இமாச்சலப் பிரதேச மாநிலம், ஹமிர்பூரில் இருக்கும் லேம்ப்லூ என்ற இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை இருக்கிறது. அதிகாலை 3 மணிக்கு முகமூடிக் கொள்ளையர்கள் இரண்டு பேர் வங்கியின் பின்புறம் இருக்கும் சுவரில் துளையிட்டு உள்ளே சென்றனர். அவர்கள் வங்கிக்குள் சென்றதும், வங்கியிலிருந்த எச்சரிக்கை அலாரம் வங்கி அதிகாரிகளின் மொபைல் போனில் அடித்தது. உடனே வங்கி அதிகாரிகள் போலீஸாரின் துணையோடு வங்கிக்கு விரைந்து வந்தனர். அதேசமயம் வங்கிக்குள் நுழைந்த திருடர்கள் வங்கியில் பணம் எங்கிருக்கிறது என்று பார்த்தனர்.

எங்கு தேடியும் பணம் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பணம் ஒரு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. கஷ்டப்பட்டு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தும் பணம் கிடைக்காததால் கோபமடைந்த திருடர்கள் வங்கியிலிருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து கீழே போட்டு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். போலீஸாருடன் வந்த வங்கி அதிகாரிகள் வங்கிக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்தனர். உடனே இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது வங்கியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட முக்கியமான ஆவணங்கள் தீயில் எரிந்து போயிருந்தது.
வங்கிக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வுசெய்தபோதுதான் முகமூடித் திருடர்கள் வங்கிக்குள் வந்து திருட முயன்றது தெரியவந்தது என்று போலீஸ் அதிகாரி சஞ்ஜீவ் கவுதம் தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர், ``தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்து விசாரணை நடத்திவருகிறோம். வங்கியில் பணம் பத்திரமாக இருக்கிறது. பணம் கிடைக்காத கோபத்தில் ஆவணங்களை எரித்துவிட்டுச் சென்றுவிட்டனர்'' என்று தெரிவித்தார்.