அலசல்
Published:Updated:

மது கொடுத்து சீரழித்து, வீடியோவைக் காட்டி மிரட்டி... 17 வயது சிறுமியை நாசமாக்கிய 5 இளைஞர்கள்!

சீரழிக்கப்பட்ட சிறுமி!
பிரீமியம் ஸ்டோரி
News
சீரழிக்கப்பட்ட சிறுமி!

சமீபத்தில் ஐந்து பேருக்கும் இடையே போதையில் ஏதோ தகராறு நடந்திருக்கிறது. அந்தக் கோபத்தில் ஐந்து பேரில் யாரோ ஒருவன்தான் வீடியோவை வெளியிட்டிருக்கிறான்

‘‘அந்த வீடியோ மட்டும் இப்போ வெளியே வராமப் போயிருந்தா, அந்தப் பொண்ணுக்கு நடந்த கொடுமையெல்லாம் கடைசிவரைக்கும் யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும்’’ என 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை நினைத்து, போலீஸாரே பதைபதைக்கின்றனர்.

சீரழிக்கப்பட்ட சிறுமி!

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அவள். கூலி வேலைக்குச் செல்லும் அந்த வயதான தம்பதியருக்குப் பிறந்த மூன்று பெண் குழந்தைகளில் இரண்டாமவள் இவள். வெளியுலகம் தெரியாத வெள்ளந்தியான இந்தச் சிறுமியிடம், பக்கத்து வீட்டு இளைஞரான ரங்கநாதன் என்பவன் நட்பாகப் பேசிப் பழகியிருக்கிறான். கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற ரங்கநாதன், முசிறி ஆமூர் அருகே காவிரி ஆற்றங்கரையில் வைத்து பலவந்தமாக அவளைச் சீரழித்திருக்கிறான்.

மது கொடுத்து சீரழித்து, வீடியோவைக் காட்டி மிரட்டி... 17 வயது சிறுமியை நாசமாக்கிய 5 இளைஞர்கள்!

மேலும், அவனுடைய நண்பர்கள் நான்கு பேரையும் போனில் அழைக்க, அவர்களும் அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்துக்கு வந்திருக்கின்றனர். பின்னர் ஐந்து பேரும் சேர்ந்து மதுபானம் அருந்தியதோடு, குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து சிறுமியையும் வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்துள்ளனர். இதில் அந்தச் சிறுமி சுயநினைவின்றி மயங்கிப் போக, ஐந்து மிருகங்களும் மாறி மாறி அவளைச் சீரழித்திருக்கின்றனர். நடந்த இந்தக் கொடுமையையெல்லாம் ஐந்து பேரும் அவர்களுடைய செல்போன்களில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், அந்த வீடியோவை சிறுமியிடமே காட்டி, ‘நடந்த விஷயத்தை வெளியே சொன்னா, வீடியோவை இன்டர்நெட்ல போட்டு அசிங்கப்படுத்திடுவோம்’ என மிரட்டியுள்ளனர். தொடர்ச்சியாக அந்த வீடியோவைக் காட்டி மிரட்டியே ஐந்து பேரும் பலமுறை சிறுமியைச் சிதைத்திருக்கின்றனர்.

வாட்ஸ்அப்பில் வந்த வினை!

இந்த நிலையில், ‘உங்க மக, பசங்களோட பைக்குல சுத்திக்கிட்டு இருக்கா. கண்டிச்சிவெய்யுங்க’ என உறவினர்கள் சொல்ல, சிறுமிக்கு அவரின் பெற்றோர் அவசர அவசரமாகத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணமான இரண்டே நாள்களில், ‘எனக்கு இந்தக் கல்யாணமே புடிக்கலை’ எனப் பெற்றோர் வீட்டுக்கே திரும்பி வந்திருக்கிறார் சிறுமி. இதற்கிடையே, மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்ததாகப் புகார் போக, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை மீட்டு திருச்சியிலுள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சிறுமி காப்பகத்தில் தங்கிப் படித்துவர, பிரச்னை மறுபடியும் வாட்ஸ்அப் ரூபத்தில் வந்திருக்கிறது.

சிறுமியைச் சீரழித்து இளைஞர்கள் எடுத்த அந்தப் பழைய வீடியோ, சமீபத்தில் வாட்ஸ்அப்பில் பரவி, சிறுமியின் தந்தைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. மகளுக்கு நடந்தேறிய கொடுமையைக் கண்டு அதிர்ந்துபோனவர், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய போலீஸார், சிறுமியைச் சீரழித்த ரங்கநாதன், அவனுடைய கூட்டாளிகளான தர்மா, சரண், தினேஷ், மணி ஆகிய ஐந்து பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வெளியிட்டது யார்?

என்ன நடந்ததென விஷயமறிந்த சிலரிடம் பேசினோம். “சமீபத்தில் ஐந்து பேருக்கும் இடையே போதையில் ஏதோ தகராறு நடந்திருக்கிறது. அந்தக் கோபத்தில் ஐந்து பேரில் யாரோ ஒருவன்தான் வீடியோவை வெளியிட்டிருக்கிறான். சிறுமியைத் தொடர்ந்து சீரழிக்கும் நோக்கத்திலிருந்த இந்த ஐந்து பேரும்தான், சிறுமிக்கு ‘குழந்தைத் திருமணம்’ நடந்ததாக அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அந்த ஐந்து பேர் தங்கள் செல்போன்களை போலீஸாரிடம் கொடுக்காமல் மறைத்துவைத்துள்ளனர். அந்த போன்களைக் கைப்பற்றி ஆய்வுசெய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது” என்கின்றனர்.

மது கொடுத்து சீரழித்து, வீடியோவைக் காட்டி மிரட்டி... 17 வயது சிறுமியை நாசமாக்கிய 5 இளைஞர்கள்!

இந்த விவகாரம் குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காவேரியிடம் பேசுகையில், “வெளியாகியிருக்கும் வீடியோவில் சிறுமியுடன் இருப்பவனும், அந்த வீடியோவை எடுத்தவர்களும், ‘இந்த வீடியோவை நாங்கள் இன்டர்நெட்டில் போடவில்லை’ என்கின்றனர். வீடியோ எப்படி வெளியானது, யார் வெளியிட்டது, எந்தெந்த வெப்சைட்டுகளில் அது பதிவேற்றப்பட்டிருக்கிறது என சைபர் க்ரைம் மூலமாகத்தான் கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை இவர்கள் ஐந்து பேர் இல்லாமல் வேறு யாராவது இந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்திருப்பது தெரியவந்தால், நிச்சயமாக அவர்களையும் கைதுசெய்து சிறைக்கு அனுப்புவோம்” என்றார்.

முசிறி டி.எஸ்.பி யாஸ்மினிடம் பேசினோம். “சிறுமியிடம் விசாரித்தவகையில் கிடைத்த தகவலையடுத்து இரண்டே நாள்களில் ஐந்து பேரையும் கைது செய்தோம். அந்தப் பெண், ரொம்பவும் வெள்ளந்தியாக இருக்கிறாள். பார்க்கும்போது எங்களுக்கே பாவமாக இருக்கிறது. அவளுக்கு நடந்தது எவ்வளவு பெரிய கொடுமை என்பது அவளுக்கே தெரியவில்லை” என்றார்.

அவளைச் சீரழித்த மிருகங்களுக்காவது, ‘நாம் செய்தது எவ்வளவு பெரிய கொடுமை’ என்பதைப் புரியவைக்க வேண்டும்!