வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சத்துவாச்சாரியில் செயல்பட்டுவருகிறது. இங்கு, ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கும், வாகன எண் பதிவுசெய்வதற்கும் லஞ்சம் கேட்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார் சென்றது. இந்த நிலையில், டி.எஸ்.பி சரவணக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று காலை அதிரடியாகச் சோதனையைத் தொடங்கினர். இதன் காரணமாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்துப் பணிகளும் இன்று நிறுத்திவைக்கப்பட்டன. வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

வெளி கேட்டை பூட்டிவிட்டு, அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். மாலை வரை தொடர்ந்த சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் கட்டுக்கட்டாக சிக்கியிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, முறைகேடாகப் பெறப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இதனால், ஆர்.டி.ஓ அலுவலகம் பரபரப்பாகக் காணப்படுகிறது.