உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

பணம் கொடுக்கிறாரா நித்தி?

கொந்தளித்த டிராஃபிக் ராமசாமி

##~##

ஜெயிக்கப்போவதாகத் தெரியும் கட்சிக்கு, தேர்தல் நேரத்தில் லெட்டர் பேடு கட்சிகள் போட்டி போட்டு ஆதரவு கொடுப்பது வழக்கம். அதேபோன்று நித்தியானந்தாவுக்கு ஆதரவு கொடுக்க தினமும் சில அமைப்புகள் முன்வருகின்றன. அதில் ஒருவராக வந்து ஆச்சர்யப்படுத்தினார், தமிழக மனித உரிமைகள் கழக நிறுவனத் தலைவரான டிராஃபிக் ராமசாமி. ஆதரவு தெரிவித்​ததுடன் நில்லாமல், மதுரையில் நித்தியானந்தாவை, சுவாமி விவேகானந்த​​ரோடு ஒப்பிட்டுப் பேசிப் பரவசம் அடைந்தார். அவரை சந்தித்துப் பேசினோம். 

''ஆனாலும், நித்தியானந்தாவை சுவாமி விவேகானந்​​தருடன் ஒப்பிட்டது ரொம்பவும் ஓவராகத் தெரியவில்லையா?''

''விவேகானந்தருக்கு அப்புறம் இவரைத்தான் தைரியமானவராகப் பார்க்கிறேன். அதனால்​தான் தமிழகத்தில் ஒரு விவேகானந்தர் புறப்பட்டு​விட்டார்னு பேசினேன். '100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டு​கிறேன்’னு கேட்டார் விவேகானந்தர். இப்போது, ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களைக் கையில் வைத்துக்கொண்டு, உலகம் முழுவதும் இந்து மதத்​தையும், சைவ சித்தாந்தத்தையும் பரப்பி​வருகிறார் நித்தியானந்தா. நிறையவே கல்வி நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவேதான் அப்படிச் சொன்னேன்.''

பணம் கொடுக்கிறாரா நித்தி?

''நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்களைத் திட்டமிட்ட சதி என்று ஏன் சொல்கிறீர்கள்?''

''மதுரை ஆதீனத்துக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள்னு சொல்றாங்க. அந்தச் சொத்துக்களை எல்லாம் சில சுய​நலவாதிகள் ஏகபோகமாக ஆண்டு அனுபவித்து வருகிறார்கள். அந்தச் சொத்துக்களை எல்லாம் சட்டப்படி மீட்டு விடுவார் என்ற பயத்தில்தான் அவர்கள் நித்தியானந்தருக்கு எதிராகப் போராடு​கிறார்கள்.''

''அதுசரி, நித்தியானந்தாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?''

''எனக்கு கடந்த நான்கு வருடங்களாகவே அவரைத் தெரியும். அவருடைய மீட்டிங் கேட்டிருக்​கேன். என்னோட பிறந்த நாளைக்கு அவர் சார்பில் சிஷ்யக்கோடிகள் என்னைச் சந்திச்சிருக்​காங்க. மாம்பலத்தில் அவரோட தியான பீடம் அமைக்கப்பட்ட நேரத்தில், மெயின் ஸ்பீக்கரே நான்​தான்''.

''அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறதே?''

''எம்.எல்.ஏ., மந்திரிங்க மீதும்தான் பாலியல் குற்றச்சாட்டு இருக்கு. அதைவிடுங்க. அது நிரூபிக்கப் படவில்லை.''

''ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நித்தியானந்தா பணம் தருவதாகப் பேசப்படுகிறதே?''

''என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியும். என்கிட்ட நீங்க இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது. அப்படிச் சொல்றவங்களை  என்கிட்ட அனுப்புங்க, அவனை நான் பார்த்துக்கிறேன்!''

- கே.கே.மகேஷ், படம்: பா.காளிமுத்து