திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள புத்துக்கோயில் பகுதி சாலையோரம், 45 வயது மதிக்கத்தக்க குமார் என்பவர் ‘ஸ்ரீராம்’ என்ற பெயரில் பட்டாசுக் கடை நடத்திவந்தார். இன்று காலை வழக்கம்போல கடையைத் திறந்துவைத்து அவர் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். கடைக்குள் 12 வயது சிறுவன் தயாமூர்த்தி என்பவனும் இருந்திருக்கிறான். இந்த நிலையில், சரியாக 11:50 மணியளவில், பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. கடைக்குள் இருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதால், குமாரும், சிறுவனும் வெளியே தப்பித்து வர முடியாமல் கடைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்ததும், தீயணைப்புத்துறை வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும், துரதிஷ்டவசமாக குமாரும், சிறுவனும் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அம்பலூர் காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், பட்டாசுகளை அடுக்கியபோது ஏற்பட்ட உரசல்களால், வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், இந்தத் தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. காவல்துறை உயதிகாரிகளும் நேரடியாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணைக்குப் பின்னரே விபத்துக்கான உண்மைக் காரணம் தெரியவரும் எனவும் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.