ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''சுப்பா ரெட்டி பேரை ஏன் சொல்லவில்லை?''

ரகசியம் உடைக்கும் ஸ்டாலின்!

##~##

மீண்டும் மாலை நேரத்து பிரசங்கங்களைத் தொடங்கி விட்டது தி.மு.க.! 

'சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டனக் கூட்டங்களுக்கு அறைகூவல் விடுத்த கருணாநிதி, முதல் கூட்டத்தை ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் கடந்த புதன் கிழமை அமர்க்களமாகத் தொடங்கி வைத்திருக்கிறார். டியூப் லைட், அலங்கார விளக்குகள் ஜமாய்த்தன. பளீச் வெளிச்சத்துக்கு உபயம், தமிழக அரசின் மின்சாரம்தான். அதாங்க தி....மின்சாரம்!  

தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஒருசேர மேடையில் அமர... கூட்டம் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்குப் பிறகு பேச வந்த துரைமுருகன் 'மைக்’கை கர்சீப்பால் துடைத்துவிட்டு, ''சபாநாயகரும் ஆளும் கட்சியோடு சேர்ந்து கொண்டதால் எங்களால் பணியாற்ற முடியவில்லை. அமைச்சர்கள் வம்புச் சண்டைக்கு இழுத்து, கலைஞரை வசைமாறிப் பொழிகிறார்கள். ஜெயலலிதா 110 விதியில் அறிக்கை படித்ததும் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் எழுந்து துதி பாடுகிறார்கள். புதிய சட்டசபையையும், அண்ணா நூலகத்தையும் பழைய மத்திய சிறைச்சாலையும் மருத்துவமனையாக்க முடிவு செய்திருக்கிறார். ஐரோப்பாவின் நோயாளி துருக்கி என்பார்கள். அதுபோல இந்தியாவின் நோயாளி தமிழ்நாடு என்று மாற்ற நினைக்கிறாரா ஜெயலலிதா?'' என்று பேசி விட்டு அமர்ந்தார்.

''சுப்பா ரெட்டி பேரை ஏன் சொல்லவில்லை?''

அடுத்து, பெரிய ஃபைலோடு மைக் முன்பு வந்து நின்றார் ஸ்டாலின். முந்தைய தினம் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் நில அபகரிப்பு தொடர்பாக ஸ்டாலினை ஒரு பிடி பிடித்திருந்தார்

''சுப்பா ரெட்டி பேரை ஏன் சொல்லவில்லை?''

ஜெயலலிதா. ''போலீஸ் மானியக் கோரிக்கையில் நான்தான் பேசுவதாக இருந்தேன். சட்டமன்றத்தில் பேசும் பேச்சை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது என்ற தைரியத்தில்தான் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. நில அபகரிப்புப் புகாரில் முதலில் கைது செய்துவிட்டுதான் எஃப்.ஐ-ஆரே போடுகிறார்கள். தி.மு.க. பனங்காட்டு நரி. இந்தச் சலசலப்புக்கு அஞ்சாது. இப்போது நான் இருக்கும் வீட்டை சேஷாத்ரி குமாரிடம் இருந்து வாங்கியதாகச் சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. அவருக்குத் தைரியம், தெம்பு இருந்தால் நான் அவையில் இருக்கும்போது இதைச் சொல்லியிருக்க வேண்டும். இந்த வீடு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு ஏலத்துக்கு வந்த போதுதான் வாங்கினேன். இந்த டெண்டரில் நடிகர் கமல் உட்பட பலரும் பங்கேற்றார்கள். இந்த விவரம்கூட ஜெயலலிதாவுக்கு எழுதிக் கொடுத்த போலீஸுக்குத் தெரியவில்லையே? சேஷாத்ரி குமார் புகார் கொடுத்திருந்தால் ஆதாரத்தைக் காட்ட வேண்டியதுதானே. அந்த புகாரின் அடிப்படையில் ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, உதயநிதி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான். ஆனால், ஒருவரின் பெயரை மட்டும் விட்டுவிட்டார். அவர் யார் தெரியுமா? ரெய்ன் ட்ரீ ஓட்டல் அதிபர் சுப்பா ரெட்டி. அவர் எனக்கும் நண்பர் ஜெயலலிதாவுக்கும் நண்பர். இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் கொடநாடு பங்களாவைக் கட்டியதே சுப்பா ரெட்டிதான். இப்போது, போயஸ் கார்டனில் நடக்கும் மராமத்துப் பணிகளையும் அவர்தான் செய்து வருகிறார். அதனால் அவர் பெயரை மட்டும் சொல்லாமல் விட்டிருக்கிறார். என் மீது நில அபகரிப்புப் புகார் சொல்கிறாயே.. கொடநாடு வழிப்பாதையை அபகரிக்கவில்லையா? அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கவில்லையா?'' என்று ஆவேசப்பட்டார்.

ஸ்டாலின் பேச்சை கருணாநிதி ரொம்பவும் ரசித்து மகிழ்ந்தார். இவ்வளவு பேசிய  ஸ்டாலின் லாகவமாக ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லாமல் கழன்று கொண்டார். 'இந்தப் புகாரில் தான் நிரபராதி என்று நீதிமன்றத்தில் ஸ்டாலின் நிரூபிக்கவில்லை. சேஷாத்திரி குமாருக்கு 1.75 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது’ என்று ஜெயலலிதா சொன்ன குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவில்லை. '1.75 கோடி ரூபாய்க்கு குறைவாக நிலத்தை எடுத்துக் கொண்டார்கள் என்றால் இதை நில அபகரிப்பு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது’ என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.

இறுதியாகப் பேசிய கருணாநிதி நிறையவே தழுதழுத்தார். ''நாங்கள் வம்புச் சண்டைக்கு போவது கிடையாது. அதே சமயம் வந்த சண்டையையும் விடுவதாக இல்லை. ஐஸ் கட்டிக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக பத்திரிகையில் செய்தி படித்தேன். காரணம் ஐஸ் கட்டிகளை எல்லாம் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வாங்கி சென்று... யார் தலையில் வைக்க வேண்டுமோ அவர்கள் தலையில் வைத்து சட்டசபையில் ஆராதனை செய்கிறார்கள். என்னுடைய நிறைவேறாத கனவு தனி ஈழம்தான். அது நிறைவேறாமல் போனதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. தமிழன் தலை நிமிர்ந்து வாழ தனி ஈழம் வேண்டும். அதற்கான விதையை உருவாக்கிவிட்டுத்தான் இந்த உலகத்தைவிட்டு விடை பெறுவேன். அதற்காக டெசோ இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது என் ஆசை'' என்று உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.

''எனக்கு 90 வயது நெருங்கி வருகிறது. இன்னும் ஓராண்டோ... ஈராண்டோ...அதற்குப் பிறகும் நான் வாழ வேண்டும் என்றால் உருவமாக இருந்து அல்ல... உங்களது அன்பிலே நிழலாடிக் கொண்டு இருக்கிற ஒரு பெயராக வாழ்ந்து கொண்டிருப்பேன். பெரியார் வாழவில்லையா? அண்ணா வாழவில்லையா? ஏன் அப்படி நான் வாழக்கூடாதா?'' என்று கருணாநிதி கேட்டபோது, கூட்டம் கொந்தளித்தது.

'தலைவர் கலைஞர் வாழ்க!’ என்று பலரும் கோஷம் எழுப்பினர். நீண்ட இடை​வெளிக்குப் பிறகு உற்சாகமான கூட்டமாக அது இருந்தது!

- எம். பரக்கத் அலி

படங்கள்: சு.குமரேசன்