வில்லங்கச் சர்ச்சையில் சித்தார்த் மல்லையா
##~## |
இந்த ஐ.பி.எல். சீசனில் கிரிக் கெட்டை விட மற்ற விவகாரங்கள்தான் ஹாட். இதில் லேட்டஸ்ட், 'தொடக் கூடாத இடங்களில் தொட்டார். என் காதலன் முன்பாகவே என்னைக் கட்டிப்பிடித்து வலுக் கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றார்’ என்று, ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த லூக் மீது, ஜோஹல் ஹமீத் என்ற அமெரிக்கப் பெண் கொடுத்திருக்கும் புகார்.
டெல்லி டேர் டெவில் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றதால், மௌரியா ஷெரட் டன் ஓட்டலில் மது விருந்து நடத்தப்பட்டது. இந்த விருந்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய வீரரான லூக், மற்ற வீரர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அந்த விருந்தில் ஜோஹல் ஹமீத் என்ற அமெரிக்கப் பெண்ணும் காதலருடன் கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பெண் தன் காதலனோடு அதே ஹோட்டலில் இருந்த தனது அறையை நோக்கிப் போனார். அவர் களைப் பின்தொடர்ந்து சென்ற லூக், அவர்களது அறைக்குச் சென்று 'பார்ட்டி’யைத் தொடர்ந்து இருக்கிறார். மூன்று பேரும் சேர்ந்து ஷாம்பெய்ன் குடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கு ஏறிய நிலையில் லூக், காதலனுக்கு எதிரிலேயே அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சி செய்திருக்கிறார். இதைத் தடுக்க முயன்ற காதலரின் முகத்தில் குத்தி இருக்கிறார். உடனே அந்தப் பெண் போலீஸுக்குப் போகவே, லூக் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனிலும் வெளியே வந்து விட்டார்.

இந்த விவகாரத்தை, லூக் என்ற ஆஸ்திரேலியப் பையனுக்கும் ஜோஹல் என்ற அமெரிக்கப் பெண்ணுக்கும் நடந்த விவகாரம் என்று விட முடியாது. ஏனென்றால், சம்பவம் நடந்த அதே விருந்தில் கலந்து கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் 'ட்விட்டர்’ வாக்குமூலம்.
''அந்த அமெரிக்கப் பெண் சொல்வதை நம்ப முடியாது. அன்று இரவு முழுதும் விருந்தில் அவள் என் மடியில் தான் கிடந்தாள். சாட் செய்வதற்காக, என் போன் நம்பரைக் கேட்டாள். அதனால், அவள் எனது அணியைச் சேர்ந்த லூக் மீது கூறியிருக்கும் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. காதலன் என்று குறிப்பிடும் நபர் ஜோஹலின் காதலனே இல்லை'' என்று பெருமையுடன்(?) சொல்லி இருந்தார். இந்த விவகாரம்தான் இப்போது பற்றி எரிகிறது.
''பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண், போலீஸாரிடம் புகார் கொடுத்தால், உடனே அந்தப் பெண்ணின் கேரக்டரை மோசமாகச் சித்திரிப்பது மிகவும் தவறான விஷயம். இதற்காக சித்தார்த்தைக் கைது செய்ய வேண்டும்'' என்று, பெண்உரிமை அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன.
- பி.ஆரோக்கியவேல்