ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கொலையும் செய்யும் போலீஸ்!

திருவள்ளூர் திகில்

##~##

'முந்தைய ஆட்சியில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. நான் காவல் துறையை மக்களின் நண்பனாகவும் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் மாற்றி அமைத்துள்ளேன்’  என்று கடந்த 24-ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்தில் சட்டசபையில் பேசினார், முதல்வர் ஜெயலலிதா. அந்த நேரம்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொலையில், முக்கியக் குற்றவாளி​களாக காவல் துறையைச் சேர்ந்த இருவர் பிடிபட்ட செய்தியும் வந்து சேர்ந்தது! 

திருவள்ளூர் மாவட்டம், திருமணம் (ஊரின் பெயர்தான்! ) ஊராட்சியின் தலை​வராக இருந்தவர் வீரன். கடந்த 20-ம் தேதி காலை தன் வீட்டுக்கு அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்துகொண்டு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், வீரனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்கள். புரட்சிபாரதம் கட்சியின் பொறுப்பில் இருந்தவர் வீரன். திருமணம் ஊராட்சியில் தொடர்ந்து இரண் டாவது முறையாகப் போட்டி இல்லாமல் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.

கொலையும் செய்யும் போலீஸ்!

இந்தக் கொலைக்குக் காரணம் என்று, பெண் விவகாரம், ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, உட் கட்சி

கொலையும் செய்யும் போலீஸ்!

பிரச்னை என்று எல்லாக் கோணங்களிலும் விசாரணை செய்தனர் தனிப்படையினர். கடைசி​யில் அவர்களது மோப்ப சக்தியில் ஏழு பேர் சிக்கி​னார்கள். அதில் இரண்டு பேர் 'மரியாதைக்குரிய’ காவல்துறையைச் சேர்ந்தவர்கள். இப்போது, நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷனின் காவலராக இருக்கும் சம்பத் சைலஜாகுமார் அதில் ஒருவர். இன்னொருவர், ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகப் பணியாளர் விவேக். இவர்களுடன் சேர்த்து ஏழு பேரை இந்தக் கொலை வழக்கில் கைது செய்துள்ளது போலீஸ்!

கொலையாளிகள் பிடிபட்டது குறித்து திருவள்​ளூர் டி.எஸ்.பி-யான பாலசந்திரனிடம் கேட்டோம். ''வீரனுக்கு உள்ளூரில் செல்வாக்கு அதிகம். அதனால், உள்ளூர் ஆட்கள் உதவி இல்லை என்றால் இந்தக் கொலை நடந்து இருக்க முடியாது என்று யூகித்துத்தான் விசாரணை நடத்தினோம். எங்கள் விசாரணையின்​போது ஊரின் பழைய தாதாவான முருகன் என்பவரைப் பற்றி தகவல் கிடைத்தது. கொலையான வீரன், 10 வருடங்களுக்கு முன், முருகனுடன் சட்ட விரோதத் தொழில்களில் எடுபிடியாக வேலை பார்த்தவர்.

ஒருகட்டத்தில் தொழிலைக் கற்றுக்கொண்டு, சொந்தமாகத் தொழிலில் இறங்கி... முருகனை விட மிகப்பெரிய ஆளாக வீரன் வளர்ந்து விட்டார். வீரனுக்கு அரசியல் செல்வாக்கும் கை கொடுக்கவே,  முருகன் தலைஎடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டார். வீரனால்தான் தனக்கு இந்த நிலை என்று முருகன் பலரிடமும் புலம்பி இருக்கிறார். கடந்த முறை ஊராட்சித் தலைவராக

கொலையும் செய்யும் போலீஸ்!

இருந்த நேரத்தில், ஒரு விவகாரத்தில் முருகனை அவரது வீட்டில் வைத்து, அவருடைய மகன்கள் கண்முன்பே அடித்து உதைத்து இருக்கிறார் வீரன்.

இந்த அவமானத்தால் ஊரை விட்டுப்போன முருகன், ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஊருக்குத் திரும்பி இருக்கிறார். நடந்த அவமானத்தை முருகனும் அவரது மகன் செல்வக்​குமாரும் மறக்கவில்லை. செல்வக்குமாரின் நெருங்கிய நண்பர்​தான் காவலர் சம்பத் சைலஜா குமார். ரெண்டு பேரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.   'வீரனால்தான் நல்ல நிலை​மையில இருந்த எங்க குடும்பம் கஷ்ட நிலைமைக்கு வந்திடுச்சு. வீரன் ஒழிஞ்சாத்தான் எங்களுக்கு நிம்மதி’ என்று செல்வகுமார் புலம்பி இருக்கிறார். 'வீரனைப் போட்டுத் தள்ளிட்டா வக்கீலை வச்சுப் பார்த்துக்கலாம்’ என்றும் சொல்லி இருக்கிறார்.

நண்பனுக்காக சம்பத்தும் இதற்கு சம்மதித்து  தானே களத்தில் இறங்க முடிவு எடுத்தார். அவருக்கு உதவியாக காவலர் விவேக்கையும் அழைத்துக் கொண்டார்.  ஆனால், விவேக்கிடம் கொலையைப் பற்றி எதுவும் சொல்லாமல், 'ரொம்ப நாளா ஒருத்தன் தொந்தரவு கொடுத்துட்டு இருக்கான். அவனைக் கொஞ்சம் தட்டி வைக்கணும்... வா’ என்று  சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்கள். வீரனை முடிச்ச உடனே முருகன் தரப்பு நீதிமன்​றத்தில் சரண்டர் ஆவது, வக்கீல்கள் மூல​மாக  சம்பத் அவங்களை வெளியே எடுப்​பது... இதுதான் இவர்களின் திட்டம்!

வீரன் தன்னோட வீட்டுக்குப் பக்கத்தில் சேரில் உட்கார்ந்து ஒருத்தரிடம்  பேசிட்டு இருந்திருக்கிறார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று  சம்பத், விவேக், செல்வக்குமார், இவங்களோட நண்பர் சுரேஷ் ஆகிய நாலு பேர் ரெண்டு பைக்குல போய் வீரனை சுத்தி வளைச்சிருக்காங்க. சம்பத்தும் சுரேஷ§ம் சேர்ந்து வீரனைக் கத்தியால குத்திச் சாய்க்க... நாலு பேரும் பைக்குல தப்பி இருக்​காங்க.  செல்வகுமார் சொன்ன தகவல் அடிப்​படையில் முருகன் உட்பட மொத்தம் ஏழு பேரைக் கைது செய்துள்ளோம்.  கண்ணியமான போலீஸ் வேலையில் இருந்துட்டு.... திட்டம் போட்டுக் கொலை செய்தவர்களை மன்னிக்கவே கூடாது...'' என்றார் காட்டமாக!

காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் சம்பவம்!

   - எஸ்.கிருபாகரன்