தமிழகத்துக்குச் சாதகமான இறுதி அறிக்கை
##~## |
முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகம் மனம் குளிரும் தீர்ப்பு வந்து விட்டது!
தென்மாவட்டத்து மக்களின் விவசாய வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடித்தளமாகவும் வாழ்வாதாரமாகவும் இருப்பது முல்லைப் பெரியாறு. அதனுடைய நீர் மட்ட அளவு 152 அடி. அணையின் கட்டுமானத்தில் கேள்வி எழுப்பி 136 அடியாக கேரள அரசு முடுக்கி விட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 142 அடிக்கு தமிழகம் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து தடுத்து வந்தது கேரள மாநிலம். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் தரத்தை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் இறுதி அறிக்கை கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு 250 பக்கங்களைக் கொண்ட தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ''முல்லைப் பெரியாறு அணையானது கட்டுமானம் மற்றும் நீரியல்துறை விதிகளின்படி பலமாக இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டின் கோரிக்கையான 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம். நிலஅதிர்வு போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கக்கூடிய அளவுக்கு அணை பலமாக உள்ளது. இதுவரை, இடுக்கியைச் சுற்றியும் நடந்துள்ள பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையைப் போன்றே, இடுக்கி அணைக்கும் எந்தப் பாதிப்பும் வராது'' என்று சொல்கிறது இந்த அறிக்கை.
கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சி குறித்துப் பேசும் இந்தக் கமிட்டி, ''புதிய அணை கட்டப்போகும் இடமும் அதன் நீர்வரத்தும் இப்போது உள்ள அணையை எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும். புதிய அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 155 அடிதான் இருக்க வேண்டும். நீர்பகிர்வு, அணையின் பராமரிப்பு போன்றவற்றில் தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து ஒரு புதிய ஒப்பந்தம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றும் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நடந்த அமர்வின்போது, தமிழகம் சார்பாக நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் மற்றும் கேரளா சார்பாக நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் ஐவர் குழுவிடம் முல்லைப் பெரியாறில் செய்யப்பட்ட ஆய்வுகள்... அங்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட விவகாரங்கள் குறித்துக் கேட்டு அறிந்தார்கள்.
ஆய்வறிக்கை முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போது கேரளப் பிரதிநிதி கே.டி.தாமஸ், ''அணையில் இப்போது இருக்கும் கொள்ளளவின் அளவு 136 அடியாகவே தொடர்ந்து இருந்தால் தமிழக மக்களுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுவிடப்போகிறது?'' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ''142 அடி நீர் தேவைதானா? 142 அடியாக உயர்த்தினால் பெரியாறு அணைக்கும் அதில் இருந்து செல்லும் இடுக்கி அணைக்கும் இடையே உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் என்ன பாதுகாப்பு?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஆனந்த் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், 'முல்லைப் பெரியாறு அணையானது நீரியல் விதிகளின்படி சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது. அதேசமயம் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது' என்றே பதில் கூறி உள்ளார்கள். மறுபடியும், ''இடுக்கி அணையைச் சுற்றி நிகழும் நில அதிர்வு சம்பந்தப்பட்ட புவியியல் கோளாறுகளால் நிச்சயமாக அணை உடைய வாய்ப்பிருக்கிறது. அணையின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்களுக்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன?'' என்று கேட்டது கேரள அரசு.
'இதுவரை இடுக்கிப் பகுதிகளில் நடந்த நில நடுக்கங்களை சீஸ்மோகிராஃப் மூலம் ஆய்வு செய்தபோது பெரியாறு அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று உறுதியாகி உள்ளது. ஏனென்றால் அணை, புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. மேலும், இடுக்கி அணையைச் சுற்றியும், முல்லைப் பெரியாறில் இருந்து இடுக்கிக்குத் தண்ணீர் செல்லும் பாதைகளிலும், குடியிருப்புப் பகுதிகள் என்று கேரளா சுட்டிக்காட்டி இருக்கும் எண்ணிக்கையை விட குறைவாகவே மக்கள் தொகை உள்ளது. அணையில் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தினால் 10 டி.எம்.சி. தண்ணீர் பயன்பாட்டில் இருக்கும். 146 அடியாக உயர்த்தினால் 6 டி.எம்.சி மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதனால் ஆபத்து வருவதற்கு துளியும் வாய்ப்பு இல்லை, அணை பலமாகத்தான் இருக்கிறது' என்று கேரளப் பிரதிநிதியின் கேள்விகளுக்கு ஐவர் குழுவில் இருந்த சி.டி. தத்தே பதில் சொன்னார்.
''பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட இந்த 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை இரண்டு மாநிலங்களும் பொதுவான ஒன்றாக ஏற்றுக்கொள்ளவேண்டும்'' என்று உயர்மட்டக் குழுவினர் சொன்னார்கள். ஆனால் கேரளாவோ, ''புதிய அணை கட்டியே தீருவோம். அதில் 155 அடிக்கு நீரைத் தேக்கிவைத்து இப்போது தமிழகத்துக்குத் தரும் தண்ணீரின் அளவைவிட அதிகம் தருவோம். பழைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் நிரா கரித்துவிட்டு, புதிதாக ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பெரியாறு அணையானது இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை இல்லை. நீர் மட்டும்தான் தமிழகத்துக்குச் சொந்தம்... அணை எங்களுக்கே சொந்தம்'' என்றும் வாதிட்டனர்.
இந்த அறிக்கை மீதான விவாதம் வரும் மே 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது. தமிழகத்துக்கு சாதகமான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால், கேரளா எப்படி ரியாக்ட் செய்யப் போகிறது என்பதை எல்லையோர மக்கள் பதற்றத்துடன் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
- சண்.சரவணக்குமார்