சென்னை சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர், பெண் ஊழியர் ஒருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய மெசேஜ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் வேலைபார்க்கும் பெண் ஊழியருக்கு வாட்ஸ்அப் மூலம் காதல்வலை வீசியுள்ளார். அதற்கு அந்தப் பெண் ஊழியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உயரதிகாரியால் அந்தப்பெண் ஊழியர் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துள்ளார்.
உயரதிகாரி குறித்து புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன்பிறகு, உயரதிகாரியின் டார்ச்சர் இன்னும் அதிகமானது. இதனால், உயரதிகாரி குறித்து அந்தப் பெண் வெளியில் தகவல் தெரிவித்தார். அதோடு, அவருக்கு வேண்டப்பட்ட ஒருவரிடமும் உயரதிகாரியின் வாட்ஸ்அப் மெசேஜ்களை அந்தப் பெண் காண்பித்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சி.எம்.டி.ஏ அலுவலகத்துக்குச் சென்றார்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரியைச் சந்தித்த அந்த நபர், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால், அங்கேயே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை அலுவலகத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். அதன்பிறகும் அந்த உயரதிகாரி திருந்தவில்லை. மீண்டும் சம்பந்தப்பட்ட பெண் ஊழியருக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ்களை அனுப்பினார்.
அதிகாரியின் டார்ச்சர் தாங்க முடியாமல் அந்தப் பெண், வேலையை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். தன்னுடைய முடிவை அலுவலகத்தில் சொல்லிவிட்டு வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்துவருகிறார். தற்போது, சம்பந்தப்பட்ட உயரதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரியின் வாட்ஸ்அப் மெசேஜ், சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் உள்ள சிலர் மூலம் வெளியில் தெரியவந்துள்ளது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் செயல்படும் விசாகா கமிட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரி, பெண் ஊழியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்திவருகிறது. விசாரணை வளையத்தில் அந்த அதிகாரி இருப்பதால், அவரின் பதவி உயர்வை சி.எம்.டி.ஏ நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி இந்தப் பெண்ணைப் போல சில பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்அப்பில் காதல்வலை வீசிய தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தபோது, ``சம்பந்தப்பட்ட அதிகாரி, பிளானிங் பிரிவில் பணியாற்றுகிறார். நீண்ட காலமாக பணியாற்றிவரும் அந்த அதிகாரியின் நடவடிக்கைகள் பல பெண் ஊழியர்களுக்கு பிடிக்காது. பாதிக்கப்பட்ட பெண், சமீபத்தில்தான் இங்கு பணியில் சேர்ந்தார். பார்ப்பதற்கு அவர் அழகாக இருப்பார். இதனால், அவரிடம் அதிகாரி அன்பாகப் பழகினார். ஆரம்பத்தில் அந்தப்பெண்ணும் அதைத் தவறுதலாக எடுத்துக்கொள்ளவில்லை. சில நாள்கள் கடந்தபிறகு, அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் நம்பருக்கு காலை வணக்கம், இரவு வணக்கம் என அதிகாரி அனுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் பதில் அனுப்பியுள்ளார். அதன்பிறகு சில போட்டோக்களை அதிகாரி அனுப்பியுள்ளார். அதற்கும் அந்தப் பெண் பதிலளித்துள்ளார்.
நாள்கள் கடந்த நிலையில், அதிகாரியின் வாட்ஸ்அப் நம்பரிலிருந்து வந்த மெசேஜ்கள் இரட்டை அர்த்தத்தில் இருந்துள்ளன. அதில் `ரகசியமாக இருக்கும்; ஸ்பெஷல் கிஃப்ட் இருக்கு' என்று மெசேஜ் இருந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர், உயரதிகாரி என்பதால் அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைத் தனக்கு சாதகமாக கருதிய அந்த அதிகாரி, கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவது தொடர்பான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அத்தகைய மெஸ்ஸேஜ்களால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், வேலைக்கு வருவதில்லை. தற்போது, விசாகா கமிட்டியின் விசாரணை நடந்துவருகிறது. ஆனால், அதிகாரிக்கு உள்ள செல்வாக்கால், அவரை எதுவும் செய்ய முடியாது. இந்த பெண்ணைப் போல, சில பெண்கள் அந்த அதிகாரியால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.
சி.எம்.டி.ஏ அலுவலக உயரதிகாரியின் சுயரூபம் வெளியில் தெரிந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பினர், வாட்ஸ்அப் மெசேஜ்கள் எப்படி வெளியானது என்று விசாரித்துவருகின்றனர். அப்போது, அந்த அதிகாரிகளுக்கு வேண்டாதவர்கள் செய்த வேலை என்ற தகவல் கிடைத்ததும் அவர்கள் யார் என்ற பட்டியலை அதிகாரி தரப்பு சேகரித்துவருகிறது.
பெண் ஊழியருக்கு வாட்ஸ்அப் மூலம் காதல்வலை வீசிய சி.எம்.டி.ஏ அதிகாரிமீது விசாகா கமிட்டி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.