ஹரியானா மாநிலத்தின், சோனிபேட் மாவட்டத்தில் ஆறு லட்ச ரூபாய்க்காகக் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுவன், 15 வயது சிறுவனால் கொலைசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலைசெய்யப்பட்ட சிறுவன், குமாஸ்பூர் கிராமத்திலுள்ள டி.டி.ஐ எஸ்பானியா ஹவுஸிங் சொசைட்டியில் (TDI Espania housing society) வசிக்கும் அஜித் திரிபாதியின் மகன் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

சிறுவனின் தந்தை அஜித் திரிபாதி Paytm நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில் கடந்த திங்களன்று, குடியிருப்புப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஹன்னு கடத்தப்பட்டிருக்கிறார். அதோடு, சிறுவனைக் கடத்திய அந்த மர்ம நபர், சிறுவனை விடுவிக்க 6 லட்ச ரூபாய் வேண்டும் எனச் சிறிய கடிதத்தில் எழுதி, அதை அந்தக் குடியிருப்புப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
இத்தனைக்கும் சிறுவனைக் கடத்திய நபர் அதே ஹவுஸிங் சொசைட்டிக்கு அருகிலுள்ள கட்டடத்தில் வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹவுஸிங் சொசைட்டியின் அடித்தளத்திலுள்ள தண்ணீர்த் தொட்டியில் சிறுவனின் சடலம் இருப்பதாக போலீஸுக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீஸார், சந்தேகிக்கப்படும் 15 வயது கடத்தல் நபரைக் கைதுசெய்ததாக நேற்று தெரிவித்தனர்.

இது குறித்துப் பேசிய பஹல்கர் காவல் நிலைய அதிகாரி ரிஷிகாந்த், ``சிறுவனைக் கொலைசெய்து, ஹவுஸிங் சொசைட்டியின் அடித்தளத்திலுள்ள தண்ணீர்த் தொட்டியில் உடலை வீசியதாகக் கைதுசெய்யப்பட்ட சிறார் எங்களிடம் கூறினார். இந்தவ் சிறார்மீது இதற்கு முன்பு எந்தவொரு குற்றவியல் பதிவும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார்.