திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசின் கேந்திரியா விஹார் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கி, 3-வது விரிவாக்க கட்டுமானப் பணிகளை இரவும் பகலுமாக மேற்கொண்டுவருகின்றனர். அதில் 300 குடியிருப்புகள் கொண்ட கட்டடத்தில், கட்டடப் பணிக்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயதான ரபியூல் ஹக்கீ என்ற சிறுவன் 15 நாள்களுக்கு முன்பு வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பாதுகாப்புக் கருவிகள் எதுவும் அணியாமல் கட்டட வேலை செய்தபோது, ரபியூல் 8-வது தளத்திலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
கட்டட மேற்பார்வையாளர் அளித்த தகவலின் பெயரில் ஆவடி போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவுசெய்தனர். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பணியிடத்தில் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காத ஒப்பந்தக்காரர்மீது 304-A பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் பணியிலிருந்த கட்டட பொறுப்பு மேற்பார்வையாளர்கள் ரூபேல் உசேன் (25), மணிகண்டன் (29), ஷாஜகான் உள்ளிட்ட மூன்று பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸின் உத்தரவின்பேரில், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இதன் காரணமாக, வடமாநில கட்டடத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இரவு பகலாக வேலை செய்துவருகின்றனர். அதில் குறிப்பாக, வயது வரம்பு இல்லாமல் கட்டடப் பணிகளில் வடமாநிலச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.