ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

உண்மைகளைப் பேச மறுக்கும் இருவர்!

தீராத சிக்கலில் ராமஜெயம் படுகொலை!

##~##

ராமஜெயம் கொலை விவகாரம் தொடர்பாக இதுவரை,400 பிரமுகர்களை வர​வழைத்து 'நேர்காணல்' நடத்தி விட்டது போலீஸ். ஆனாலும், கொலையாளி பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்க​வில்லை. சமீபத்தில் விசாரணை வளையத்தில் சிக்கியவர், தொட்டியம் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜசேகரன். அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நீடித்தாம். 

விசாரணை பற்றி ராஜ​சேகர​னிடம் கேட்டோம். ''என்னை விசாரணைக்கு அழைத்த போலீஸார், 'ராமஜெயத்துடன் உங்களுக்கு முன்விரோதம் உண்டா?’ என்று கேட்டனர். 'எனக்கும் ராமஜெயத்துக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்தது இல்லை. அவர் எனக்கு நெருக்கமான நண்பரும் இல்லை. அதனால்,

உண்மைகளைப் பேச மறுக்கும் இருவர்!

அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டால்தான் உருப்படியான தகவல் கிடைக்கும்’ என்று பதில் கூறினேன்.

அடுத்து, 'மணல் பிரச்னையில் ராமஜெயத்துடன் உங்களுக்கு தகராறு இருந்ததாமே?’ என்று கேட்டனர். 'மணல் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தியவர் கரூர் கே.சி.பழனிச்சாமி. மணல் விவகாரத்தில் ராம​ஜெயத்துக்குப் பங்கு எதுவும் இல்லாதபோது, எங்களுக்குள் எப்படிப் பிரச்னை ஏற்படும்?’ என்று கேட்டேன்.

'முசிறி தொகுதியில் நான் 2011 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, எனக்கு எதிராக கே.என்.நேரு சில காரியங்களைச் செய்தார். அதனால் கோபமடைந்த நான், அவரது அலுவலகத்துக்கே நேரில் சென்று சத்தம் போட்டுவிட்டு வந்தேன். நானும், நான் சார்ந்த முத்தரையர்சமூகத்தினரும் கோபம் ஏற்பட்​டால், அதை உடனே வெளிப்படுத்தி​விடுவோம். அதற்காக சமயம் பார்த்து காத்திருந்து சதிச் செய​லில் ஈடுபட மாட்டோம்’ என்று அழுத்தமாகக் கூறிவிட்டு வந்தேன்'' என்று சொன்னார்.

அடுத்து, சந்தேகத்தில் சிக்கி இருப்பவர் விளை​யாட்டு சங்க நிர்வாகி ஒருவர். ராமஜெயத்துக்கு விளையாட்டு​ மீது தீராத ஆர்வம் உண்டு. கிரிக்கெட், கூடைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுக்களை ஊக்குவித்து வந்தார். இதில் ராமஜெயத்துடன் நகமும் சதையுமாக இருந்த விளையாட்டு சங்க நிர்வாகி ஒருவர் மீதுதான் சந்தேகம் எழுந்துள்ளதாம். வீரர்களைத் தேர்வு செய்வதில் நடந்த உள்குத்து காரணமாக பழிவாங்குதல் நடந்திருக்குமா என்ற ரீதியில் விசாரணை விரிகிறது.

ராமஜெயத்தின் உறவுக்காரர் மற்றும்குறிப்பிட்ட நண்பர்கள் இருவரை விசாரணைக்குள் கொண்டு​வந்தும், போலீஸாரால் விஷயங்களைக் கறக்க முடிய​வில்லை​யாம். குடும்பத்தினரிடம் பேசாத பல விஷயங்கள்  இவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியுமாம். ஆனால் இவர்களும் வாய் திறந்து பேசாத மர்மம்தான் போலீஸுக்குப் புரியாமல் இருக்கிறது.

இந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ராமஜெயத்துக்கு சிலை வைக்க நேரு முடிவு செய்துள்ளாராம். அதை, திறந்து வைக்க கருணாநிதி வருகிறாராம். அதற்குள்ளாவது குற்றவாளிகள் பிடிபடுவார்களா?

- அ.சாதிக் பாட்ஷா