
பாரதி இராஜநாயகம், கொழும்பு பத்திரிகையாளர்
‘உயிர்த்த ஞாயிறு’ தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற அதிரடியான தற்கொலைத் தாக்குதல்கள் உலகத்தின் பார்வையை மீண்டும் இலங்கையின் பக்கம் திருப்பியிருக்கின்றது.
இந்தியாவின் ‘ரா’, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்புகள் கொடுக்கப்பட்ட தாக்குதல் எச்சரிக்கை கண்டுகொள்ளப்படாமல் போனமைக்கு இலங்கைப் புலனாய்வுத் துறையின் குறைபாடு காரணமா, அதிகாரிகளின் அலட்சியம் காரணமா அல்லது அரசியல் தலைவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்ற சர்ச்சை இலங்கை அரசியலில் இப்போது விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து 40 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெறுவதற்காக சிரியாவுக்குச் சென்றுவந்திருப்பதை சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களில், ஐந்து பேர் சிரியாவில் நடைபெற்ற யுத்தத்தின்போது கொல்லப்பட்டார்கள் என்ற தகவலும் உள்ளது.

`ரா’வின் தகவலுக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக அதாவது மார்ச் இறுதிப் பகுதியில் இதேபோன்ற ஒரு ரகசியத் தகவலை அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இலங்கைக்குக் கொடுத்தது. ஆனாலும் இலங்கை அரசு இதுகுறித்து முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
தேசிய தௌஹீத் ஜமா-அத் என்ற அமைப்பின் செயற்பாடுகளை இலங்கையின் உளவுத்துறை நன்கு அறிந்தே இருந்தது. இலங்கையில் புத்தர் சிலைகளைத் தகர்த்தமை உட்பட பல வன்முறைச் சம்பவங்களில் இவ்வமைப்பு ஈடுபட்டிருந்தது. அதைவிட, மற்ற மதத்தவர்களுக்கு எதிரான பிரசாரத்திலும் இந்த அமைப்பு சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் குண்டுவெடிப்பு வரை அவர்கள் போவார்கள் என்று இலங்கை அரசு நினைக்காமல் இருந்திருக்கலாம்.
விடுதலைப் புலிகளுடன் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ்ப் பகுதிகளிலேயே பெருமளவு இராணுவத்தை இலங்கை அரசு குவித்து வைத்துள்ளது. தமிழர்களையே தம் எதிரிகளாகப் பார்த்துப் பழகிவிட்ட இலங்கையின் காவல்துறை, புலனாய்வுப் பிரிவு என்பன, முஸ்லிம் அமைப்பு ஒன்று இவ்வாறான தயாரிப்புகளில் ஈடுபடுகின்றது என்ற உளவுத்துறைச் செய்தியை நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. புலிகளுடனான போரின்போது முஸ்லிம் அமைப்புகள் இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இருந்தமையும் அதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படலாம்.
அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகளும் இன்றைய நிலைமைக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. உளவுத் தகவல்களை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் உளவுப் பிரிவுக்கு இருந்திருக்கலாம். தன்னை இந்திய உளவுப் பிரிவு படுகொலை செய்வதற்கு முயற்சி செய்தது என அதிபர் சிறிசேனா சில மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாகவே சொல்லியிருந்தார். அவ்வாறான வரிடம் `ரா’வின் தகவலைச் சொல்வதால் என்ன பலன் எனவும் அதிகாரிகள் சிந்தித்திருக்கலாம்.

இந்தக் குழப்பங்கள் எல்லாவற்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை தேசிய தௌஹீத் ஜமா-அத் நடத்தி முடித்துள்ளது. சர்வதேச ரீதியாக ஐ.எஸ். அமைப்பு அண்மைக்காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துவருகின்றது. சிரியாவில்கூட அவர்களுடைய கைகள் இப்போது அடங்கிப்போயிருக்கின்றன. தமக்கு மிகப்பெரிய வெற்றியொன்றைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. பலவீனமான ஒரு முனையாக இருந்த இலங்கை, இப்போது அவர்களுடைய இலக்காகி யிருக்கின்றது.
`உயிர்த்த ஞாயிறு’ தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசங்களில், இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரக் கடைசி வாக்கில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதலில், கணிசமான ஆயுதங்களும் வெடி பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள்களும் தீவிரவாத வாசகத்துடனான கறுப்புக்கொடிகளும் கைப்பற்றப்பட்டன. ஐ.எஸ். அடையாளத்துடன் உள்ள கறுப்புடையும் திரையும் இச்சோத னையின்போது அகப்பட்டன.
தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள் மீது மட்டுமல்லாமல், சந்தேகத்துக்குரிய முஸ்லிம் பிரமுகர்கள்மீதும் இலங்கை அரசு கடுமை காட்டியுள்ளது. கொழும்பு, கம்பெனி வீதி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 46 கத்திகள் கைப்பற்றப்பட்டன. கொழும்பு மாநகர சபையின் ரணில் கட்சி கவுன்சிலரான நூர்தீன் முகமது தாஜுதீன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இதைப்போலவே நீர்கொழும்பு நகரின் துணைமேயரான மகிந்த ராஜபக்சே கட்சியான பொது ஜன பெரமுனவைச் சேர்ந்த முகமது அன்சாரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் செல்வாக்குக் கொண்டவர்களே இராணுவத்தின் நெருக்கடிக்குத் தப்பமுடியாத நிலையில், வடக்கு. கிழக்கு மாகாணங்களிலும் தென்னிலங்கையிலும் மீன்பிடித் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள சாதாரண முஸ்லிம் மக்கள், நெருக்கடியான சூழலுக்குள் தள்ளப்படும் நிலை உருவாகி யிருக்கிறது.

இலங்கையில் செயற்படும் பொது பல சேனா போன்ற சிங்கள - புத்த மதவாத அமைப்புகளும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக வுள்ளன. இவ்வமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தற்போது சிறையில் உள்ளபோதும், இது போன்ற அமைப்புகளின் அழுத்தங்களும் இலங்கை அரசாங்கம் கடுமையாகச் செயற்படு வதற்குத் தூண்டும்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயற்பாடுகள், சராசரி இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையில்தான் நெருக்கடியை ஏற்படுத்தும். இப்போதே பர்தாவுக்குத் தடை போன்றவை வந்துவிட்ட சூழலில் ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்துக்குரியவராய்ப் பார்க்கப்படும் சூழல் உருவாகும்.
மேலும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பெயரில் இலங்கையில் மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துவிடும் ஒரு நிலைதான் எதிர்காலத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையை மையமாக வைத்து, அந்நிய நாடுகளின் தலையீட்டால் அங்கு ஓர் அசாதாரணமான நிலை தோன்றும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.