஒவ்வொரு கசையடி விழுந்தபோதும், அவன் ``மகாத்மா காந்திக்கு ஜே...’’ என்று முழக்கமிட்டான். அவன் பெயர் ‘சந்திரசேகர் ஆசாத்.’

தேச விடுதலைப் போராட்டத்தில் ஒரு மகத்தான மனிதர் சந்திரசேகர் ஆசாத். தாயின் மீது மாறாத அன்புகொண்டவர். தன் தாயைக் காண வரும்போதெல்லாம், அவரைக் காவல்துறை கண்காணித்த காரணத்தால், தாயைச் சந்திப்பதைத் தவிர்த்தவர்.
அன்னையின் நினைவு எழும்போதெல்லாம் மண்ணில் முழங்காலிட்டு, தலையால் மண்ணைத் தொட்டு, ``அம்மா... நான் உன்னை மறந்துவிட்டேன் என்று ஒருபோதும் எண்ணாதே. நான் என்ன செய்வேன் தாயே... உன் அருகில் வர முடியாத என்னை மன்னித்துவிடு...’’ என்று கண்ணீர்விட்டு அழுவார் ஆசாத்.
தாயைவிட, தாய் மண்ணை நேசித்த விடுதலைப்போராட்ட வீரர்களைச் சந்தித்த மண், இந்த மண். தாய்ப்பற்றும், தாய்நாட்டுப்பற்றும் இந்த மண்ணுக்கே உரியது. தமிழ்ப் பண்பாட்டில் வீரம் என்பது வேர்; மகத்தான மந்திரச்சொல்; வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த உணர்வு.
போர்க்களத்தில் வீரர்கள், நேருக்கு நேர் சந்தித்துப் போரிடுவதுதான் மரபு. நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைத் தொலைத்தோமே... அதில் அந்த மரபு இருந்ததா? வீரம், விழுப்புண்ணைச் சுமப்பது; வீரமரணத்தைத் தழுவுவது.
தமிழ்நாட்டுப் பண்பாட்டின், வீரத்தின் அடையாளம் ஏனாதிநாத நாயனார். போர்த்தொழில் பயிற்சி கொடுத்தவர். அவரிடம் பயிற்சிபெற்றவர்கள், சிறந்த வீரர்களானார்கள். அதிசூரன் என்பவன் அவரின் வீரத்தைக் கண்டு பொறாமைப்பட்டான். பலமுறை அவரைப் போர்க்களத்தில் எதிர்கொண்டான். அத்தனை முறையும் தோற்றுப்போனான்.
ஒருநாள், அவரைத் தனியாகப் போருக்கு அழைத்தான். கேடயத்தால் தன் முகத்தை மறைத்து வைத்திருந்தான். அவர் அருகே வந்ததும், தன் முகத்தைக் காட்டினான். அவன் தரித்திருந்தது, திருவெண்ணீற்றுக் கோலம். சிவனடியார்கள்மீது மாறாத பக்தியும் பேரன்பும்கொண்ட ஏனாதிநாத நாயனார், தடுமாறிப்போனார். எதிர்த்துப் போரிடாமல், போரிடுவதுபோல் நடித்து, தோற்றுப்போய், வீர மரணத்தைத் தழுவினார்.
போர் அறம் என்று ஒன்று உண்டு. யாரோடெல்லாம் போரிடலாம் என்கிற அறம். ஆயுதம் இல்லாதவர்களை, பெண்களை, முதியவர்களைப் போரில் தாக்கக் கூடாது. இன்று அந்த அறம் இல்லை. மாலைக் காலம் வந்துவிட்டால் போர் நிறுத்தப்படும். அந்த அறம்கூடக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கரிகால் பெருவளத்தானும், சேரமான் பெருஞ்சேரலாதனும் போரிட்டார்கள். பெருஞ்சேரலாதனுக்கு, கரிகால் பெருவளத்தான் தாக்கியதில், நெஞ்சில் செருகிய வேல் முதுகுக்குச் சென்றுவிட்டது. முதுகில் காயம்பட்டுவிட்டதால் இது விழுப்புண் அல்ல; தனக்கு நேர்ந்த அவமானம் என்று வடக்கிருந்து உயிர் துறந்தார் சேரமான் பெருஞ்சேரலாதன். இதை வெண்ணிக் குயத்தியார் பாடுகிறார்...
‘கரிகால் வளவா! நீ போரில் வெற்றி பெற்றாய். சேரமான் பெருஞ்சேரலாதன், விழுப்புண்ணைச் சுமந்த பெருமைக்குரியவன். ஆனால், அது முதுகுவரை சென்றுவிட்டதால், நெஞ்சுப்புண் முதுகுப்புண்ணாகிவிட்டதே என்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அவன் உன்னைவிட நல்லவன் அல்லவா!’ இதுதான் போர் அறம்.
ராமனுக்கும் ராவணனுக்கும் உச்சக்கட்டக் கடைசிப்போர். ராவணன், ஆயுதமின்றி நிராயுதபாணியாக நிற்க, ``இன்று போய் நாளை வா’’ என்பார் ராமர். இது போர் அறம்.

இன்று..? ஜம்மு-காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை இழந்துவிட்டோம். தமிழகத்து வீரர் சுப்பிரமணியனையும் இழந்து நிற்கிறோம். சுப்பிரமணியன், கிருஷ்ணவேணி என்ற பெண்ணைக் கரம் பிடித்து ஓராண்டுகூடத் திருமண வாழ்க்கையைக் கடக்காதவர். தேசத்தைக் காக்கும் போரில் தன்னையே தந்துவிட்டார். அவரின் தந்தை வருவோரிடமெல்லாம் ‘என் மகனுக்குப் பெருசா காயம் எதுவும் இல்லையே?’ என்று கேட்கிறார். மகனின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தவிக்கிறார். இப்படிப்பட்ட போர் வீரர்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போதுதான், நம் தேசம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது.
குழந்தை இறந்தால், அதன் உடலில் லேசாக வாளால் கீறிப் புதைப்பது தமிழர் மரபு. குழந்தை இறந்தே பிறந்திருந்தாலும், உருவமின்றி தசைப் பிண்டமாகப் பிறந்திருந்தாலும் வாளால் கீறப்பட்டு, அது விழுப்புண்ணைச் சுமந்த பிறகுதான் புதைக்கப்படும்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான் என்பவனிடம் போரில் தோற்றுப்போனான்; சிறையில் அடைக்கப்பட்டான். ஒருநாள் தாகத்தின் உச்சத்தில் தண்ணீர் கேட்டான். தண்ணீர் வருவதற்குச் சற்றுத் தாமதமானது. அவ்வளவுதான்... அந்தத் தண்ணீரை அருந்தாமல், ‘இப்படி வாழ்வதைவிட உயிரைவிடுவது மேல்’ என்று சொல்லி, தன் உயிரைவிட்டான். இப்படித் தன்மானத்தின் உச்சத்தில் வாழ்வதுதான் தமிழர் மரபு. தன்மானமும் இனமானமும் தமிழர்களிடம் இரண்டறக் கலந்தவை.
வடபுலத்து வேந்தர்கள் சேர சோழ பாண்டியர்களை இகழ்ந்து பேசினார்கள். சேரன் செங்குட்டுவன், வடபுலத்துக்குப் படையெடுத்துச் சென்று, அப்படி இகழ்ந்து பேசியவர்களை வென்றான். கண்ணகிக்குச் சிலைவடிக்கக் கல்லெடுத்து வந்தான். ஆனால், மூவேந்தர்களில் மற்றவர்களுக்கு அவன் வெற்றிச் செய்தியை ஏற்றுக்கொள்ள மனமில்லை. அவன் வெற்றியை இகழ்ந்து பேசினார்கள். சக வேந்தர்களின் அவமானத்தையும் தமிழர்களின் தன்மானமாக எண்ணிப்பார்த்தான் சேரன் செங்குட்டுவன். ஆனால், மற்றவர்கள் அப்பொழுது அப்படி எண்ணிப்பார்க்கத் தவறி விட்டார்கள்.
டாக்டர் அப்துல் கலாம், 2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் 30-ஆம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பொக்கராவுக்குப் போனார். அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அன்றைக்கு அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் பணிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார். அன்று இரவு அவருக்கு ஒரு கனவு... அதில் மாமன்னர் அசோகர், காந்தியடிகள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஆபிரஹாம் லிங்கன், கலீபா ஓமர்... எல்லோரும் வந்தார்கள்.
மன்னர் அசோகர் கலிங்கத்துப் போர்க்களத்தில் வெற்றிபெற்று நிற்கிறார். போர்க்களக் காட்சி கொடூரமாக இருக்கிறது. வெற்றிக்கு அவர் கொடுத்த விலை? மூன்று லட்சம் பேர் பலிகொடுக்கப்பட்டார்கள்; மூன்று லட்சம் பேர் காயமடைந்திருந்தார்கள். அந்த வெற்றி, அவருக்கு மன மகிழ்ச்சியை, நிம்மதியைத் தரவில்லை. இயற்கையே அவரது வெற்றிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியதுபோல இருந்தது. அந்த நேரத்தில்தான் அவருக்குள் அஹிம்சை தர்மம் தோன்றுகிறது. `இனி மனிதகுலத்தின் மேன்மைக்காக அன்பைப் பரப்ப வேண்டும்’ என்ற ஆண்டவனின் கட்டளையை அவர் அந்தத் தருணத்தில் ஏற்றுக்கொள்கிறார்.
‘துயரத்தை விளைவிப்பதில் எந்த வெற்றியும் இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். வெற்றி என்பது அமைதி தவழும் ராஜாங்கமே’ என்று குறிப்பிடுகிறார் அசோகர்.
அடுத்து கனவில் வந்த காந்தி, `வெவ்வேறு மதங்களை, இனங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மொழிகள் பேசுவோரும் அமைதியாகவும் வளமாகவும் எப்படி இணைந்து வாழ வேண்டும் என்ற செய்தியைத்தான் நாம் வழங்க வேண்டும்’ என்கிறார்.
பிறகு வந்த கலீபா ஓமர், `அனைத்து மனிதர்களும் சமம் என்பதை ஜெருசலேமில் நுழைந்த பிறகுதான் நான் கற்றுக்கொண்டேன். ஒருவருடைய பாதையைப் பின்பற்றும்படி மற்றவர்களை பலவந்தப்படுத்துவது எந்தவிதத்திலும் சரியில்லை. உங்களுக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதை மட்டும் நீங்கள் அடைவீர்கள். இறைவன் மட்டுமே மேலானவன்’ என்று குறிப்பிடுகிறார்.
ஐன்ஸ்டீன், தன் நண்பர் வெர்னர் ஹீசன்பெர்க்கின் கருத்தோட்டத்தை நினைவுபடுத்துகிறார். ‘மேற்கில் நாம் அழகான, மிகப்பெரிய ஒரு கப்பலை உருவாக்கினோம். அனைத்து வசதிகளும்கொண்ட அதில், ஒன்று மட்டும் இல்லாமல் போய்விட்டது. திசைகாட்டும் கருவி. எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பது புலப்படவில்லை. தாகூர், காந்தி போன்றவர்களும், அவர்களின் ஆன்மிக மூதாதையர்களும் திசைகாட்டும் கருவியைக் கண்டுபிடித்தார்கள். இரு தரப்புமே தத்தம் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இந்தத் திசைகாட்டும் கருவியை மனிதக் கப்பலில் ஏன் பொருத்தக் கூடாது?’
‘மக்களுக்கும் நாடுகளுக்குமிடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம். ஏனென்றால், முன்னேற்றத்தையும் அதிகாரத்தையும் அடைய முயன்றபோது தார்மிக நீதி நெறிகளை நாம் புறக்கணித்து விட்டோம். மனித சுய உணர்வின் பங்களிப்பு என்ன என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அரசியல் சிந்தனை, அறிவியல் சிந்தனை மற்றும் சித்தாந்தச் சிந்தனைகளில் அதற்கு இடமிருக்கிறதா... வாழ்க்கை நீரோட்டத்தில், தெய்விகத் தன்மை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?’ என்று ஆபிரஹாம் லிங்கன் கேட்கிறார்.
நிறைவாக, அஷ்டவக்கிர முனிவரின் அருளுரையை மகாத்மா காந்தி நினைவுகூர்கிறார். `வாழ்க்கை நீரோட்டம் அமைதியும் செழுமையும் நிறைந்ததாக இருக்கட்டும். சுரண்டலுக்கும் மோதலுக்கும் இடமிருக்கக் கூடாது.’
இதுதான் இந்த பூமிக்கு நாம் விடுக்கும் செய்தி. நம் அனைத்துச் செய்திகளும், நாம் பின்பற்றும் எந்தக் கோட்பாடும், மனிதகுலத்தின் மேன்மைக்காக மட்டுமே அமைந்திருக்க வேண்டும். மனிதகுலத்தின் மேன்மையை நோக்கி ஊர்கள், நாடுகளைக் கடந்து, சாதி, சமய எல்லைகளைக் கடந்து மனிதர்கள் பயணம் செய்தால் உலகம் அமைதிப்பூங்காவாகத் திகழும். இந்த மண்ணுலகமே சொர்க்கமாகும். இது, கலாம் கண்ட கனவு. அந்தக் கனவு நனவாகுமா? அந்தக் கனவை நனவாக்குவது நம் இளைய தலைமுறையின் கைகளில் இருக்கிறது.
தேச எல்லையைக் காப்பதற்காக நம் 40 வீரர்களைப் பலிகொடுத்திருக்கிறோம். எண்ணிக்கை அல்ல, இந்தப் பலியின் பட்டியல். நம்மால் ஒரு கோப்பைத் தேநீரைத் தியாகம் செய்ய முடியவில்லை; ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய முடியவில்லை. ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டால் தவித்துப் போகிறோம். எல்லாவற்றிலும் சுகமாக வாழ ஆசைப்படுகிறோம். மனைவி மக்களைப் பிரிந்து, கொட்டும் பனியிலும் குளிரிலும், வாட்டும் வெயிலிலும், சூறைக்காற்றிலும் தேசம் காக்கும் பணி செய்த அந்த வீரர்களின் வீர மரணம் விடிவெள்ளி வெளிச்சமாக, ஒளிவிளக்காக நமக்குத் தெரிகிறது. பட்டொளி வீசி சுதந்திரக் கொடி பறப்பதற்கு சுவாசக்காற்றைத் தந்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
‘நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது’
என்ற குறளுக்கு இலக்கணமாக மரணத்தை வென்று வாழ்ந்த அந்த மாவீரர்களுக்குக் கண்ணீரால் மட்டுமல்ல, வாழும் வாழ்க்கையாலும் நன்றி செலுத்த வேண்டும். அதுதான் நாம் தேசத்துக்குச் செய்கிற உண்மையான கைம்மாறு.
- புரிவோம்...

தேசம் தந்த முகம்
அவன், தேசம் காக்கப் போரில் ஈடுபட்ட ஒரு ராணுவ வீரன். போரில் அவன் முகம் சிதைந்துபோனது. அவனுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவனுடைய பழைய முகம் மறைந்துபோனது; புதிய மனிதனைப்போல் இருந்தான் அவன். தன் ஊருக்கு வந்தான். அம்மாவுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. தாயிடம், ``நான் உங்கள் மகனின் நண்பன்’’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ``ஒரு வாரம் இங்கே தங்கிப் போகலாமா?’’ என்று அனுமதி கேட்டான். அம்மா அனுமதி தர, அங்கேயே ஒரு வாரம் தங்கினான். விடைபெற்றுத் திரும்பிப் போனான். அடுத்த நாள் அம்மாவிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. ``மகனே, வந்திருந்தது நீதான் என்று எனக்குத் தெரியும். உன் ஆடைகளைத் தூய்மை செய்கிறபோதே, அந்த மணத்திலிருந்தே நீதான் என் மகன் என்பதைத் தெரிந்துகொண்டேன். நீ என்னவோ புதிய மனிதன் என்பதுபோல் காட்டிக்கொண்டாய். பரவாயில்லை... முதலில் உனக்கிருந்தது உன் தாயின் முகம். இப்போது நீ பெற்றிருப்பது இந்த தேசத்தின் முகம். இதுதான் உன் சொந்த முகம்” என்று அம்மா எழுதியிருந்ததைப் படித்ததும் நெகிழ்ந்தான் அந்த வீரன்!