
பதறவைக்கும் பஞ்சாப் வங்கி! - 13.45 கிலோ தங்கம் மாயம்... வங்கி ஊழியர் மர்ம மரணம்!
கிலோக்கணக்கில் தங்கம் மாயம்... ஊழியர் மர்ம மரணம் என்று சர்ச்சையில் சிக்கியிருக்கிறது புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி.
‘‘என் கணவரின் மரணத்துக்கு வங்கி அதிகாரிகள்தான் காரணம். வங்கியில் நகைகள் திருட்டு போனதற்கான பழியை என் கணவர்மீது சுமத்த சதி நடக்கிறது’’ என்று கதறுகிறார் இறந்துபோன வங்கி ஊழியரின் மனைவி.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதுக்கோட்டை கிளையில் இருபது ஆண்டுகளாக அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி மாரிமுத்து வீடு திரும்பவில்லை. அதனால், ‘கணவரைக் காணவில்லை’ என்று மாரிமுத்துவின் மனைவி ராணி, கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மறுநாள், புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டைப் பகுதியில் மாரிமுத்துவின் கார் எரிந்த நிலையில் நின்றது. காருக்குள் சில கவரிங் வளையல்கள், ஹார்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டன. ஆனால், மாரிமுத்துவைப் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில், ‘வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் காணாமல் போய்விட்டன’ என்ற தகவல் பரவியது. இதனால், வங்கியின் முன் ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஒருவழியாக வங்கி ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இந்த நிலையில்தான் மே 3-ம் தேதி, (மணமேல்குடி) கோடியக்கரை கடற்கரைப் பகுதியில் மாரிமுத்துவின் சடலம் கிடந்தது. மணமேல்குடி போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கிய நிலையில்… ‘வங்கியிலிருந்து 4.84 கோடி ரூபாய் மதிப்பிலான 13.45 கிலோ தங்க நகைகளை மாரிமுத்து திருடிச் சென்றுவிட்டார்’ என்று புதுக்கோட்டை நகர் போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள். தொடர்ந்து டி.எஸ்.பி ஆறுமுகம் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாரிமுத்துவின் மனைவி ராணியிடம் பேசினோம். “என் கணவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே சோர்வாகத்தான் இருந்தார். நான் கேட்டபோதெல்லாம் ஆபீஸ் டென்ஷன் என்று சொன்னார். அவருக்கு வங்கியில் ஏதோ நெருக்கடி இருந்திருக்கிறது. திடீரென ஏப்ரல் 28-ம் தேதி வீட்டைவிட்டுக் கிளம்பியவர் வீடு திரும்பவில்லை. அதன் பின்பு அவரை நான் சடலமாகத்தான் பார்க்க நேர்ந்தது. அதுவரை, எந்தப் புகாரும் சொல்லாத வங்கி அதிகாரிகள், அவர் இறந்த பிறகு, அவசர அவசரமாகக் ‘கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளைக் காணவில்லை’ என்று புகார் செய்துள்ளனர். இதில் பெரிய சதி நடந்திருக்கிறது. எங்களுக்குக் குடியிருக்கும் வீட்டைத்தவிர வேறு சொத்து எதுவும் கிடையாது. அவர் சாதாரண அலுவலக உதவியாளர். அவர் எப்படி நகைகள் வைத்திருக்கும் லாக்கர் அறைக்குள் சென்று நகைகளைத் திருட முடியும்? வங்கி உயர் அதிகாரிகள் தவறு செய்துவிட்டு, என் கணவர் மீது பழி போட்டிருக்கி றார்கள். என் கணவர் எப்படி இறந்தார் என்றே கண்டுபிடிக்காத காவல் துறையினர், எங்களிடம்தான் துருவித்துருவி விசாரணை செய்கிறார்கள். வங்கி அதிகாரிகளை விசாரித்தால்தான் உண்மை தெரியும். என் கணவர் மரணத்தில் வங்கி அதிகாரிகள் மீதுதான் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது” என்றார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளிடம் பேசினோம். “மாரிமுத்து காணாமல் போய்விட்டார் என்று தகவல் கிடைத்ததும் ‘ஒருவேளை வங்கியில் நகைகள் திருடப்பட்டிருக்குமோ’ என்று சந்தேகம் எழுந்தது. அதனால் சோதனை நடத்தினோம். அப்போது தான், 13.45 கிலோ அளவுக்கு நகைகள் காணாமல் போனது எங்களுக்குத் தெரியவந்தது. அதனால் தான் போலீஸில் புகார் கொடுத்தோம்” என்றனர்.
புதுக்கோட்டை டி.எஸ்.பி ஆறுமுகத்திடம் பேசினோம். “வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ததில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள சில தனியார் நிதி நிறுவனங்களில் மாரிமுத்து மற்றும் அவரது உறவினர்களின் பெயர்களில் நகைகள் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவை அனைத்துமே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகள். இதுவரை ஐந்து கிலோ நகைகளை அடையாளம் கண்டிருக்கி றோம். வங்கி அதிகாரிகளிடமும் மாரிமுத்துவின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மாரிமுத்து மரணம் குறித்து மணமேல்குடி போலீஸாரும் அவர் காணாமல் போனது குறித்து கணேஷ் நகர் போலீஸாரும் விசாரித்து வருகிறார்கள்” என்றார்.

நகைகள் காணாமல் போகும்வரை வங்கி அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள், மாரிமுத்துவின் இறப்புக்கான காரணம் என்ன, அவரது கார் எரிக்கப்பட்டது ஏன்? இப்படி ஏராளமான கேள்விகள் பஞ்சாப் நேஷனல் வங்கியைச் சுற்றி வளைக்கின்றன. ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்தால் உண்மை வெளியே வரும்.
- இரா.மணிமாறன்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்