செம்மரங்களை வெட்டிக் கடத்துவதற்காக ஆந்திராவுக்கு காரில் சென்ற 7 இளைஞர்களை காட்பாடி போலீஸார் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக-ஆந்திர எல்லையான வேலூரை அடுத்த கல்புதூர் பகுதியில் காட்பாடி போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கிப் பார்வையிட்டனர். போலீஸைப் பார்த்ததும் காரில் இருந்த இளைஞர்கள் 7 பேரும் சந்தேகப்படும்படியாக திருதிருவென முழித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் நடந்த விசாரணையில் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் உறுதியானதையடுத்து, காவலர்கள் அவர்கள் வந்த காரை சோதனை செய்துள்ளனர். அதில் மரம் வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன.
போலீஸார் 7 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியதில், அவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஒரத்தநாடு மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (32), ராதாகிருஷ்ணன் (28), ஐயப்பன் (28), நாகராஜ் (33), கோவிந்தராஜ் (27), ஏகாம்பரம் (30), பிரகாஷ் (28) ஆகியோர் என்பதும், செம்மரம் வெட்டிக் கடத்துவதற்காக ஆந்திராவுக்குச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, 7 பேரையும் கைதுசெய்த போலீஸார் அவர்களிடமிருந்து கார் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.