உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

சாட்சி சொல்ல வருகிறார் பத்மாவதி அம்மாள்?

தா.கி. கொலை வழக்கில் 'திடுக்'

##~##

தா.கிருட்டிணன் கொலைசெய்யப்​பட்டு மே 20-ம் தேதியுடன் ஒன்பதுஆண்டு​​கள் உருண்டோடி​விட்டன. 'தா.கி-யாரை நினைவு கூறுகிறோம்... அம்மா ஆட்சி​யி​லாவது நியாயத் தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்!’ என்று போஸ்டர் ஒட்டி, 'தா.கி. கொலை வழக்கில் அப்பீல் என்னாச்சு?’ என்று கேட்கிறது வீரகுல அமரன் இயக்கம். 

தா.கிருட்டிணன் கொலை வழக்கை ரீ-ஓப்பன் செய்வதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்பு​தல் கொடுத்ததைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக அதற்கான வேலைகளைச் செய்து வருகிறது அ.தி.மு.க. சட்டத்துறை. இதுதொடர்பாக, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.  வழக்கறிஞர் அணிச் செயலாளரும் அரசு வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன், மதுரையில் இருந்து சென்னைக்கும் சித்தூருக்கும் பறந்தபடி இருக்கிறார். அந்த வழக்கில் மறுவிசாரணை கேட்டு  உயர் நீதிமன்ற மதுரை கிளையிலேயே மனு போடத் தயாராகிறதாம் அ.தி.மு.க. அரசு.

சாட்சி சொல்ல வருகிறார் பத்மாவதி அம்மாள்?

அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்க மதுரை மாவட்ட இணைச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேசினோம். ''சித்தூர் கோர்ட்டில், சாட்சிகளை மிரட்டித்தான் பிறழ் சாட்சியம் சொல்ல வைத்தனர். தீர்ப்பை எதிர்த்து அப்பீலுக்குப் போனால், சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த முடியாது. ஆர்க்யூமென்ட் மட்டும்தான் செய்ய முடியும். அதனால்தான், வழக்கில் மறுவிசாரணை கேட்கப்போகிறது தமிழக அரசு.

தா.கி-யின் சொந்தபந்தங்கள் சிலரை தி.மு.க. தரப்பில் தந்திரமாய் மடக்கி விட்டார்கள். ஆனால், தா.கி-யின் மனைவி பத்மாவதி அம்மாள், மகன் தொல்காப்பியன், மகள் தேமா ஆகியோர் இன்னும்

சாட்சி சொல்ல வருகிறார் பத்மாவதி அம்மாள்?

கொதிப்பில் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் கோர்ட் படி ஏறி சாட்சி சொல்ல வராமல் இருந்தவர்களுக்கு, இப்போது அம்மா மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால், கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வருவதாக சிக்னல் கொடுத்து இருக்கிறார்கள். புதிய சாட்சிகள் சிலர் தங்களிடம் இருந்த ஆவணங்களை அம்மாவிடமே கொடுத்து இருக்கிறார்கள். அழகிரி தன்னோடு மோதியது குறித்து தா.கிருட்டிணன் தலைமைக்கு எழுதிய மூன்று கடிதங்களை பத்மாவதி அம்மாள் போலீஸில் ஒப்படைத்தார். கொலை நடப்பதற்கு முந்தைய இரவு 11 மணிக்குக் கூட அழகிரி தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்ததையும் வாக்குமூலமாகக் கொடுத்து இருந்தார்கள். ஆனால், இறுதிக் கட்ட விசாரணையில் இதை எல்லாம் மறைத்து விட்டது போலீஸ். அந்தக் கடிதங்களின் நகல்கள் பத்மாவதி அம்மாள் வசம் பத்திரமாய் இருக்கின்றன. மேலும் சில ஆதாரங்களுடனும் அவர் கோர்ட்டுக்கு வரப்போகிறார்'' என்றார்.

வீரகுல அமரன் இயக்கத்தின் ஆலோசகர் அரப்பாவிடம் பேசினோம். ''ராமஜெயம் கொலை​யை சி.பி.ஐ. விசாரிக்கணும்னு குதிக்கும் மு.க.ஸ்டாலின், தா.கி-யார் கொலை வழக்கில் அப்படிக் கேட்காதது ஏன்? இன்றைக்கு, ஊழல் வழக்கில் உள்ள கனிமொழியை வைத்துக்​கொண்டு எப்படி மத்திய அமைச்சர் அந்தோணி​யை சந்திக்கிறாரோ... அதேபோல்தான் அன்றைக்கு தா.கி. வழக்கில் ஜாமீனில் வந்திருந்த அழகிரியைப் பார்க்க, விசாரணை அதிகாரியைக் கூட்டிக்கொண்டு அழகிரியின் வீட்டுக்கே போனார் கருணாநிதி'' என்றார்.

இதன் இடையே தா.கி. கொலையைக் கண்ணால் கண்ட ஒரே சாட்சியான பிளம்பர் பிரபாகரை மிரட்டுவதற்காக அவரது மகன் கபிலன், அழகிரி தரப்பினரால் கடத்தப்பட்டதாக பேச்சு கிளம்பியது. இதுகுறித்து, பிரபாகர் முதல்வருக்கே மனு போட்டிருந்தார். போலீஸ் அதிகாரி ஒருவர் அதை ஏனோ கிடப்பில் போட்டுவிட்டாராம். இது குறித்துப் பேசிய பிரபாகர், ''போலீஸ் என்னுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கலைன்னதுமே அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வனிடம் போய் வருத்தப்பட்டேன். 'அவசரப்படாதீங்க’னு சொன்னார். இப்போ என்கிட்ட ஏகப்பட்ட டாக்குமென்ட்டுகளில் கையெழுத்து வாங்கிட்டு, ஆந்திரா கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

சாட்சி சொல்ல வருகிறார் பத்மாவதி அம்மாள்?

தா.கி. வழக்கில் மதுரையில் இருந்து சித்தூர் கோர்ட்டுக்கு சாட்சிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று வருவதற்கான அனைத்துச் செலவுகளையும் ஆந்திராவைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர்தான் ஏற்றுக்கொண்டார். அதற்கான பரிகாரமாக  மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு திட்டத்துக்கான மிகப்பெரிய கான்ட்ராக்ட் அவருக்குக் கிடைத்தது. இது சம்பந்தமாகவும் விசாரிக்க வேண்டும்'' என்றார்.

அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வனை நாம் தொடர்பு கொண்டபோது, ''என்னிடம் சில வேலைகளை ஒப்படைச்சிருக்காங்க. இப்போதைக்கு அதை வெளிப்படையாகப் பேசுவது சரியாக இருக்காது'' என்று நழுவிக்கொண்டார்.

அழகிரி தரப்பில் பேசியவர்களோ, ''அப்பீலாக இருந்தாலும் மறுவிசாரணையாக இருந்தாலும், இத்தனை நாட்களுக்குள் செய்யணும்னு ஒரு வரையறை இருக்கு. இந்த வழக்கில் அந்த கெடுவெல்லாம் கடந்து விட்டது. அண்ணன் அழகிரி உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபணம் செய்ததால்தான், சித்தூர் கோர்ட் அனைவரையும் விடுதலை செய்தது. எது நடந்தாலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இருக்கும். அதை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்வோம்'' என்கிறார்கள் தெம்பாக.

கோடை விடுமுறை முடிந்ததும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தா.கி. வழக்கு மீண்டும் தடதடக்​கலாம்!

- குள.சண்முகசுந்தரம்

  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி