ஜூ.வி. நூலகம்
பிரமிள், தொகுப்பாசிரியர்: கால சுப்ரமணியம், வம்சி புக்ஸ்,
19. டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை:

200
##~## |
புதுமைப்பித்தனுக்குப் பிறகு படைப்பாற்றலும் விமர்சனச் சக்தியும் ஒருங்கே பெற்றவர் பிரமிள். எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக் கொண்டவர்கள் இலக்கியத்தில் அதிகம். ஆனால், உண்மையிலேயே எல்லாம் தெரிந்தவராக இருந்தவர் பிரமிள். கவிஞர், விமர்சகர், ஓவியர், நாடகஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், விஞ்ஞானக் கட்டுரையாளர், நியூமராலஜி மற்றும் ஜோதிடம் அறிந்தவர், ஆன்மிக ஞானம் பெற்றவர் என்று பிரமிளுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. யாருக்காகவும் எதற் காகவும் சலனப்படாமல் விமர்சனம் செய்த பாணி அவருடையது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்தில் 'சீக்கிரம் செத்துப் போய் விடமாட்டாரா?’ என்று 'பெரிய’ இலக்கியகர்த்தாக்கள் 'யாகம்’ நடத்தாத குறையாக வேண்டிக்கொண்டு இருந்தார்கள். அத்தகைய 'கவனிப்புக்கு’ உரியவர் எழுதிய சமூகவியல் கட்டு ரைகளின் தொகுப்பு இது.
கலை, கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா?... இந்தக் கேள்வி இலக்கியம் தோன்றிய காலத்தில்

தொடங்கிய விவாதமாக இருக்கலாம். ஆனால், இன்றுவரை தொடரும் விவாதம். 'அரசியல் முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க முடியாதவர்கள்’ கலை, கலைக்காகவே என்று சொன்னார்கள். சமூகக்களத்தில் இயங்கியவர்கள், தாங்கள் எழுதியவை அனைத்தையும் உண்மையான இலக்கியமாகச் சாதித்தார்கள். இந்த இரண்டு கோளாறான பார்வை களுக்கு மத்தியில் மிகச்சரியான விமர்சன ஒழுங்கைக் கட்டமைக்கக் கூடியவராக பிரமிள் இருந்தார்.
பிரமிள் கட்டுரைகளில் மிக முக்கியமான அடிப்படைகளாக இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று, தத்துவம். இன்னொன்று, வரலாறு. எதைப்பற்றி எழுதினாலும் மிகஅதிகமாகவே பின்னோக்கிப் பார்த்து எழுதக்கூடிய வரலாற்று அறிவு அவருக்கு இருந்தது. அதைத் தத்துவ விசாரணைகளோடு செய்யக்கூடிய தர்க்கமும் இருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால், அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய 'ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை’ என்ற மிக நீண்ட கட்டுரையைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் வந்த முக்கியமான செறிவான கட்டுரை அது. அதில் பிரமிள் சொன்னதை இப்போது படிக்கும்போது, 'இப்படிச் செய்திருக்கலாமோ’ என்பதை உணர்த்துகிறது.
'விமர்சனத் திருஷ்டியற்று வெறும் தற்பெருமையை மட்டும் மூலதனமாகக் கொள்ளும் அரசியல், இன்றைய ஜனநாயக உலகிலும் சோஷலிஸ உலகிலும் நெருக்கடிகளை மட்டும் உருவாக்கும். ஜனநாயக அடிப்படையில் உரிமை கோருவதற்காக, இன ரீதியான தற்பெருமைகளைப் பிரசாரக் கருவி ஆக்குவது பொருத்தமற்றது. சமத்துவம் வேண்டிய தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்த நியாயம், சிங்கள வாக்காளர்களை எட்டவில்லை. ஒரு பகை இனத்தின் கோரிக்கைகளாக இவை பார்க்கப்பட்டதற்குக் காரணம், தமிழ்த் தற்பெருமைகள்தான்’ என்று எழுதினார் பிரமிள். மிகப்பெரிய இழப்புக்குப் பிறகு, இதில் உள்ள நியாயங்களை உணர முடிகிறது. அத் தகைய தீர்க்க சிந்தனை கொண்டவர் பிரமிள்.
நவீன இலக்கிய வட்டாரம் தீண்டத் தகாதவராக நினைத்த பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் பற்றியும், சரியான கணிப்பை முன்வைத்தவர்களில் முதலாமவர் பிரமிள். 'இன்றைய வக்கிரங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய நமது பிதுரார்ஜிதங்கள் முழுவதுமே விமர்சனம் செய்யப்பட வேண்டும் என்ற அக்னிப் புயலின் வீச்சு ஈ.வெ.ரா.வுடையது’ என்றவர் பிரமிள்.
40 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட பிரமிள் கட்டுரைகளை தொகுத்து இன்று படிக்கும்போது, அந்த மனிதனை நினைத்தே பிரமிப்பாக இருக்கிறது. அவரது இடத்தை இட்டு நிரப்பக்கூடிய பன்முகப் படைப்பாளி இன்னும் வரவில்லை!
- புத்தகன்