அலசல்
சமூகம்
Published:Updated:

பார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்?

பார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்?
பிரீமியம் ஸ்டோரி
News
பார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்?

மகனுடன் இளம்பெண் கண்ணீர்... சர்ச்சையில் கேரள சி.பி.எம் செயலாளர்...

கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன்மீது பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். “இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து, ஒன்பது வயது குழந்தை இருக்கும் நிலையில், என்னைக் கைவிட்டதுமன்றி... மிரட்டலும் விடுக்கிறார்” என்று புகாரில் தெரிவித்துள்ளார் அந்தப் பெண். இதற்கிடையே, “இந்த விவகாரம், என் மகனின் தனிப்பட்ட விஷயம்; சட்ட நடவடிக்கைகளில் தலையிடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார் கொடியேரி பாலகிருஷ்ணன்.

கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி. இவர்மீது துபாய் டான்ஸ் பாரில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த இளம்பெண் கடந்த வாரம் மும்பை போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், “பீகாரைச் சேர்ந்தவள் நான். 2007-ம் ஆண்டு என் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, மும்பையிலுள்ள சகோதரியின் வீட்டில் வசித்தேன். 2009-ம் ஆண்டு துபாயில் பார் டான்ஸராகச் சேர்ந்தேன். பாருக்கு தினமும் வரும் பினோய் கொடியேரி, துபாயில் கட்டடங்கள் கட்டும் பிசினஸ் செய்துவருவதாகக் கூறி அறிமுகமானார். விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைத் தந்து என்னை நெருங்கினார். டான்ஸர் வேலையை விட்டுவிட்டு வந்தால், திருமணம் செய்துகொள்வதாக வாக்கு தந்தார். இருவரும் நெருங்கிப் பழகியதால் 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் கர்ப்பமானேன். 2010 ஜூலை 22-ம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து மும்பைக்குச் சென்றேன். அப்போதும் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக என் தாயிடமும் சகோதரியிடமும் பினோய் உறுதி அளித்தார். 2010 பிப்ரவரியில் மும்பை அந்தேரி வெஸ்ட் பகுதியில் பிளாட் வாடகைக்கு எடுத்து அங்கு தங்கவைத்தார். துபாயிலிருந்து அடிக்கடி என் வீட்டுக்கு வந்துசெல்வார். மாதம்தோறும் பணமும் அனுப்பினார்.

பார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்?

2015-ம் ஆண்டு, ‘பிசினஸ் மோசமாக இருக்கிறது. இனி பணம் அனுப்ப முடியாது’ என்று கூறினார். அதன் பிறகு அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

2018-ம் ஆண்டு பினோய்க்கு எதிராகப் பண மோசடி புகார் வந்தது. அந்த விசாரணையின்போதுதான் பினோய்க்கு ஏற்கெனவே திருமணம் ஆன விவரம் எனக்குத் தெரிய வந்தது. ஒருவழியாக அவரைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டதும் என்னை மிரட்டத் தொடங்கினார்” என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த இளம் பெண்ணின் வங்கிக் கணக்கில் பினோய், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் நான்கு லட்சம் ரூபாய்வரை அனுப்பிய விவரங்கள் உள்ளன. மேலும் அந்த இளம் பெண் ணினுடைய மகனின் பிறப்புச் சான்றிதழில், தந்தையின் பெயர் ‘பினோய் வினோதினி பால கிருஷ்ணன்’ என உள்ளது. இதற்கிடையே ‘அந்தப் பெண் தன்னை பிளாக்மெயில் செய்கிறார்’ என்று பினோய் கொடியேரி, தலசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பெண்ணோ, ‘சந்தேகம் இருந்தால் தாராளமாக டி.என்.ஏ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ என்று புகாரில் உறுதியாக நிற்கிறார். இதையடுத்து தன் இரண்டு மொபைல் எண்களையும் அணைத்து வைத்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் பினோய் கொடியேரி. பினோயைக் கைது செய்ய மும்பை போலீஸ் கேரளத்தில் முகாமிட்டிருக்கிறது. ஏற்கெனவே பண மோசடி வழக்கில் சிக்கிய கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன், தற்போது இளம் பெண்ணை ஏமாற்றிய வழக்கில் சிக்கியிருப்பது ஆளும் சி.பி.எம் கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

பார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்?

“மறுமலர்ச்சி பற்றி பேசுபவர்கள் இந்தப் பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தவேண்டும். இதுகுறித்து கொடியேரி பாலகிருஷ்ணன் பதில் கூற வேண்டும்” என்று கேரள மாநிலக் காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார். பி.ஜே.பி முன்னாள் மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன், “பினோய் கொடியேரி மீதான புகாரில் வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை. மும்பை காவல்துறைக்குக் கேரள காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் கேரள சி.பி.எம் மாநிலக் குழு கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக இருக்கிறது. ஜூன் 22-ம் தேதி கூடிய மாநிலக் குழு, ‘மகன் செய்யும் தவறுக்காகத் தந்தையை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொடியேரி பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “என் மகன் பினோய் தனிக் குடித்தனமாக வாழ்க்கை நடத்துகிறார். நான் தினமும் அவனைக் கண்காணிக்கும் ஆளாக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்காது. இந்தப் புகாருக்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் தனியாக இந்த வழக்கைச் சந்திக்கட்டும். கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. குடும்ப உறுப்பினர் செய்த தவறுக்கான பொறுப்பைக் கட்சியோ, தனிப்பட்ட நானோ ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற விஷயங்களை சட்டரீதியாக ஆலோசித்து, கட்சி தீர்மானம் எடுக்கட்டும். அதில் நான் தலையிட விரும்பவில்லை” என்றார்.

- ஆர்.சிந்து