சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அரசு ஊழியர் தேன்மொழியை காதலன் சுரேந்தர் அரிவாளால் வெட்டினார். அடுத்த சில நிமிடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சுரேந்தர், இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஈரோடு மாவட்டம், கலியங்காட்டுவலக கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரின் மகள் தேன்மொழி (26). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் விடுதிக்குச் செல்ல காத்திருந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம், மோசனா சந்துவைச் சேர்ந்த விஜயராகவனின் மகன் சுரேந்தர் அங்கு வந்தார். தேன்மொழியிடம் தகராறில் ஈடுபட்ட சுரேந்தர், திடீரென அரிவாளால் வெட்டினார். இதில் தேன்மொழி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார்.
ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேன்மொழியைக் காப்பாற்ற சிலர் ஓடிவந்தனர். அதைப்பார்த்த சுரேந்தர், அவ்வழியாக வந்த ரயில்முன் பாய்ந்தார். இதில் ரயில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டார். தகவலறிந்த எழும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தேன்மொழியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சுரேந்தரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். மருத்துவமனைக்கு சுரேந்தர் கொண்டு செல்லும்போது தேன்மொழி குறித்து புலம்பியதாகத் தகவல் வெளியானது.

மருத்துவமனையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனால், சிகிச்சைக்குப்பிறகு தேன்மொழியின் உடல்நலம் தேறினார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி சுரேந்தர், இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவரின் உறவினர்கள் கதறி அழுதனர். அவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவர் மீது பதிவான கொலை முயற்சி வழக்கையும் சட்டப்படி போலீஸார் நீதிமன்றத்தில் விரைவில் முடித்து வைக்கவுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், `` தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சுரேந்தர் வேலை பார்த்து வந்தார்.
கல்லூரிக்கு இருவரும் பஸ்சில் சென்றபோது தேன்மொழியும் சுரேந்தரும் பழகியுள்ளனர். தேன்மொழியை சுரேந்தர் காதலித்துள்ளார். ஆனால், சில காரணங்களுக்காக காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சுரேந்தரை தேன்மொழி சந்திக்கவில்லை. போனில்கூட பேசவில்லை. ஆனால், தேன்மொழியை நேரில் சந்திக்க சுரேந்தர் சம்பவத்தன்று வந்துள்ளார். அப்போதுதான் அவரை அரிவாளால் சுரேந்தர் வெட்டியுள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் காதலன் சுரேந்தர் இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் சுரேந்தர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தோம். தற்போது அவர் இறந்துவிட்டதால் வழக்கு முடிவுக்கு வந்துவிடும். சிகிச்சையின்போது சுரேந்தருக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதனால், அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை. தேன்மொழி நலமாக உள்ளார். அவரிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளோம். விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி.கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுரேந்தருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், ``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் சுரேந்தர். அவரைக் காப்பாற்ற எங்களால் முடிந்த சிகிச்சைகளை மேற்கொண்டோம். சுயநினைவு இல்லாமல்தான் சிகிச்சை பெற்றார். அவருக்கு இறுதிவரை சுயநினைவு திரும்பவில்லை. அவரின் உறவினர்கள் மருத்துவமனையிலேயே காத்திருந்தனர்" என்றனர்.
சேத்துப்பட்டு ரயில்நிலையத்தை அடுத்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி, ராம்குமார் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரும், மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது தேன்மொழி வழக்கிலும் காதலன் சுரேந்தர் தற்கொலை செய்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.