
வழக்கறிஞர் வைதேகி பாலாஜி
பெண்களின் பிரச்னைகளைப் பொது வெளியில் பலர் முன் விவாதிப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் சங்கடங்களைத் தரும். நீதிமன்றத்தில் குவியும் வழக்குகளுக்கு இடையில் பெண்களின் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனிக்கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. பாலியல் தொல்லைகள், குடும்ப வன்முறை, சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்னைகளை நீதிமன்றத்தில் தயக்கமின்றி வெளிப்படுத்தவும், எந்தவிதத் தடையுமின்றி அவர்களுக்கான நியாயத்தைப் பெற்றுத்தரவும் நீதிமன்றம் பெண்களுக்கென்று தனியாக நீதிமன்றத்தை உருவாக்க முடியுமா? சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம் என்னும் நிலையில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கச் சட்டம் அனுமதிக்குமா?

இந்தக் கேள்விகளுக்கு விடை காண, நாம் இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 15(3) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இப்பிரிவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்களின் நலன் கருதி, சிறப்பு ஏற்பாடு செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. இந்த அடிப்படையில்தான் மகளிர் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க `மகிளா கோர்ட்' எனும் மகளிர் நீதிமன்றம் உருவானது.
யாரெல்லாம் உறுப்பினர்கள்?
பொதுவான நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக, ஆண் பெண் என இருபாலரும் பணியமர்த்தப் பட்டிருப்பார்கள். இதுவே மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி மற்றும் அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் இருவரும் பெண்களாகவே இருப்பார்கள். குற்றவாளி, அவர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்... மற்ற அனைவரும் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது மகளிர் நீதிமன்றத்தின் கோட்பாடு. பாதிக்கப்பட்ட அல்லது நியாயம் கேட்கும் பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, அநியாயங்களைச் சொல்லும்போது அதைக் கேட்டு முடிவெடுக்கும் நீதிபதியும் விசாரணை செய்பவரும் ஆணாக இருந்தால் கூச்சம், தயக்கம் காரணமாக உண்மைகளைச் சொல்லாமல் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனாலேயே மகளிர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
யாரெல்லாம் வழக்கு பதிவுசெய்ய முடியும்?
போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கு வழக்கு பதிவு செய்யலாம். பாலியல் கொடுமைக்கு உள்ளாகி, கொடுமைப்படுத்தப்பட்ட மைனர் சிறுவனின் வழக்கு ஒன்றின் விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ‘இந்த வழக்கில் திருநங்கைகள் சம்பந்தப்பட்டிருக் கிறார்கள், அதனால் இந்த வழக்கை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யக் கூடாது; வழக்கை மகளிர் நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை மனு வைக்கப்பட்டது. அதை நிராகரித்து, மகளிர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் தொடர்பான வழக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாது திருநங்கைகளும் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்பது உறுதியாகிறது.

தமிழகத்தில் மாவட்டம்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அவரவர் வசிக்கும் பகுதிக்குட்பட்ட ஜூரிஸ்டிக்ஷனைத் தெரிந்துகொண்டு அதற்குரிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யலாம்.
`எந்தெந்த வழக்குகள் மகிளா கோர்ட்டில் கையாளப்படுகின்றன?’, `பெண்கள் சந்திக்கும் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் இந்த நீதிமன்றங்களில் தீர்வு கிடைக்குமா?’, `எந்த மாதிரியான வழக்குகளை இங்கு பதிவு செய்ய முடியும்?' - இதுபோன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். விவாகரத்து வழக்குகளை இங்கு பதிவுசெய்ய முடியாது. பெண்கள் சம்பந்தப்பட்ட, அவர்கள் நியாயம் கேட்டு வரும் பிரச்னையாகவே இருந்தாலும் சில குறிப்பிட்ட வழக்குகளை மட்டுமே இங்கு பதிவுசெய்ய முடியும். போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றமாகக் கூறப்படும் அனைத்து வழக்குகளையும் இங்கு பதிவுசெய்யலாம். தவிர குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 125, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (A), பிரிவு 354, 376 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாகி அவை மேல்முறையீடு அல்லது இதர சட்ட நடைமுறைகளின் கீழ் மாற்றலாகி வரும் வழக்குகளாக இருக்கும் போது, மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125
குடும்பத்தைப் பார்க்காமல் கைவிட்டுச் சென்ற கணவன் அல்லது ஒரே வீட்டில் வசித்துக்கொண்டு மனைவி, குழந்தைகளின் அன்றாடத் தேவை களுக்குப் பொருளுதவி செய்யாமல் ஏமாற்றும் கணவன், அல்லது விவாகரத்து நடைமுறையில் இருக்கும் நிலையில் மனைவி, பிள்ளைகளைப் பராமரிக்க பணஉதவி செய்யாத கணவன் போன்றவர்களிடமிருந்து பராமரிப்புச் செலவுக்காக ஜீவனாம்சத் தொகையைப் பெறுவதற்கு அல்லது இடைக்காலப் பராமரிப்புத் தொகையை (இன்டரிம் மெயின்டனன்ஸ்) பெறுவதற்கு இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரலாம்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 498 (A)
ஒரு பெண்ணின் கணவனோ, கணவன் வீட்டு உறவினர்களோ அந்தப் பெண்ணை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தி யிருந்தால், வரதட்சணைக் கொடுமை செய்திருந்தால், உடலில் காயம் உண்டாக்கியிருந்தால் அல்லது தற்கொலைக்குத் தூண்டியிருந்தால், அதற்குக் காரணம் அவளது கணவனோ, அவனது உறவினர்களோதான் என்பது நிரூபிக்கப்பட்டால், இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அத்தகைய குற்றத்தைச் செய்தவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கப்படும். அத்தகைய சிறைத்தண்டனை மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம். கணவன் மற்றும் கணவனின் குடும்ப உறவுகளால் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 (A) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்ய முடியும்.
பாலியல் குற்றங்கள்
* இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 - பெண்களை ஆபாசமாகப் படமெடுப்பது, ஆபாசமான படங்களைக் காட்சிப்படுத்துவது, பாலியல் உறவுக்கு அழைப்பது, கட்டாயப்படுத்துவது, சுருக்கமாகப் பெண்ணின் விருப்பமில்லாமல் அவருக்குப் பாலியல் ரீதியாகக் கொடுக்கப்படும் அத்தனை பாலியல் தொல்லைகளுக்கும் இந்தச் சட்டப்பிரிவு தீர்வளிக்கிறது.
* இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 509 - பெண்ணின் பெண்மையைக் களங்கப்படுத்தும் நோக்கத்துடனும் செயல்பாடுகளுடனும் நடந்துகொள்ளும் எவர் மீதும் புகார் கொடுக்கலாம்.
* பிரிவு 354 மற்றும் 509-ன் கீழ் குற்றங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை குற்றங்களுக்காகவும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
* இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 363 - கடத்தல் குற்றச் செயலில் ஈடுபட்டு அது நிரூபணமானால் கடத்திய நபருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அந்த சிறைத்தண்டனை ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
* இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 376 - சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் போன்றவற்றைப் பற்றியும் அதற்குரிய தண்டனைகளும் இந்தச் சட்டப்பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.
மகளிர் நீதிமன்றங்களில் குவிந்துள்ள வழக்கு களை விரைவாக முடிக்கும் பொருட்டு மகளிர் விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. பயன்படுத்திக்கொள்வோம்!
ஓவியம் : கோ.ராமமூர்த்தி
பரிவரிக் மகிளா லோக் அதாலத் (Parivarik Mahila Lok Adalat - PMLA)
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘நேஷனல் கமிஷன் பார் வுமன்’ அமைப்பின் வழிகாட்டுதலின்படி ‘பரிவரிக் வுமன் லோக் அதாலத்’ நடத்தப்படுகிறது. அதாவது, குடும்ப நலம் மற்றும் பெண்களுக்கான பிரச்னைகளை நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவுசெய்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, ‘கோர்ட், வாய்தா... இதெல்லாம் இதோடு போதும், இரு தரப்புக்கும் இடையில் யாராவது மத்தியஸ்தம் செய்து சேர்த்து வைத்தால் சுமுகமாக முடித்துக்கொள்ளலாம்’ என ஒரு தரப்பு நினைக்கலாம். அதற்கு மறுதரப்பும் சம்மதிக்கும் நிலையில், சமாதானமாக வழக்கை முடித்துக்கொள்ள விரும்பும் பெண்களுக்காக நடத்தப்படுவதே இந்த ‘பரிவரிக் மகிளா லோக் அதாலத்’.
நீதிபதி, வழக்கறிஞர், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்த லோக் அதாலத்தை நடத்திவைப்பார்கள். இது நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை நடைமுறைகளைக் கொண்டிருக்காது. நீதிமன்றம் அல்லாத மாற்று இடங்களில் இந்த லோக் அதாலத் விசாரணை நடைமுறைகள் நடத்தப்படும். விசாரித்து இங்கு முடித்து வைக்கப்படும் வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்கமாட்டார்கள்.
லோக் அதாலத்தில் தீர்வுக்கு வந்த பிறகு நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை, வழக்கமான வழக்குகளில் சந்திக்கும் நீதிமன்ற சம்பிரதாயத்தை பின்பற்றத் தேவை இருக்காது. இதன் பின்னர் நீதிமன்றத்திலும் இந்த வழக்குகள் முடிந்ததாகவே கருதப்படும். சிவில், விவாக ரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகள் மகிளா லோக் அதாலத்தில் தீர்த்துவைக்கப்படும்.
மகிளா நீதிமன்றங்கள்... ஒரு மதிப்பீடு!
பெரும்பாலான மகிளா நீதிமன்றங் களில் கோட்பாடுகளுக்கு மாறாக நீதிபதி மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் பதவிகளை ஆண்களே வகிக்கின்றனர்.
* ஒருவேளை விசாரிப்பவரும் தீர்ப்பு சொல்பவரும் பெண்ணாக இருந்தாலும், இதர வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், குற்றவாளியின் சார்பில் வாதிடும் வழக்கறிஞர், அவரின் உடன் வந்தவர்கள் என ஆண் உறுப்பினர்கள் அங்கு குழுமி, மகளிர் நீதிமன்றத்தின் நோக்கம் நிறைவேறாமல் ஆண்கள் நிறைந்திருக்கும் சூழலே நீடிக்கிறது.
* குறிப்பாக, சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளை விசாரிக்கும்போது இந்தப் புறச்சூழலால் பயம், அவமானம் சூழ்ந்துகொள்ள, அவர்களால் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை முழுமையாக அங்கு விவரிக்க முடியாது. இதனால் குற்றவாளிகள் நழுவிச்செல்ல வாய்ப்பாகிறது.
* மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 498 (A) பிரிவைத் தங்களுக்குச் சாதகமானதாகக் கையில் எடுத்துக்கொண்டு கணவன் மற்றும் அவரின் உறவுகளைப் பழிவாங்க அவர்கள்மீது பொய் வழக்கு பதியும் சில பெண்களால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மகிளா நீதிமன்றத்தின் மீதான மரியாதை, நம்பகத்தன்மையை இழக்கின்றனர்.
* குடும்ப வன்முறையால், பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கப்பட்ட மகிளா நீதிமன்றங்களின் நோக்கம் நிறைவேற, நீதித்துறையும் பொதுமக்களும் மகிளா நீதிமன்றங்களை உண்மைக்குப் புறம்பாகப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும்.